Published : 21 Jul 2020 06:06 PM
Last Updated : 21 Jul 2020 06:06 PM
பாலிவுட்டின் பல்வேறு நட்சத்திரங்களை எதிர்த்து வந்த நடிகை கங்கணா ரணாவத்தின் சமூக வலைதளக் குழு, தற்போது அனுராக் காஷ்யப்பைக் குறி வைத்துள்ளது.
இளம் நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத்தின் மரணத்தைத் தொடர்ந்து பாலிவுட்டின் வாரிசு அரசியல் குறித்து, வாரிசு அல்லாத நடிகர்கள் நடத்தப்படும் விதம் குறித்து பகிரங்க குற்றச்சாட்டுகளை நடிகை கங்கணா ரணாவத் முன்வைத்து வருகிறார்.
சமீபத்தில் ஒரு பேட்டியில் இப்படி வாரிசு அரசியலை ஊக்குவிப்பர்களுக்கு ஆதரவாகச் செயல்படுபவர்களையும் கங்கணா தாக்கிப் பேசியிருந்தார். டாப்ஸி, ஸ்வரா பாஸ்கர் உள்ளிட்ட நடிகைகளையும் விமர்சித்திருந்தார்.
செவ்வாய்க்கிழமை அன்று அனுராக் காஷ்யப், கங்கணாவின் இந்தப் பேட்டியைக் குறிப்பிட்டு, "நேற்று கங்கணாவின் பேட்டியைப் பார்த்தேன். ஒரு சமயத்தில் அவர் எனக்கு நல்ல நண்பராக இருந்தார். எனது ஒவ்வொரு படத்தின்போதும் வந்து அவர் என் தன்னம்பிக்கையை ஊக்குவிப்பார். ஆனால் இந்தப் புதிய கங்கணாவை எனக்குத் தெரியவில்லை.
இப்போதுதான் அவர் 'மணிகார்னிகா' திரைப்படம் வெளியானவுடன் கொடுத்த பயமுறுத்தும் பேட்டி ஒன்றைப் பார்த்தேன்" என்று பதிவிட்டிருந்தார். மேலும் அந்த பழைய பேட்டியையும் பகிர்ந்திருந்தார். அது 'மணிகார்னிகா' திரைப்படம் வெளியான சமயத்தில் அந்தப் படத்தைச் சுற்றியிருந்த சர்ச்சைகள் குறித்து கங்கணா கடுமையாகப் பதிலளித்த காணொலி.
மேலும் பதிவிட்டிருந்த அனுராக், "கங்கணாவின் சமூக வலைதள அணியே, இதற்கு மேல் வேண்டாம். போதும். உங்களது நண்பர்களாலோ, குடும்பத்தினராலோ இதைப் பார்க்க முடியவில்லை என்றால் உங்களைச் சுற்றி எல்லோரும் உங்களைப் பயன்படுத்திக் கொள்கிறார்கள், உங்களுக்குச் சொந்தமென்று யாரும் இல்லை என்று அர்த்தம். இனிமேல் முடிவு உங்களிடம். நீங்கள் என்னை நோக்கி வீசப்போகும் அவதூறுகள் குறித்து எனக்குக் கவலையில்லை" என்றும் குறிப்பிட்டிருந்தார்.
இதற்கு கங்கணாவின் பக்கத்திலிருந்து பதில் வந்தது. "இதோ சின்ன மகேஷ் பட். கங்கணா தனியாக, அவரைப் பயன்படுத்திக் கொள்ளும் போலியான மக்களுக்கு நடுவில் இருப்பதாகக் கங்கணாவிடம் சொல்கிறார். தேசத்துக்கு எதிரானவர், அர்பன் நக்ஸல்கள் தீவிரவாதிகளைப் பாதுகாப்பதுபோல் தற்போது திரைப்பட மாஃபியாவையும் பாதுகாக்கிறார்கள்" என்று அந்தப் பதிவில் குறிப்பிடப்பட்டுள்ளது.
செவ்வாய்க்கிழமை காலை அன்று ட்வீட் செய்திருந்த அனுராக் காஷ்யப், "பாலிவுட்டில் நான் சம்பாதிக்கவில்லை. தர்மா, எக்ஸல், யாஷ் ராஜ் என யாரும் என் படங்களைத் தயாரிக்க மாட்டார்கள். நான் எனது சொந்த நிறுவனத்தை வைத்து மட்டுமே தயாரிக்க வேண்டியிருந்தது, அதை நான் செய்தேன்.
கங்கணாவுக்கு வாய்ப்புகளே இல்லாதபோது நாங்கள் 'குயின்' எடுத்தோம். 'தனு வெட்ஸ் மனு'வில் சிக்கல் ஏற்பட்டபோது நான் ஆனந்த் எல்.ராயை வழி நடத்தி உதவினேன். நீங்கள் அவரையே கேட்கலாம். ஆம். நான் பெயரைக் குறிப்பிட்டிருக்கிறேன். தொடர்ந்து உண்மையைப் பேசுவேன்" என்று பகிர்ந்தார்.
இதற்கும் பதிலளித்துள்ள கங்கணாவின் தரப்பு, ''ஆம். அது உண்மைதான். இன்னொரு உண்மை, உங்கள் ஒட்டுமொத்த திரை வாழ்க்கையிலும், உங்கள் தயாரிப்பு நிறுவனத்துக்கும் இதுவரை வந்திருக்கும் ஒரே ஒரு ஹிட் என்றால் அது 'குயின்' தான் என்பது உண்மையே. கங்கணா எப்படி நன்றியுணர்வுடன் இருக்க வேண்டுமோ அதே அளவு நீங்களும் இருக்க வேண்டும்" என்று பகிர்ந்துள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT