Published : 17 Aug 2020 11:57 AM
Last Updated : 17 Aug 2020 11:57 AM
பாலிவுட் நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத்தின் தற்கொலையைத் தொடர்ந்து பாலிவுட்டில் நிலவும் வாரிசு அரசியல் குறித்துப் பெரும் சர்ச்சை எழுந்துள்ளது. மேலும், பலரும் சமூக வலைதளங்களில் இயங்கி வரும் வாரிசு நடிகர்களின் பக்கங்களுக்கே நேரடியாகச் சென்று அவர்களைச் சாட ஆரம்பித்தனர்.
நடிகர் சத்ருகன் சின்ஹாவின் மகள் நடிகை சோனாக்ஷி சின்ஹாவும் இதிலிருந்து தப்பவில்லை. பொறுத்திருந்து பார்த்த சோனாக்ஷி, கடந்த சில தினங்களுக்கு முன்பு ட்விட்டரிலிந்து விலகினார்
இந்நிலையில் தனியார் ஊடகம் ஒன்றுக்கு அளித்த பேட்டியில் இது குறித்து பல்வேறு விஷயங்களை பகிர்ந்துள்ளார். அத்துடன் வாரிசு அரசியல் குறித்து தொடர்ந்து சர்ச்சைகளை கிளப்பி வரும் நடிகை கங்கணாவையும் மறைமுகமாக சாடியுள்ளார் சோனாக்ஷி. அந்த பேட்டியில் அவர் கூறியிருப்பதாவது:
‘வாரிசு அரசியல்’ என்ற வார்த்தை ஒரு நடிகையால் உருவாக்கப்பட்டு அது தொடர்ந்து பரபரப்பாக்கப்பட்டு வருகிறது. ஆனால் அவரது வேலைகளையே அவரது சகோதரிதான் கவனித்துக் கொண்டிருக்கிறார். இதற்கெல்லாம் அதிக முக்கியத்துவம் கொடுக்க நான் விரும்பவில்லை.
என் அப்பா சத்ருகன் எந்த தயாரிப்பாளருக்கும் போன் செய்து எனக்கு வாய்ப்பு கேட்கவில்லை. சல்மான் கான் குடும்பத்துக்கும் எங்கள் குடும்பத்துக்கும் இருந்த அறிமுகத்தால் ‘தபாங்’ படத்துக்கு நான் சரியாக இருப்பேன் என்பதால் எனக்கு வாய்ப்பு கிடைத்தது. அந்த படத்துக்காக நான் கடினமாக உழைத்தேன்.
இந்த சமூக வலைதள கும்பல் ஆலியா பட், அனன்யா பாண்டே, சோனம் கபூர் போன்ற இளம் பெண்களை குறிவைக்கிறார்கள். அவர்கள் இதை எப்படி எதிர்கொள்வார்கள் என்பதை எண்ணிப் பாருங்கள். இது சரியானதல்ல. மக்கள் வலியில் இருக்கிறார்கள். ஆனால் அதற்காக குடும்பத்தினரால் அறிமுகப்படுத்தப்படாதவர்களை கூட அவர்கள் தாக்குகிறார்கள்.
இவ்வாறு சோனாக்ஷி கூறியுள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT