Published : 22 Sep 2020 06:44 PM
Last Updated : 22 Sep 2020 06:44 PM
பாலிவுட் நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத்தின் மரணத்தில் போதை மருந்து சம்பந்தப்பட்டிருக்கலாம் என்ற கோணத்தில் விசாரித்து வரும் போதை மருந்து தடுப்புப் பிரிவு போலீஸார், பாலிவுட் நடிகை தீபிகா படுகோனின் மேலாளர் கரிஷ்மா பிரகாஷுக்கு சம்மன் அனுப்பியுள்ளனர்.
மேலும், க்வான் திறன் மேலாண்மை நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரி த்ருவ் சிட்கோபேகர் என்பவரையும் போலீஸார் விசாரிக்கவுள்ளனர். இந்நிறுவனத்தில்தான் கரிஷ்மாவும் பணியாற்றி வருகிறார்.
போதை மருந்து தொடர்பாக நடந்த வாட்ஸ் அப் உரையாடல் ஒன்று சமீபத்தில் வெளியானது. இதில் இந்த இருவரின் பெயர்களும் சம்பந்தப்பட்டுள்ளதால் விசாரணைக்கு அழைக்கப்பட்டுள்ளதாக அதிகாரி ஒருவர் கூறியுள்ளார்.
முன்னதாக, இதே வழக்கு விசாரணையில் நடிகைகள் சாரா அலி கான், ஷ்ரத்தா கபூர், ரகுல் ப்ரீத் சிங், ஃபேஷன் டிசைனர் சிமோன் கம்பட்டா ஆகியோருக்கு சம்மன் அனுப்பப்பட்டிருந்தது.
சுஷாந்தின் முன்னாள் மேலாளர் ஷ்ருதி மோடி, திறன் மேலாளர் ஜெயா ஷா ஆகியோரிடம் மேற்கொண்டு விசாரணை நடத்த மீண்டும் சம்மன் அனுப்பப்பட்டுள்ளது. இவர்கள் இருவரிடமும் திங்கட்கிழமை ஐந்து மணி நேரம் விசாரணை நடந்தது குறிப்பிடத்தக்கது.
சுஷாந்தின் காதலி ரியா, ரியாவின் சகோதரர் ஷௌவிக், சுஷாந்தின் வீட்டு மேலாளர் சாமுயல் மிரண்டா, தனிப்பட்ட உதவியாளர் திபேஷ் சாவன் உள்ளிட்ட 15 பேரை போதை மருந்து தடுப்புப் பிரிவு போலீஸார் இந்த வழக்கில் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.
இந்த விசாரணையில் வெளிவந்துள்ள புதிய தகவல்களை வைத்து, ஷௌவிக் மற்றும் சாவந்த் ஆகியோரிடம் மேற்கொண்டு விசாரிக்க போதை மருந்து தடுப்புப் பிரிவு போலீஸார் நீதிமன்றத்தில் கோருவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ஜூன் 14 அன்று சுஷாந்த் சிங் ராஜ்புத் தற்கொலை செய்துகொண்டார். இந்த மரணத்தில் சந்தேகம் இருப்பதாக சுஷாந்தின் குடும்பத்தினர் புகார் அளித்ததையடுத்து சிபிஐ, அமலாக்கப் பிரிவினர், போதை மருந்து தடுப்புப் பிரிவு போலீஸார் என விசாரணை நடத்தி வருகின்றனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT