Published : 22 Feb 2021 07:03 PM
Last Updated : 22 Feb 2021 07:03 PM
விஜய் நடிப்பில் வெளியான 'மாஸ்டர்' திரைப்படம் ரசிகர்களைத் திரையரங்குக்கு வரச் செய்த பெரிய திரைப்படம் என்றும், அப்படி ஒரு படம் பாலிவுட்டிலும் வர வேண்டும் என்றும் இயக்குநர் அனுராக் பாசு கூறியுள்ளார்.
'மர்டர்', 'கேங்ஸ்டர்', 'பர்ஃபி', 'கைட்ஸ்' உள்ளிட்ட திரைப்படங்களின் இயக்குநர் அனுராக் பாசு. சமீபத்தில் இவர் இயக்கிய 'லூடோ' திரைப்படம் ஓடிடி தளத்தில் வெளியானது. வரும் பிப்ரவரி 28ஆம் தேதி இந்தப் படம் தொலைக்காட்சியில் திரையிடப்படவுள்ளது.
இதையொட்டி ஐஏஎன்எஸ் செய்தி நிறுவனத்துக்கு அவர் அளித்துள்ள பேட்டியில், "படைப்பாற்றல் சுதந்திரத்துக்கும் அதைத் தவறாகப் பயன்படுத்துவதற்கும் இடையே ஒரு மெல்லிய கோடு இருக்கிறது. ஓடிடியிலும் அது இருக்கிறது. பேச்சு சுதந்திரத்தை முடிந்தவரை சிறப்பான வழிகளில், தனித்துவமான கதைகளைச் சொல்ல இயக்குநர்கள் பயன்படுத்திப் பார்க்க வேண்டும்.
பல இயக்குநர்கள் மிகப்பெரிய, துணிச்சலான விஷயங்களைப் பெரிய திரையில் கையாண்டிருக்கின்றனர். எனது திரைப்படம் 'லூடோ'வும் அப்படித்தான். முதலில் பெரிய திரைக்காகத் திட்டமிட்டிருந்தோம். ஆனால், முடியவில்லை.
சினிமா என்பது ஒரு சமூக அனுபவம். முழு வீச்சில் திரையரங்குகள் இயங்க ஆரம்பித்த பிறகு கண்டிப்பாக ரசிகர்கள் மீண்டும் திரையரங்குக்கு வருவார்கள் என்பது எனக்குத் தெரியும். மீண்டும் அவர்களை வரவழைக்கும் அந்த ஒரு படம் நமக்குத் தேவை. தெற்கில் விஜய் நடித்திருக்கும் 'மாஸ்டர்' மூலம் அது ஏற்கெனவே ஆரம்பமாகிவிட்டது. விரைவில் பாலிவுட்டிலும் அப்படி ஒரு படம் வரும். ஒரு பெரிய வெளியீடு நிலையை மாற்றும்" என்று பேசியுள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT