Published : 09 Feb 2021 03:23 PM
Last Updated : 09 Feb 2021 03:23 PM
நடிகரும் இயக்குநருமான ராஜீவ் கபூர் காலமானார். அவருக்கு வயது 58.
பிரபல பாலிவுட் நடிகர் ராஜ் கபூரின் மகன்களில் ஒருவரான ராஜீவ் கபூர் மும்பையில் இன்று காலமானார். மறைந்த நடிகர் ரிஷி கபூரின் மனைவி நீது கபூர் இந்தச் செய்தியை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் உறுதி செய்தார். தனது கணவரின் சகோதரர் புகைப்படத்தைப் பகிர்ந்து, அவரது ஆன்மா சாந்தியடையட்டும் என்று நீது பகிர்ந்துள்ளார்.
ராஜீவ் கபூரின் மரணத்துக்கான காரணம் இன்னும் தெரிவிக்கப்படவில்லை.
1983ஆம் ஆண்டு, 'ஏக் ஜான் ஹைன் ஹம்' என்கிற படத்தின் மூலம் நடிகராக அறிமுகமானார் ராஜீவ். 1985ஆம் ஆண்டு 'ராம் தேரி கங்கா மைலி' திரைப்படத்தில் நாயகன் ஆனார். இது ராஜ் கபூர் இயக்கிய கடைசித் திரைப்படம். இதன்பின் 'ஆஸ்மான்', 'லவ்வர் பாய்', 'ஜபர்தஸ்த்', 'ஹம் தோ சலே பர்தேஸ்' உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்தார்.
கடைசியாக 90களில் 'ஜிம்மேதார்' என்கிற திரைப்படத்தில் நாயகனாக நடித்த ராஜீவ் அதன் பிறகு தயாரிப்பு, இயக்கம் பக்கம் சென்றுவிட்டார். 'என்னா' என்கிற திரைப்படத்தை தனது மூத்த சகோதரர் ரந்தீர் கபூருடன் சேர்ந்து தயாரித்தார். இதில் மற்றொரு மூத்த சகோதரர் ரிஷி கபூர் நடித்திருந்தார்.
1996ஆம் ஆண்டு 'ப்ரேம் க்ரந்த்' என்கிற திரைப்படத்தின் மூலம் ராஜீவ் இயக்குநராக அறிமுகமானார். இதிலும் ரிஷி கபூர் நடித்திருந்தார். ராஜ் கபூரின் பிள்ளைகளில் ராஜீவ் கபூரே இளையவர். கடந்த வருடம் ஜனவரி மாதம் ராஜீவ் கபூரின் மூத்த சகோதரி ரீது நந்தாவும், ஏப்ரல் மாதம் சகோதரர் ரிஷி கபூரும் காலமானது நினைவுகூரத்தக்கது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT
Be the first person to comment