Published : 04 Jul 2020 02:30 PM
Last Updated : 04 Jul 2020 02:30 PM
தனது நடிப்புப் பணி அவ்வப்போது உணர்ச்சிரீதியில் தன்னை மொத்தமாகச் சோர்வடையச் செய்யும் என்று நடிகை நித்யா மேனன் கூறியுள்ளார்.
நித்யா மேனன் நடிப்பில் 'ப்ரீத்: இன்டு தி ஷேடோஸ்' என்ற வெப் சீரிஸ் வெளியாகவுள்ளது. இதில் அபிஷேக் பச்சன் பிரதான கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.
இந்தத் தொடரில் தான் நடித்துள்ள கதாபாத்திரம் குறித்து ஐஏஎன்எஸ் செய்தி நிறுவனத்திடம் அளித்துள்ள பேட்டியில் நித்யா மேனன் பேசியதாவது:
"பல நேரங்களில் என் பணி உணர்ச்சிரீதியில் மிகவும் சோர்வளிக்கும். ஆனால் நான் எப்படி நடிப்பேன் என்ற எதிர்பார்ப்பிலிருந்து இந்தக் கதாபாத்திரம் மிக வித்தியாசமானது. இந்தக் கதையின் சூழல் அனுமானத்தின் அடிப்படையிலானது. இதில் எப்படி இருக்கும் என்று நாம் நினைத்துப் பார்க்கும்படி நாம் யாருமே அப்படி ஒரு சூழலை அனுபவித்திருக்க மாட்டோம். அதில் என் நடிப்பு நம்பும்படியாக இருக்க வேண்டும் என்று விரும்பினேன்.
எந்த அளவு நடிக்க வேண்டும், அந்தக் கதாபாத்திரம் என்ன நினைக்கும் என்று யோசனை செய்துகொண்டே இருந்தேன். ஒவ்வொரு நிமிடமும் அந்தக் கதாபாத்திரம் குறித்தே நான் யோசிக்கும் அளவுக்கு மிகத் தீவிரமாக இருந்தது".
இவ்வாறு நித்யா மேனன் கூறியுள்ளார்.
முதன்முதலில் வெப் சீரிஸில் நடித்தது பதற்றத்தைத் தரவில்லையா என்ற கேள்விக்கு, "நிஜத்தில் நான் பதற்றமடைவதே அரிது. என் முதல் படத்தில் கூட நான் பதற்றமாக இருக்கவில்லை. அதனால் முதல் வெப் சீரிஸிலும் அப்படித்தான். இந்த வெப் சீரிஸ் குறித்து நான் ஆர்வத்துடன் இருக்கிறேன். ஏனென்றால் இதுவரை நான் மிகச் சிறப்பாக நடித்த படைப்புகளில் இதுவும் ஒன்று. அது திரையில் எப்படி இருக்கும் என்று பார்க்க ஆவலாக இருக்கிறேன்" என்று நித்யா மேனன் பதிலளித்துள்ளார்.
ஜூலை 10-ம் தேதி அன்று அமேசான் ப்ரைம் தளத்தில் 'ப்ரீத்: இன்டு தி ஷேடோஸ்' வெப் சீரிஸ் வெளியாகிறது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT