Published : 23 Jul 2020 04:20 PM
Last Updated : 23 Jul 2020 04:20 PM
இளம் நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத்தின் மரணத்தைத் தொடர்ந்து பாலிவுட்டின் வாரிசு அரசியல் குறித்தும், வாரிசு அல்லாத நடிகர்கள் நடத்தப்படும் விதம் குறித்தும் பகிரங்க குற்றச்சாட்டுகளை நடிகை கங்கணா ரணாவத் முன்வைத்து வருகிறார்.
கடந்த சில தினங்களுக்கு முன்பு ஒரு பேட்டியில் இப்படி வாரிசு அரசியலை ஊக்குவிப்பவர்களுக்கு ஆதரவாகச் செயல்படுபவர்களையும் கங்கணா தாக்கிப் பேசியிருந்தார். டாப்ஸி, ஸ்வரா பாஸ்கர் உள்ளிட்ட நடிகைகளையும் அவர் விமர்சித்திருந்தார்.
இந்நிலையில் தற்போது மீண்டும் பாலிவுட்டில் நிலவும் வாரிசு அரசியல் குறித்து கடுமையாகக் கண்டித்துள்ளார் கங்கணா.
இதுகுறித்து ஐஏஎன்எஸ் செய்தி நிறுவனத்திடம் அவர் கூறியுள்ளதாவது:
''இந்த வாரிசு அரசியல் ஒரு உயிரைக் குடித்திருக்கிறது. பலரது வேலைகளையும் பறித்திருக்கிறது. வளர்ந்து வரும் நடிகர்கள் மற்றும் வெளியிலிருந்து கஷ்டப்படுபவர்கள் பலரது குறிக்கோள்களையும் சிதைக்கிறது. இந்த வாரிசு அரசியல் மாஃபியா அதிக சேதத்தை ஏற்படுத்திவிட்டது. இதை எப்படிச் சரிசெய்வது? இதைப் பற்றி நாம் பேச வேண்டும். இது பலவகைகளிலும் வெளியாட்களுக்கு உதவும்.
அற்ப லாபங்களுக்காகவும், ஈகோவுக்காகவும் சுஷாந்த் கொல்லப்பட்டிருக்கிறார். அவரைத் துன்புறுத்தியவர்கள் இதற்கான பலனை அனுபவிக்க வேண்டும்.
அதற்காக அவர்கள் தூக்கிலிடப்பட வேண்டும் என்று நான் கூறவில்லை. ஆனால், அதோடு அவர்கள் தப்பித்துவிடக் கூடாது''.
இவ்வாறு கங்கணா கூறியுள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT