Published : 15 Dec 2020 11:41 AM
Last Updated : 15 Dec 2020 11:41 AM
நடிகை கங்கணா ரணவத்துக்கு எதிரான நடிகர் ஹ்ரித்திக் ரோஷனின் புகார் சைபர் செல் பிரிவிலிருந்து குற்றப் புலனாய்வுப் பிரிவுக்கு மாற்றப்பட்டது குறித்து கங்கணா ட்வீட் செய்துள்ளார்.
2013ஆம் ஆண்டிலிருந்து 2014 வரை கங்கணாவின் மின்னஞ்சல் முகவரியிலிருந்து தனக்கு எண்ணற்ற மின்னஞ்சல்கள் வந்ததாக, அதனால் தான் மனதளவில் பாதிக்கப்பட்டதாக நடிகர் ஹ்ரித்திக் ரோஷன் புகாரளித்திருந்தார். 2016ஆம் ஆண்டு இந்த வழக்குப் பதிவு செய்யப்பட்டது.
முன்னதாக 'கிருஷ் 3' படப்பிடிப்பின் போது கங்கணாவும் - ஹ்ரித்திக்கும் காதலித்ததாகவும், பின் பிரிந்ததாகவும் கிசுகிசுக்கள் எழுந்தன. இருவரும் இது பற்றிப் பொதுவில் எதுவும் பேசிக் கொள்ளவில்லை. ஆனால் ஒரு பேட்டியில் கங்கணா ரணவத் ஹ்ரித்திக்கைப் பற்றிப் பேசும்போது புத்திகெட்ட முன்னாள் காதலர் என்று குறிப்பிட்டார்.
கங்கணாவைத் தான் எப்போதும் காதலிக்கவில்லை என்று கூறிய ஹ்ரித்திக் கங்கணா மன்னிப்பு கேட்டு, தாங்கள் காதலிக்கவில்லை என்பதை பத்திரிகையாளர் முன் தெளிவுபடுத்த வேண்டும் என்று நோட்டீஸ் அனுப்பினார்.
தான் ஒன்றும் அறிவு மங்கிய பதின்ம வயதுப் பெண் இல்லை என்றும், மன்னிப்புக் கேட்க முடியாது என்றும், ஹ்ரித்திக் தனது நோட்டீஸைத் திரும்பப் பெறவில்லையென்றால் அவர் மீது க்ரிமினல் வழக்குத் தொடருவேன் என்றும் கங்கணா தரப்பிலிருந்து பதிலுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டது.
இப்படித் தொடர்ந்து இந்தப் பிரச்சினை ஹ்ரித்திக் மின்னஞ்சல் விவகாரத்தால் பெருசானது. தான் ஹ்ரித்திக்குக்கு எந்த மின்னஞ்சலும் அனுப்பவில்லை, தனது முகவரி ஹேக் செய்யப்பட்டு, ஹ்ரித்திக் தனக்கு அனுப்பிய மின்னஞ்சல்களை ஹ்ரித்திக்கே நீக்கிவிட்டார் என்று கங்கணா குற்றச்சாட்டை முன் வைத்தார்.
இந்த வழக்கை சைபர் செல் பிரிவு விசாரிக்க ஆரம்பித்தனர். ஆனால் கடந்த 4 ஆண்டுகளாக இந்த வழக்கில் எந்த முன்னேற்றமும் இல்லை என்று ஹ்ரித்திக்கின் வழக்கறிஞர் சமீபத்தில் மும்பை காவல்துறைக்குக் கடிதம் எழுதியிருந்தார். எனவே தற்போது இந்த வழக்கைக் குற்றப் புலனாய்வுப் பிரிவு காவல்துறை விசாரிக்கும் என்று தெரிவிக்கப்பட்டுல்லது.
இந்த செய்தியைப் பகிர்ந்திருக்கும் கங்கணா, "இதோ மீண்டும் அழத் தொடங்கிவிட்டார். காதல் முறிவு, திருமண முறிவு ஏற்பட்டப் பல வருடங்கள் கழித்தும் அவர் இதைக் கடந்து போக மறுக்கிறார். எந்தப் பெண்ணையும் பார்க்க மறுக்கிறார். நான் எனது தனிப்பட்ட வாழ்க்கையில் தைரியத்தை வரவழைத்துக் கொண்டு நம்பிக்கை கிடைக்கும் போது மீண்டும் அதே நாடகத்தை ஹ்ரித்திக் ஆரம்பிக்கிறார். இந்தச் சின்ன விஷயம் குறித்து அழுவதை எப்போது நிறுத்தப் போகிறீர்கள்?" என்று ட்வீட் செய்துள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT
Loading comments...