Published : 04 Sep 2020 02:31 PM
Last Updated : 04 Sep 2020 02:31 PM
கடந்த ஜூன் மாதம் தனது இல்லத்தில் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டார் இளம் நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத். அவரது தற்கொலைக்கு மன அழுத்தமே காரணம் என்று கூறப்பட்டாலும், ரியா சக்ரபர்த்தியும் அவரது குடும்பத்தினரும்தான் தனது மகனின் மரணத்துக்குக் காரணம் என்று சுஷாந்தின் தந்தை காவல்துறையில் புகார் அளித்தார். தற்போது இந்த வழக்கு தீவிரம் பெற்று, சிபிஐ விசாரித்து வருகிறது.
சமூக ஊடகத்தில் பலரும் ரியாவே எல்லாவற்றுக்கும் காரணம் என்று குற்றம் சாட்டி வருகிறார்கள். இதில் சில திரையுலகப் பிரபலங்களும் அடங்குவர்.
ஆனால், சமூக வலைதளங்களிலும், ஊடகங்களிலும் ரியா தொடர்ந்து இழிவுபடுத்தப்படுவது வேதனையளிப்பதாக நடிகை லட்சுமி மஞ்சு அறிக்கை ஒன்றை வெளியிட்டிருந்தார். அவரைத் தொடர்ந்து நடிகைகள் டாப்ஸி மற்றும் மீரா சோப்ரா ஆகியோரும் ரியாவுக்கு ஆதரவு தெரிவித்திருந்தனர்.
லட்சுமி மஞ்சுவின் அறிக்கைக்கு ஆதரவாக நடிகை வித்யா பாலனும் ஆதரவு தெரிவித்தார். அவர் கூறுகையில், ''இதை உரக்கச் சொன்னதற்குக் கடவுள் உங்களை ஆசிர்வதிக்கட்டும் லட்சுமி மஞ்சு. அன்பார்ந்த இளம் நட்சத்திரம் சுஷாந்த் சிங் ராஜ்புத்தின் திடீர் மரணம், ஊடகங்களில் கேலிக்கூத்தாகியுள்ளது துரதிர்ஷ்டவசமானது. ஒரு பெண்ணாக, ரியா சக்ரபர்த்தியை நிந்திப்பதைப் பார்க்கும்போது வேதனையாக இருக்கிறது.
குற்றம் நிரூபிக்கப்படும் வரை நிரபராதி என்று தானே சொல்லுவார்கள் அல்லது குற்றம் நிரூபிக்கப்படும் வரை குற்றவாளி என்று மாறிவிட்டதா? ஒரு குடிமகனுக்கு அரசியலமைப்பு தரும் உரிமைகளை மதிப்போம். சட்டம் அதன் கடமையைச் செய்ய விடுவோம்'' என்று வித்யா பாலன் தெரிவித்தார்.
வித்யா பாலனின் இந்தக் கருத்துக்கு எதிராக சுஷாந்த் மற்றும் நடிகை கங்கணாவின் ரசிகர்கள் பலரும் அவரை சமூக வலைதளங்களில் சாடத் தொடங்கி விட்டனர்.
சுஷாந்தின் பெண் ரசிகர் ஒருவர் வித்யா பாலனைக் குறிப்பிட்டு, ''ஏனெனில் ரியா ஒரு பெண் என்பதாலா? ஒரு பெண்ணாக இருந்து கொண்டு, சுஷாந்த் தற்கொலை செய்துகொள்ள எப்படி அவரால் தூண்ட முடிந்தது? ஒரு பெண்ணாக என் மனம் வலிக்கிறது. வித்யா உங்கள் கண்களைத் திறந்து உண்மையின் பக்கம் நில்லுங்கள்'' என்று விமர்சித்துள்ளார்.
இதேபோன்று பலரும் வித்யா பாலனின் கருத்துக்கு பலத்த எதிர்ப்புத் தெரிவித்துள்ளனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT