Published : 30 Sep 2020 01:53 PM
Last Updated : 30 Sep 2020 01:53 PM
படக்குழுவினர் அனைவருக்கும் கரோனா பரிசோதனை உள்ளிட்ட பல்வேறு முன்னேற்பாடுகளுடன் 'ராதே' படப்பிடிப்பு தொடங்கவுள்ளது.
கரோனா நெருக்கடி காரணமாக கடந்த சில மாதங்கள் திரைப்படப் படப்பிடிப்பு உள்ளிட்ட மக்கள் அதிகம் கூடும் பல வேலைகளுக்குத் தடை இருந்தன. இந்தத் தடைகள் கொஞ்சம் கொஞ்சமாக விலக்கப்பட்டு முதலில் சின்னதிரை தயாரிப்புகளின் படப்பிடிப்புக்கு அனுமதி வழங்கப்பட்டது. தற்போது குறிப்பிட்ட விதிமுறைகளைக் கண்டிப்பாகப் பின்பற்றி திரைப்படப் படப்பிடிப்பு நடத்தலாம் என்று அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
தொடர்ந்து பல்வேறு திரைப்படங்களின் படப்பிடிப்புகளும் விட்ட இடத்திலிருந்து தொடர ஆரம்பித்தன. சல்மான் நடித்து வரும் 'ராதே' படத்தின் படப்பிடிப்பும் தற்போது தொடங்கவுள்ளது. இந்தப் படப்பிடிப்பில் சண்டைக் காட்சி ஒன்று படமாக்கப்படவுள்ளதாகவும், இதை சென்னையிலிருந்து ஒரு சண்டைப் பயிற்சி இயக்குநர்தான் இயக்கவுள்ளார் என்றும் பாலிவுட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
அரசின் விதிமுறைகளைப் பின்பற்றி, 15 நாட்கள் படப்பிடிப்பு நடக்கும் என்று தெரிகிறது. மீதமுள்ள படப்பிடிப்பு மும்பையின் மெஹபூபா ஸ்டுடியோவில் நடக்கத் திட்டமிடப்பட்டுள்ளது.
தற்போதைய படப்பிடிப்பில் குழுவினர் அதிக தூரப் பயணத்தைத் தவிர்க்க, அவர்களுக்காக ஸ்டுடியோவுக்குப் பக்கத்தில் இருக்கும் தங்கும் விடுதிகளில் அறைகள் ஒதுக்கப்பட்டுள்ளன. படக்குழுவினர் அனைவருக்கும் கோவிட்-19 பரிசோதனை எடுக்கப்பட்டு யாருக்கும் தொற்று இல்லை என்று உறுதி செய்யப்பட்டுள்ளது. தொடர்ந்து இரண்டாம் கட்டப் பரிசோதனையும் நடைபெறவுள்ளது.
மேலும், இந்தக் குழுவுக்கென தனி ஆம்புலன்ஸ், மருத்துவர்கள் குழுவும் நியமிக்கப்பட்டுள்ளது. குழுவினரை வழிநடத்த, சுகாதாரம் பேண பணியாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். இதுகுறித்து படத்தின் தயாரிப்பாளர் சொஹைல் கானும், இணை தயாரிப்பாளர் அதுல் அக்னிஹோத்ரியும் உறுதி செய்துள்ளனர்.
திஷா படானி, ரந்தீப் ஹூடா, ஹாக்கி ஷெராஃப், தமிழ் நடிகர் பரத் ஆகியோரும் இந்தத் திரைப்படத்தில் நடிக்கின்றனர். 2009 ஆம் ஆண்டு வெளியான 'வாண்டட்' ('போக்கிரி') திரைப்படத்தின் அடுத்த பாகமாக எடுக்கப்படும் இந்தத் திரைப்படம், 'வெடரன்' என்கிற தென்கொரியப் படத்தின் அதிகாரபூர்வ ரீமேக் ஆகும்
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT