Published : 25 Sep 2020 06:41 AM
Last Updated : 25 Sep 2020 06:41 AM
பாலிவுட் நடிகர் சுஷாந்த் சிங் மரணம் தொடர்பாக சிபிஐ மேற்கொண்ட விசாரணையில், அவரது காதலியும் நடிகையுமான ரியா சக்கரவர்த்திக்கு போதைப் பொருள் விற்பனை கும்பலுடன் தொடர்பு இருந்தது தெரிய வந்தது.
இந்த விவகாரம் குறித்து மத்திய போதைப் பொருள் தடுப்புப் பிரிவு (என்சிபி) தனியாக வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தியது. இதில், ரியா சக்கரவர்த்தி, அவரது சகோதரர் ஷோவிக் உட்பட 12-க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டிருக்கின்றனர்.
இவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையின் அடிப்படையில், பிரபல பாலிவுட் நடிகைகளான தீபிகா படுகோன், சாரா அலி கான், ஷ்ரதா கபூர், ரகுல் ப்ரீத் ஆகியோருக்கு போதைப் பொருள் தடுப்பு பிரிவு நேற்று முன்தினம் சம்மன் அனுப்பியது.
பாலிவுட் நடிகை ஷெர்லின் சோப்ரா, தொலைக்காட்சிக்கு நேற்று அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது:
சில ஆண்டுகளுக்கு முன்பு கொல்கத்தாவில் நடைபெற்ற ஐபிஎல் கிரிக்கெட் போட்டியை காண சென்றிருந்தேன். போட்டி முடிந்த பின்னர், அங்கு நடைபெற்ற விருந்து நிகழ்ச்சிக்கு எனக்கு அழைப்பு விடுக்கப்பட்டது. அந்த விருந்தில் பிரபல கிரிக்கெட் வீரர்கள் தங்கள் மனைவிகளுடன் கலந்து கொண்டனர்.
விருந்துக்கு நடுவே, அங்கிருந்த குளியலறைக்கு நான் சென்றேன். அப்போது, கிரிக்கெட் வீரர்களின் மனைவிகள் ‘கொக்கைன்’ எனப்படும் போதைப் பொருளை பயன்படுத்திக் கொண்டிருந்தனர்.
இந்த விவகாரம் தொடர்பாக போதைப் பொருள் தடுப்பு பிரிவு எனக்கு சம்மன் அனுப்பினால், அவர்களுக்கு உதவ நான் தயாராக இருக்கிறேன்.
இவ்வாறு ஷெர்லின் கூறினார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT