Published : 23 Mar 2021 06:14 PM
Last Updated : 23 Mar 2021 06:14 PM
தன்னை டைகர் ஷெராஃபின் தந்தை என்று அழைப்பது பெருமையாக இருக்கிறது என்று பிரபல பாலிவுட் நடிகர் ஜாக்கி ஷெராஃப் கூறியுள்ளார்.
"நான் என் மகனை நினைத்துப் பெருமைப்படுகிறேன். ஏன், என் உடல்நலனை நன்றாகப் பேண வேண்டும் என்பதற்கு எனக்கு மிகப்பெரிய உந்துதலாக இருப்பது என் மகன்தான். பல குழந்தைகள், தாங்கள் வலிமையுடன் இருக்க வேண்டும் என்பதை என் மகனைப் பார்த்துக் கற்றுக் கொள்கின்றனர். எனக்கு மகிழ்ச்சியாக இருக்கிறது.
கடவுள் என்னிடம் கனிவாக இருந்துள்ளார். என் மகனை விரும்பும் மக்கள் கனிவானவர்கள். எனது வாழ்க்கையிலும், தொழிலிலும் எனக்கொரு ஊக்கம் கிடைத்துள்ளது. டைகரின் தந்தை என்று என்னை அழைக்கிறார்கள். இதனால் என் மகனை நினைத்து எனக்குப் பெருமையாக உள்ளது. உண்மையைத்தான் சொல்கிறேன். என் மகனுக்குப் பல குழந்தைகள் ரசிகர்களாக இருக்கின்றனர். அவர்கள் என்னை அப்படித்தான் அடையாளப்படுத்துகின்றனர்" என்று ஜாக்கி ஷெராஃப் கூறியுள்ளார்.
அடுத்ததாக, ஓகே கம்ப்யூட்டர் என்கிற வெப் சீரிஸில் ஜாக்கி ஷெராஃப் நடிக்கவிருக்கிறார். அதிகரித்து வரும் தொழில்நுட்பப் பயன்பாடு குறித்துப் பேசியிருக்கும் ஜாக்கி ஷெராஃப், "ஒருவரை ஒருவர் கண் பார்த்துப் பேசுவது தொலைந்து போய்விட்டது. பெரும்பான்மையான நேரம் நமது லேப்டாப்களைப் பார்த்துக் கொண்டிருக்கிறோம். அதில் அத்தனை தகவல்களும் எளிதாகக் கிடைக்கின்றன. இரண்டும் இரண்டும் எவ்வளவு என்கிற அடிப்படைக் கணக்கைக் கூட மக்கள் மறந்துவிட்டனர். இன்னொரு பக்கம் செவ்வாய் கிரகத்துக்குக் குறைந்த செலவில் செல்ல தொழில்நுட்பம் உதவியிருக்கிறது" என்று கிண்டலாகக் கூறியுள்ளார்.
ஓடிடி வரவு குறித்துக் கேட்டபோது, என்ன வகையான பொழுதுபோக்காக இருந்தாலும் அதற்கென ரசிகர்கள் இருப்பார்கள். அது வீதி நாடகமோ, ஓடிடியோ, திரையரங்கோ, எல்லாவற்றையும் ரசிப்பார்கள் என்று ஜாக்கி ஷெராஃப் கூறியுள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT