Published : 28 Oct 2020 04:22 PM
Last Updated : 28 Oct 2020 04:22 PM
கோவிட்-19 தொற்று காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கும் மூத்த வங்காள நடிகர் சௌமித்ர சாட்டர்ஜியின் உடல்நிலை இன்னும் கவலைக்கிடமாக மாறியுள்ளதாகவும், சிகிச்சை எதற்கும் அவரது உடல் ஒத்துழைக்கவில்லை என்றும் மருத்துவர்கள் கூறியுள்ளனர்.
கடந்த 22 நாட்களாக சிகிச்சையில் இருந்து வரும் சாட்டர்ஜி செயற்கை சுவாச உதவியுடன் இருந்து வருகிறார். இரண்டாம் நிலை நிமோனியா காய்ச்சல் பாதிப்போடு அவரது சிறுநீரகங்களும் தற்போது செயலற்றுப் போயுள்ளன. நரம்பியல் செயல்பாடும் கடுமையாகப் பாதிக்கப்பட்டிருக்கிறது.
திங்கட்கிழமை அன்று அவரது சுவாசப் பாதையைப் பாதுகாக்க அவருக்கு மூச்சுக்குழலில் குழாய் செலுத்தப்பட்டு செயற்கை சுவாச உதவி தரப்பட்டது. அவரது ரத்தத்தில் ஹீமோகுளோபின் மற்றும் ப்ளேட்லெட்களின் அளவு குறைந்துள்ளது.
"சாட்டர்ஜி மிகக் குறைந்த அளவு விழிப்புடன் உள்ளார். அவருக்குப் பிராண வாயு உதவியும், உடல் நீரிழப்புக்கான சிகிச்சையும் தரப்பட்டு வருகிறது. அவரது யூரியா மற்றும் க்ரியாடனின் அளவுகள் அதிகமாகியுள்ளன. சிறுநீரகங்கள் சரியாக வேலை செய்யவில்லை. சிகிச்சைகளுக்கு எந்தப் பலனும் இல்லை. அவரது ஒட்டுமொத்த உடல்நிலை மோசமாகியுள்ளது. மிகவும் கவலைக்கிடமான நிலையில் உள்ளார்" என மூத்த மருத்துவர் கூறியுள்ளார்.
பழம்பெரும் நடிகரான சாட்டர்ஜி ஃபிரான்ஸ் நாட்டின் மிக உயரிய சிவிலியன் விருதைப் பெற்ற ஒரு இந்தியத் திரை ஆளுமை என்பது குறிப்பிடத்தக்கது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT