Published : 25 Jul 2020 10:59 PM
Last Updated : 25 Jul 2020 10:59 PM
ஓடிடி தளத்தில் வெளியான 'தில் பெச்சாரா' திரைப்படம் பல்வேறு சாதனைகளை நிகழ்த்தியுள்ளது.
கடந்த ஜூன் 14-ம் தேதி, இளம் பாலிவுட் நடிகர் சுஷாந்த் தனது இல்லத்தில் தற்கொலை செய்துகொண்டார். அவரது மறைவு பாலிவுட்டில் வாரிசு அரசியல் சர்ச்சையை உருவாக்கியுள்ளது. இது தொடர்பாக பல்வேறு முன்னணி திரையுலக பிரபலங்களுக்கு இடையே கருத்து பகிர்வு இப்போது வரை ஏற்பட்டு வருகிறது.
சுஷாந்த் சிங் நடிப்பில் உருவான கடைசி படமான 'தில் பெச்சாரா' திரைப்படம் நேற்று (ஜூலை 24) இரவு 7:30 மணியளவில் டிஸ்னி + ஹாட் ஸ்டார் ஓடிடி தளத்தில் வெளியானது. அதுவும் முழுக்க இலவசமாகப் பார்க்கும் முறையில் வெளியிடப்பட்டது.
நேற்றிரவு முதலே பல்வேறு முன்னணி பாலிவுட் பிரபலங்கள் தொடங்கி பலரும் 'தில் பெச்சாரா' படத்தைப் பார்த்துவிட்டுப் பாராட்டி வருகிறார்கள். மேலும், இந்தப் படத்தில் ரஜினி ரசிகராக நடித்துள்ளார் சுஷாந்த் சிங். ஆகையால் ரஜினி ரசிகர்களும் இந்தப் படத்துக்கு ஆதரவாக களமிறங்கினார்கள். இதனால் #RajiniFansLoveSushant என்ற ஹேஷ்டேக்கும் ட்விட்டரில் ட்ரெண்ட்டானது.
சுஷாந்த் சிங் நடிப்பைப் பாராட்டியது மட்டுமன்றி, நாயகியாக நடித்துள்ள சஞ்சனா நடிப்புக்கும் பாராட்டுகள் குவிந்து வருகிறது. 'தில் பெச்சாரா' படத்தைப் பார்த்துவிட்டு, ஐ.எம்.டி.பி இணையத்தில் பலரும் அந்தப் படத்துக்கு வாக்களிக்கத் தொடங்கினார்கள். இதுவரை 54 ஆயிரத்துக்கும் அதிகமானோ அதிகப்படியான மார்க்குகளை அளித்து வருவதால், 10-க்கு 9.7 புள்ளிகளைப் பெற்றுள்ளது.
இது உலகளவில் ஐ.எம்.டி.பி இணையத்தில் அதிக புள்ளிகளைப் பெற்றுள்ள படம் என்ற சாதனையை தற்போதைக்கு நிகழ்த்தியுள்ளது. ஏனென்றால் வாக்குகள் அதிகரிக்க அதிகரிக்க இந்த புள்ளிகள் மாறிக் கொண்டே இருக்கும் என்பது நினைவு கூரத்தக்கது. மேலும், ஹாட் ஸ்டார் ஓடிடி தளத்தில் 24 மணி நேரத்தில் 75 மில்லியன் பார்வைகளைப் பெற்றதாக தகவல் வெளியாகியுள்ளது. இது இந்திய அளவில் அதிகம் பேர் ஓடிடி தளத்தில் பார்த்த படம் என்ற பெருமையை 24 மணி நேரத்தில் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.
தொடர்ச்சியாக பல்வேறு சாதனைகளை நிகழ்ச்சி வருவதால், 'தில் பெச்சாரா' படக்குழுவினர் பெரும் உற்சாகத்தில் இருக்கிறார்கள். முன்னதாக படத்தின் ட்ரெய்லரும் உலகளவில் சாதனையும் புரிந்துள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT