Published : 31 Oct 2020 11:58 AM
Last Updated : 31 Oct 2020 11:58 AM
மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் சௌமித்ர சாட்டர்ஜியின் உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்
சத்யஜித் ரேவின் இயக்கத்தில் அறிமுகமாகி, அவரது 14 படங்களில் நடித்தவர் சௌமித்ர சாட்டர்ஜி. வங்காளத்தில் மிகவும் கொண்டாடப்படும் நடிகர்களில் ஒருவர். மிருணாள் சென் உள்ளிட்ட இன்னும் பல பிரபல இயக்குநர்களின் திரைப்படங்களில் சாட்டர்ஜி நடித்துள்ளார். கடைசியாகக் கடந்த ஆண்டு வெளியான 'சன்ஜ்பாதி' திரைப்படத்தில் நடித்திருந்தார்.
தற்போது 85 வயதாகும் சாட்டர்ஜி, சிறந்த நடிகருக்கான தேசிய விருதோடு சேர்த்து பத்ம பூஷண், தாதா சாகேப் பால்கே விருதுகளையும் வென்றவர். கடந்த அக். 6 ஆம் தேதியன்று லேசான கரோனா அறிகுறிகளுடன் கொல்கத்தாவில் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இதனைத் தொடர்ந்து கடந்த சில தினங்களுக்கு முன்பு சௌமித்ர சாட்டர்ஜியின் உடல்நிலை மோசமானதால் அவர் தீவிர சிகிச்சைப் பிரிவுக்கு மாற்றப்பட்டார்.
கடந்த இரு தினங்களுக்கு முன்பு சௌமித்ர சாட்டர்ஜியின் உடல்நிலை மேலும் கவலைக்கிடமாக மாறியுள்ளதாகவும், சிகிச்சை எதற்கும் அவரது உடல் ஒத்துழைக்கவில்லை என்றும் மருத்துவர்கள் கூறியிருந்தனர்.
இந்நிலையில் அவரது உடல்நிலையில் சிறிய முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாக நேற்று மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
மேலும், அவரது உடலில் ரத்த அணுக்களின் அளவும் சற்று அதிகரிப்பதாகவும், மருந்துகளுக்கு அவரது உடல் ஒத்துழைக்கத் தொடங்கியுள்ளதாகவும் மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். எனினும் அவர் இன்னும் அபாயக் கட்டத்தை முழுமையாகத் தாண்டவில்லை என்று மருத்துவர்கள் கூறியுள்ளனர்.
சமூக ஊடகங்களில் பல நட்சத்திரங்கள் சாட்டர்ஜி விரைவில் நலம் பெற வேண்டும் என்று பதிவிட்டு வருகின்றனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT