Published : 08 Mar 2021 07:05 PM
Last Updated : 08 Mar 2021 07:05 PM
கடந்த வருடம் காணாமல் போன குழந்தைகளை மீட்டு கவனம் ஈர்த்த டெல்லி காவல்துறை அதிகாரி சீமா தாகாவைப் பற்றிய வெப் சீரிஸ் உருவாகிறது. சர்வதேச பெண்கள் தினமான இன்று (மார்ச் 8) இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.
கடந்த வருடம் சமயபூர் பத்லி காவல் நிலையத்தைச் சேர்ந்த தலைமை கான்ஸ்டபிளான சீமா தாகா, காணாமல் போன 76 குழந்தைகளை மூன்று மாத காலத்துக்குள் மீட்டார். இதனால் அவருக்குத் துணை ஆய்வாளர் பதவி உயர்வு கிடைத்தது. தொடர்ந்து சீமா குறித்து தேசிய அளவில் முக்கிய ஊடகங்கள் அனைத்திலும் செய்திகள் வெளியாகின.
தற்போது சீமாவின் இந்தச் சாதனை பற்றிய புதிய வெப் சீரிஸ் உருவாகிறது. இதுகுறித்துப் பதிவிட்டிருக்கும் பாலிவுட் வர்த்தக நிபுணர் கோமல் நாதா, "சீமா தாகாவைப் பற்றிய வெப் சீரிஸை உருவாக்க அவரது கதைக்கான உரிமைகளை அப்ஸல்யூட் பின்ஜ் என்டர்டெய்ன்மென்ட் நிறுவனம் கைப்பற்றியுள்ளது. 3 மாதங்களில் 76 காணாமல் போன குழந்தைகளை மீட்டதால், பதவி உயர்வுக்கான அவரது முறை வரவில்லையென்றாலும் பதவி உயர்வு தரப்பட்ட முதல் டெல்லி காவல்துறை அதிகாரி சீமாதான்" என்று ட்வீட் செய்துள்ளார்.
சீமா மீட்ட 76 குழந்தைகளில் 56 பேர் 14 வயதுக்குக் கீழ் இருந்தவர்கள். டெல்லி மட்டுமல்லாது பஞ்சாப், மேற்கு வங்கம் உள்ளிட்ட மற்ற மாநிலங்களிலிருந்தும் சீமா குழந்தைகளை மீட்டார். 20 வயதில் காவல்துறையில் பணிபுரிய ஆரம்பித்த சீமா, அவரது கல்லூரியிலிருந்து தேர்வாகி, நேர்காணலின் மூலம் வேலை கிடைத்த ஒரே நபராவார். சீமாவின் கணவரும் காவல் துறை அதிகாரியாகப் பணியாற்றி வருகிறார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT