Published : 04 Sep 2020 11:04 AM
Last Updated : 04 Sep 2020 11:04 AM
நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத் கடந்த ஜூன் 14 ஆம் தேதி மும்பையில் அவரது இல்லத்தில் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டார். ஆனால், சுஷாந்தின் காதலி ரியா சக்ரபர்த்தி மற்றும் அவரது குடும்பத்தினர்தான், சுஷாந்தின் தற்கொலைக்குக் காரணம் என்று கூறி சுஷாந்த் குடும்பத்தினர் வழக்குப் பதிவு செய்துள்ளனர். இதனடிப்படையில் இந்த வழக்கை சிபிஐ கையில் எடுத்து விசாரணை மேற்கொண்டு வருகிறது.
சுஷாந்தின் தந்தை கேகே சிங் கடந்த சில தினங்களுக்கு முன்பு வெளியிட்டிருந்த ஒரு காணொலியில், சுஷாந்தின் காதலி ரியா தனது மகனுக்கு விஷம் தந்து வந்ததாகவும், ரியா தான் கொலையாளி என்றும் வெளிப்படையாக குற்றம் சாட்டியிருந்தார். இதனடிப்படையில் சிபிஐ அதிகாரிகள் நடிகை ரியாவிடம் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்த விவகாரம் தொடர்ந்து ஊடகங்கள் மற்றும் சமூக வலைதளங்களில் பேசுபொருளாகி வருகிறது. சுஷாந்த் மரணம், ரியா பற்றிய விவாதங்கள் இல்லாத நாளே இல்லை எனும் அளவுக்கு இந்த விவகாரம் தொடர்ந்து விவாதிக்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில் ஊடகங்களின் இந்த போக்கு சுஷாந்த் வழக்கு விசாரணையை பாதிக்கக்கூடும் என்பதால் சுஷாந்த் வழக்கு குறித்த விவாதங்களுக்கு தடை கோரி எட்டு ஐபிஎஸ் அதிகாரிகள் அடங்கிய குழு மும்பை உயர்நீதிமன்றத்தில் மனு ஒன்றை அளித்திருந்தது.
இந்த மனுவின் மீதான விசாரணை நேற்று (03.09.20) விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதிகள் சுஷாந்த் சிங் விவகாரம் செய்திகள் வெளியிடும், மற்றும் விவாதங்கள் நடத்தும் ஊடகங்கள் வழக்கு விசாரணையை பாதிக்காமல் கட்டுப்பாட்டுடன் நடக்க வேண்டும் என்று கூறினர்.
மேலும் இந்த விவகாரம் குறித்து பதிலளிக்குமாறு மத்திய அரசு, செய்தி ஒளிபரப்பாளர்கள் தர நிர்ணய ஆணையம், சம்பந்தப்பட்ட செய்தி சேனல்கள் ஆகியவற்றுக்கு மும்பை நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. இந்த வழக்கின் விசாரணையை நீதிபதிகள் செப்டம்பர் 10ஆம் தேதிக்கு ஒத்திவைத்துள்ளனர்
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT