Published : 10 Dec 2020 12:10 PM
Last Updated : 10 Dec 2020 12:10 PM
நடிகர் சோனு சூட், தனது நலத்திட்ட உதவிகளுக்கு நிதி சேர்க்க தனது சொத்துகளை அடமானம் வைத்திருப்பது தற்போது தெரியவந்துள்ளது.
ஊரடங்கு காலத்தில் வெளி மாநிலங்களில் சிக்கித் தவித்த தொழிலாளர்கள் வீடு திரும்புவதற்கான போக்குவரத்து வசதிகளை நடிகர் சோனு சூட் இலவசமாக ஏற்பாடு செய்து தந்தார். பேருந்து மட்டுமின்றி, சிலரைத் தனி விமானம் மூலமாகவும் அவரவர் ஊருக்கு அனுப்பி வைத்தார். விவசாயிக்கு டிராக்டர், ஸ்பெயினில் சிக்கியிருந்த சென்னை மாணவர்கள் வீடு திரும்ப விமான வசதி, பொருளாதார ரீதியில் கஷ்டப்படும் மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை, கிராமத்தில் மாணவர்களுக்கு ஒழுங்காக சிக்னல் கிடைக்க மொபைல் டவர் அமைத்தது என எண்ணற்ற உதவிகளை சோனு சூட் செய்து வருகிறார்.
சோனு சூட்டின் நல உதவிகளை திரை நட்சத்திரங்கள், பிரபலங்கள், அரசியல்வாதிகள் எனப் பலரும் தொடர்ந்து பாராட்டி வருகின்றனர். மேலும் அவரை பஞ்சாபின் அடையாளம் என்று இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்து கவுரவித்தது.
இந்நிலையில், சோனு சூட் நல உதவிகள் செய்ய தனது 8 சொத்துகளை வங்கியில் அடமானம் வைத்து ரூ.10 கோடி கடன் வாங்கியிருப்பது தற்போது தெரியவந்துள்ளது. மனீ கண்ட்ரோல் என்கிற இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ள செய்தியில், மும்பை ஜூஹு பகுதியில் இருக்கும் 2 கடைகள் மற்றும் 6 வீடுகளை சோனு சூட் வங்கியில் அடமானம் வைத்து ரூ.10 கோடி கடன் பெற்றதாகக் கூறப்பட்டுள்ளது. இந்தக் கடனுக்காக ரூ. 5 லட்சம் பதிவுக் கட்டணத்தையும் செலுத்தியுள்ளார்.
தான் செய்த உதவிகளுக்குத் தொடர்ந்து பாராட்டுகளை பெற்று வரும் சோனு சூட்டுக்கு, இந்தச் செய்தியால் சமூக வலைதளங்களில் இன்னும் புகழ் அதிகரித்துள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT