Published : 03 Sep 2020 12:06 PM
Last Updated : 03 Sep 2020 12:06 PM
இந்தியாவில் கரோனா தொற்றுப் பரவத் தொடங்கியதும் தேசிய அளவில் ஊரடங்கு அறிவிக்கப்பட்டது. பல்வேறு மாநிலங்களில் புலம்பெயர் தொழிலாளர்கள் போக்குவரத்து வசதியின்றி அவர்கள் சொந்த ஊருக்குத் திரும்ப முடியாமல் சிக்கினர்.
தங்களைச் சொந்த ஊருக்கு அனுப்பி வைக்குமாறு ஆங்காங்கே அவர்கள் போராட்டங்களையும் நடத்தினர். அப்படிச் சிக்கித் தவித்த தொழிலாளர்கள் வீடு திரும்புவதற்கான போக்குவரத்து வசதிகளை நடிகர் சோனு சூட் இலவசமாக ஏற்பாடு செய்து தந்தார். பேருந்து மட்டுமின்றி சிலரைத் தனி விமானம் மூலமாகவும் சோனு சூட் அவரவர் ஊருக்கு அனுப்பி வைத்தார்.
வறுமையில் வாடிய விவசாயிக்கு ட்ராக்டர், ஸ்பெய்னில் சிக்கியிருந்த சென்னை மாணவர்கள் வீடு திரும்ப விமான வசதி எனத் தொடர்ந்து பல்வேறு உதவிகளை சோனு சூட் செய்து வந்தார். இதனால் சமூக வலைதளங்களில் சோனு சூட்டுக்கு பலரும் பாராட்டி வந்தனர்.
இந்நிலையில் தனியார் ஆடியோ ஸ்ட்ரீமிங் தளம் ஒன்றில் நடந்த நேரலை நிகழ்ச்சியில் நடிகர் சோனு சூட் பல்வேறு விஷயங்களை பகிர்ந்து கொண்டார். அதில் அவர் பேசியதாவது:
கடந்த 10 ஆண்டுகளாகவே அரசியலில் இணைய எனக்கு பல்வேறு வாய்ப்புக்கள் வழங்கப்பட்டன. நீ ஒரு நல்ல தலைவனாக இருக்கமுடியும் என்று பலரும் என்னிடம் கூறினார்கள். ஆனால் நான் ஒரு நடிகனாக உணர்கிறேன். நான் போக வேண்டிய தூரம் இன்னும் நிறைய உள்ளது. நான் விரும்பும் பல விசயஙகளை நான் செய்ய வேண்டியுள்ளது. ஒருவர் எப்போது வேண்டுமானாலும் அரசியலில் நுழையலாம் ஆனால் நான் ஒரே நேரத்தில் இரண்டு படகுகளில் சவாரி செய்ய விரும்பவில்லை.
ஒருவேளை அரசியலுக்கு வந்தால் நான் என்னுடைய 100 சதவீத உழைப்பை வழங்குவேன். யாருக்கு எந்த பிரச்சினையும் இல்லை என்பதை உறுதி செய்வேன். நான் அவர்களின் பிரச்சினையை தீர்ப்பேன். ஆனால் அதற்கு நிறைய நேரம் தேவைப்படும். எனவே, தற்போது நான் அதற்கு தயாராக இல்லை என்று நினைக்கிறேன். நான் யாருக்கும் பதில் சொல்ல வேண்டியதில்லை. எனவே தான் என்னால் எல்லா விஷயங்களையும் பரவலாக செய்யமுடிகிறது. எந்த கட்சியினரிடமும் அல்லது யாரிடமும் நான் என்ன செய்யவேண்டும் என்று கேட்க வேண்டியதில்லை.
இவ்வாறு சோனு சூட் கூறியுள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT