Published : 10 Aug 2020 05:27 PM
Last Updated : 10 Aug 2020 05:27 PM
பாலிவுட் பாடல்களின் பின்னணியில் நடனமாடும் நடனக் கலைஞர்களுக்கு நடிகை கத்ரீனா கைஃப் பண உதவி செய்துள்ளார்.
இந்தியா முழுக்கவே கரோனா ஊரடங்கால் வெள்ளித்திரை, சின்னத்திரை படப்பிடிப்பு எதுவும் பல மாதங்களாக நடைபெறவில்லை. திரைப்படங்களைப் பொறுத்தவரை போஸ்ட் புரொடக்ஷன் பணிகளுக்கு மட்டும் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. சின்னத்திரை தொடர்களின் படப்பிடிப்புக்கான அனுமதியும் தரப்பட்டுள்ளது.
ஆனால், நடனக் கலைஞர்கள் உள்ளிட்ட பலர் படப்பிடிப்பு இல்லாததால் கடுமையான நிதி நெருக்கடியைச் சந்தித்து வருகின்றனர். இதனால் துறையில் இருக்கும் தினக்கூலிப் பணியாளர்களுக்குப் பல்வேறு நட்சத்திரங்களும் உதவ முன் வந்தனர்.
இந்நிலையில், நடிகை கத்ரீனா கைஃப் 100 நடனக் கலைஞர்களின் வங்கிக் கணக்குக்கு நேரடியாகப் பணம் அனுப்பியுள்ளார். நடனக் கலைஞர்களுக்கு உதவ முன் வந்த முதல் நடிகையும் இவரே. வருமானமின்றி தவித்து வந்த நடனக் கலைஞர்கள் பலர் இதனால் பலனடைந்துள்ளனர். அதில் சிலர் காய்கறிகள் விற்பது, சிற்றுண்டிக் கடை ஆரம்பிப்பது எனச் சிறு சுய தொழில்களையும் அந்தப் பணத்தை முதலீடாக வைத்துத் தொடங்கியுள்ளனர்.
இதுபற்றிப் பேசியுள்ள ஆக்டோபஸ் என்டர்டெய்மென்ட் நிறுவனத்தைச் சேர்ந்த ராஜ் சுரானி, "படப்பிடிப்பு என்று வந்தால் கடைசியாக அதனால் பலனடைபவர்கள் நடனக் கலைஞர்களாகத்தான் இருப்பார்கள். கடைசி ஐந்து மாதங்கள் அவர்களுக்குக் கடும் நெருக்கடியாக இருந்துள்ளது.
ஏனென்றால் தினசரி இந்த வருமானத்தை நம்பியவர்களுக்கு வேறு வழியில் வருமானம் கிடைக்க வழியில்லை. கத்ரீனா கைஃப் போன்ற நடிகர்களுக்கு நன்றி. தற்போது நடனக் கலைஞர்கள் சுய தொழிலைச் செய்து வருகின்றனர். இன்னும் துறையைச் சேர்ந்த பல நடிகர்கள், பிரபலங்கள் உதவ முன் வர வேண்டும்" என்று கூறியுள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT