Published : 07 May 2021 10:16 AM
Last Updated : 07 May 2021 10:16 AM
கடந்த பிப்ரவரி மத்தியில் இந்தியாவில் தொடங்கிய கரோனா 2-வது அலை தீவிரமடைந்து வருகிறது. கடந்த ஏப்ரல் இறுதியில் இருந்து நாள்தோறும் 3.5 லட்சத்துக்கும் மேற்பட்டோருக்கு கரோனா தொற்று ஏற்பட்டு வருகிறது. மே 1-ம் தேதி நாட்டில் முதல்முறையாக தினசரி தொற்று 4 லட்சத்தை தாண்டியது.
மத்திய சுகாதாரத் துறையின் நேற்றைய புள்ளிவிவரத்தின்படி ஒரே நாளில் 4,12,262 பேருக்கு கரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. இது இந்தியாவில் பதிவான அதிகபட்ச தினசரி தொற்றாகும். இதுவரை 2.10 கோடி பேர் வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
கரோனா இரண்டாவது அலையைக் கட்டுப்படுத்த நாடு முழுவதும் பல்வேறு மாநிலங்களில் ஊரடங்கு கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட்டு வருகிறது. திரையரங்குகள் மற்றும் படப்பிடிப்புப் பணிகளுக்கு கடுமையான கட்டுப்பாடுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. இதனால் சினிமாவில் பணிபுரியும் தினக்கூலி தொழிலாளர்கள் கடுமையான முறையில் பாதிக்கப்படும் நிலை ஏற்பட்டுள்ளது.
கடந்த ஆண்டு பொது முடக்கத்தின் போது பிரபல பாலிவுட் தயாரிப்பு நிறுவனமான யாஷ் ராஜ் பிலிம்ஸ் நிறுவனத்தின் தலைவர் ஆதித்யா சோப்ரா சினிமா தொழிலாளர்களின் வங்கிக் கணக்கில் நேரடியாக பணம் செலுத்தியும், ஏராளமான உதவிகளையும் செய்தார்.
அதே போல இந்த ஆண்டும் யாஷ் சோப்ரா அறக்கட்டளை சார்பாக சினிமா தொழிலாளர்களுக்கு உதவும் பொருட்டு ஒரு திட்டத்தை ஆதித்யா சோப்ரா அறிவித்துள்ளார். இத்திட்டத்தின் மூலம் தினக்கூலி பணியாளர்களுக்கு ரூ.5000 மற்றும் அவர்களின் குடும்பத்துக்கு தேவையான ரேஷன் பொருட்களையும் வழங்கவுள்ளார்.
இது குறித்து யாஷ் ராஜ் பிலிம்ஸ் துணைத் தலைவர் அக்ஷய் விதானி கூறும்போது, ‘கடந்த 50 ஆண்டு காலமான பாலிவுட் சினிமாவின் தவிர்க்கமுடியாத அங்கமாக யாஷ் ராஜ் பிலிம்ஸ் இருந்து வருகிறது. இந்த பெருந்தொற்று பாலிவுட் சினிமாவின் முதுகெலும்பான தினக்கூலி பணியாளர்களுக்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. வாழ்வாதாரத்தை இழந்த பணியாளர்களுக்கும் அவர்களின் குடும்பத்துக்கும் உதவ யாஷ் ராஜ் பிலிம்ஸ் விரும்புகிறது. இந்த தொற்று காலத்தில் அவர்களுக்கு உதவுவதே இத்திட்டத்தின் நோக்கம்’ என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT