Published : 26 Jul 2020 05:55 PM
Last Updated : 26 Jul 2020 05:55 PM
அபாரத் திறனாலும், வசீகரத்தாலும் ஆசிர்வதிக்கப்பட்ட நடிகர் சுஷாந்த் சிங். தோனியின் வாழ்க்கைச் சரித்திரத்தில் அவர் வெளிப்படுத்தியிருந்த நடிப்பு அதற்குச் சான்று. பக்கத்து வீட்டுப் பையனைப் போல், நம்முடன் நெருக்கத்தை ஏற்படுத்திக்கொள்ளும் எளிமையைத் தன்னுடைய இயல்பாகக் கொண்ட நடிகர் அவர். திரையிலும் வெளியிலும் பாசாங்கற்றுத் திரிந்த மனிதர் அவர். விண்வெளியின் மீது அபரிமிதமான மோகம் கொண்டவர். நட்சத்திரங்களைப் பார்ப்பதற்காகத் தன்னுடைய வீட்டு மாடியில், ஒரு திறன்மிகுந்த தொலைநோக்கிக் கருவியை நிறுவும் அளவுக்கு அவருக்கு அதன் மீது காதல். 34 வயது நிச்சயமாக மரணிக்கும் வயது அல்ல. பொதுவாகவே, கலைஞர்கள் மரணிப்பது இல்லை. சாகாவரம் பெற்ற அவர்களின் உடல் மறைந்தாலும், வாழ்வின் நீட்சியாக அவர்களுடைய கலை நம்முடன் என்றென்றும் இருந்துகொண்டே இருக்கும். இந்தக் கூற்றை நிரூபிக்கும் விதமாக, சுஷாந்தின் மறைவுக்குப் பின்னர், கடந்த வெள்ளி அன்று, டிஸ்னி ஹாட் ஸ்டாரில் வெளியாகி உள்ள திரைப்படமே ‘தில் பெச்சாரா’.
உண்மையான அஞ்சலி
ஒரு விபத்தில் காலை இழந்து, செயற்கைக் கால் பொருத்தியவராக இந்தப் படத்தில் வலம்வரும் சுஷாந்த் சிங், தன்னுடைய காதலியின் தந்தையிடம் “என்னுடைய தோல்விகள் எதுவும் தோல்விகளாகப் பார்க்கப்படுவதில்லை. என்னுடைய வெற்றிகளும் வெற்றிகளாகப் பார்க்கப்படுவதில்லை. என்னுடைய அனைத்தும் அனுதாபக் கண்கொண்டே பார்க்கப்படுகிறது” என்று வேதனையில் உடைந்த குரலில் தன்னுடைய ஆதங்கத்தை வெளிப்படுத்துவார். அனுதாபத்தோடு இந்தத் திரைப்படத்தை அணுகுவதும் அவருடைய ஆன்மாவுக்கு ஒப்பாத செயலாகவே இருக்கக்கூடும் என்பதால், இந்தத் திரைப்படம் குறித்தான பார்வையையும், அவருடைய முந்தைய படங்களைப் போன்று அணுகுவதே அவருக்குச் செலுத்தும் உண்மையான அஞ்சலி என்பது திண்ணம்.
'இதயத்தைத் திருடாதே' படத்தின் தழுவல்
2012-ல் பிரசுரிக்கப்பட்ட ‘ஜான் கீரின்’ எனும் எழுத்தாளரின் ‘தி ஃபால்ட் இன் அவர் ஸ்டார்ஸ்’ எனும் நாவலின் திரையாக்கமே ‘தில் பெச்சாரா’. அந்த நாவல், அதே பெயரில் திரைப்படமாக 2014-ல் வெளியானது. காதலும் சோகமும் பின்னிப் பிணைந்து பயணிக்கும் அந்தத் திரைப்படம் மட்டுமல்ல; அந்த நாவலும் மிகுந்த வரவேற்பைப் பெற்றன. ஆனால், அந்த நாவலின் கருவும் களமும், 1989-ல் வெளியான மணிரத்னத்தின் ‘இதயத்தைத் திருடாதே’ திரைப்படத்தின் அப்பட்டமான தழுவல். ஆம், புற்றுநோய் பாதிப்புக்கு உள்ளாகி, மரணத்தை எதிர்நோக்கியிருக்கும், ஓர் இளம்ஜோடிக்கு இடையில் துளிர்க்கும் காதலே இந்தத் திரைப்படம்.
படத்தின் கதை
தைராய்டு புற்றுநோயால் பாதிக்கப்பட்டு, சுவாசிப்பதற்காக எப்போதும் ஆக்ஸிஜன் சிலிண்டரைச் சுமந்து செல்லும் கட்டாயத்திலிருக்கும் கல்லூரி மாணவி கிஸி பாசு (சஞ்சனா சங்கி). அவர் படிக்கும் கல்லூரியில் சில ஆண்டுகளுக்கு முன்னர் படித்துப் பட்டம் பெற்றவர் இம்மானுவேல் ராஜ்குமார் ஜூனியர் எனும் மன்னி (சுஷாந்த் சிங் ராஜ்புட்). புற்றுநோயிலிருந்து மீண்ட மன்னியை கல்லூரி விழாவின்போது நேருக்கு நேர் சந்திக்கும் வாய்ப்பு கிடைக்கிறது.
ஆரம்பத்தில், மன்னியின் அதிகப்படியான நடத்தை கிஸிக்கு எரிச்சலூட்டினாலும், விடாமல் பின்தொடரும் மன்னியின் அன்பால் அவள் மனம் மென்மையாகிறது. விரைவில் இருவரும் காதலில் விழுகின்றனர். விரைந்து நெருங்கும் மரணம் குறித்த அறிகுறிகள் யதார்த்தத்தைத் தொடர்ந்து நினைவூட்டுவதால், மகிழ்ச்சியும் மென்சோகமும் நிறைந்த ஒன்றாகவே அவர்களுடைய வாழ்க்கை நீள்கிறது. புற்றுநோயின் தாக்குதலுக்கு மீண்டும் உள்ளாகும் மன்னி, கிஸிக்கு முன்பாகவே மரணித்துவிடுகிறார். மன்னியின் வாழ்க்கைக்கு உயிர்கொடுக்கும் விதமாக, அவருடைய நினைவுகளைச் சுமந்தபடி கிஸி தொடர்ந்து பயணிப்பதாகப் படம் முடிவடைகிறது.
உச்சம் தொடும் முன்னரே மறைந்த சுஷாந்த்
ரஜினியின் ரசிகராக வலம்வரும் சுஷாந்த் சிங், இந்தப் படத்தில் மன்னியாகவே வாழ்ந்துள்ளார். ரஜினியின் ரசிகராக அவர் செய்யும் மேனரிஸங்கள் தரமான சம்பவங்கள். காதலில் அவர் வெளிப்படுத்தும் துள்ளல் மிகுந்த உணர்ச்சிகளும், காதலியின் தந்தையுடன் பேசும்போது அவர் வெளிப்படுத்தும் கரிசனமும், காதலியின் தாயை வம்பிழுக்கும் குறும்பும், உயிருக்குப் போராடும் காதலிக்காக மருத்துவமனையில் காத்திருக்கும்போது அவரிடம் வெளிப்படும் இயலாமையும் பரிதவிப்பும், இப்படி ஒரு தேர்ந்த நடிகர் தன்னுடைய உச்சத்தைத் தொடும் முன்னரே மறைந்துவிட்டாரே எனும் எண்ணத்தை ஏற்படுத்தி நம்மைச் சோகத்தில் ஆழ்த்துகிறது.
நாயகியின் அற்புத நடிப்பு
இருப்பினும், கிஸியாக வலம்வரும் சஞ்சனா சங்கி, நடிப்பில் சுஷாந்த் சிங்கைப் பின்னுக்குத் தள்ளிவிட்டார். மரணத்தை எதிர்நோக்கிக் காத்திருப்பவரின் பரிதவிப்பு, எனக்கு ஏன் இப்படி நடக்க வேண்டும் என்ற விரக்தி, அனுதாபப் பார்வைகள் ஏற்படுத்தும் கோபம், மற்றவர்களைப் போல் தன்னால் வாழ முடியாதா என்ற ஏக்கம், காதல் அளிக்கும் பரவசம் போன்றவற்றை அவர் வெளிப்படுத்தும் நேர்த்தி, இவரா அறிமுக நடிகை எனும் கேள்வியை நம்முள் எழுப்புகிறது. தன்னுடைய இறப்புக்குப் பின்னர், பெற்றோர் அடையப் போகும் துயருக்கு ஆறுதல் அளிக்கும்பொருட்டு, முகந்தெரியாத மனிதர்களின் மரணத்துக்குச் சென்று, அவர்களுடைய பெற்றோரைக் கட்டிப்பிடித்து ஆறுதல் சொல்லும்போது அவர் வெளிப்படுத்தும் நடிப்பும் உடல்மொழியும் கண்களைத் துளிர்க்கச் செய்கின்றன.
அசலான நடிப்பு
கிஸியின் தந்தையாக நடித்திருக்கும் சாஸ்வதா சட்டர்ஜியும், தாயாக நடித்திருக்கும் சுவஸ்திகா முகர்ஜியும் அசலான நடிப்பை வழங்கியுள்ளார்கள். மன்னியின் நண்பராக நடித்திருக்கும் சஹில் வஹத் வெளிப்படுத்தும் உணர்ச்சிகள் அற்புதம். புற்றுநோயால் பார்வையை இழக்கும்போதும், மன்னியின் இறப்புக்கு முன்னர், மன்னியின் முன்னிலையில் நடக்கும் இரங்கல் ஒத்திகையின்போதும் அவர் வெளிப்படுத்தும் நடிப்பு, எந்த ஒரு தேர்ந்த நடிகருக்கும் பொறாமையை ஏற்படுத்தும்.
ரஹ்மானின் மாயாஜாலம்
இந்தத் திரைப்படத்தின் உண்மையான நாயகன் ஏ.ஆர்.ரஹ்மான்தான். இசையில் அவர் நிகழ்த்தியிருக்கும் மாயாஜாலம், இந்தத் திரைப்படத்தை மட்டுமல்ல, நம்மையும் வேறொரு தளத்துக்கு, உலகுக்குக் கடத்திச் செல்கிறது. அவருடைய குரலில் ஒலிக்கும் ‘தில் பெச்சாரா’ பாடலின் இசைக்கோப்பும் ஒலிநேர்த்தியும் ஒரே டேக்கில் எடுக்கப்பட்ட அந்தப் பாடலில் ஆடும் சுஷாந்துடன் இணைந்து நம்மையும் ஆடச் செய்கின்றன.
ஸ்ரேயா கோஷல் குரலில் ஒலிக்கும் ‘தாரே ஜின்’, அர்ஜித் சிங் குரலில் ஒலிக்கும் ‘குல்கே ஜீனே கா’ போன்ற பாடல்கள் படம் முடிந்த பின்னரும் முணுமுணுக்க வைக்கின்றன. கிஸியும் மன்னியும் பிரான்ஸில் இறங்கும்போது ஒலிக்கும் பின்னணியிசை, பிரான்ஸுக்கு நாமும் சென்ற உணர்வை நமக்கு ஏற்படுத்துகிறது. படம் முடிந்த பின்னர் வரும், டைட்டில் கார்டில் ஒலிக்கும் ‘நெவர் சே குட் பை’ எனும் ஆங்கிலப் பாடல், ரஹ்மானின் ஆகச் சிறந்த பாடல்களில் ஒன்று. இந்த ஆண்டில் இதுவரை வெளியான திரை இசைத் தொகுப்புகளில் சிறந்தது இது என்று சொன்னால் அது மிகையல்ல.
திரைக்கதையே பலவீனம்
சத்யஜித் பாண்டேவின் ஒளிப்பதிவு வெகுசிறப்பு. இருப்பினும், பிரான்ஸை அழகாகவும் பிரமிப்புடன் காட்டியிருக்கும் அவர், ஜாம்ஷெட்பூரின் மண்வாசனையைக் காட்டத் தவறியது நெருடல். ‘ஆரிஃப் சேக்’கின் தேர்ந்த எடிட்டிங் படத்துக்கு மிகப் பெரிய பலம். அதே நேரத்தில் பலவீனமும் கூட. மொத்தப் படமும் ஒன்றரை மணிநேரத்துக்குள் முடிந்துவிடுகிறது. எந்த ஒரு காட்சியும், முழுமையை அடைவதற்கு முன்பாகவே சட்டென்று முடிந்துவிடுவதால், அது நம்முள் தாக்கத்தை ஏற்படுத்தத் தவறிவிடுகிறது. ‘ஹைதர்’, ‘பிகே’ போன்ற படங்களில் காஸ்டிங் இயக்குநராகப் பணியாற்றிய முகேஷ் சாப்ரா, இந்தப் படத்தில் இயக்குநராகக் களம் இறங்கியுள்ளார்.
முகேஷின் இயக்கத்தில் பெரிதாக எந்த ஒரு குறையும் இல்லை. நடிகர்களின் தேர்வும் தொழில்நுட்பக் கலைஞர்களின் தேர்வும் வெகு கச்சிதம். கதை இந்தப் படத்தின் பலம் என்றால், திரைக்கதை அதன் மிகப் பெரும் பலவீனம். ‘இதயத்தைத் திருடாதே’ படத்தின் கதையை இந்தத் திரைப்படம்கொண்டு இருந்தாலும், மணிரத்னம் படத்திலிருந்த ஜீவன் இதில் இல்லை என்பது இந்தப் படத்தின் பெரிய குறை. அந்த ஆங்கிலப் படத்தை அப்படியே எடுத்ததற்கு மாறாக, ‘இதயத்தைத் திருடாதே’ படத்தைத் தழுவி எடுத்திருந்தால், சுசாந்த் சிங்கின் மரணத்துக்குப் பின்னான இந்தக் காலகட்டத்தில், நமக்கு அது மறக்க முடியாத உன்னத அனுபவத்தை அளித்திருக்கக்கூடும்.
தொடர்புக்கு: mohamed.hushain@hindutamil.co.in
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT