Published : 27 Jun 2020 10:19 AM
Last Updated : 27 Jun 2020 10:19 AM

எந்தவொரு மனிதருக்கும் இதுபோன்ற கொடுமை நிகழக் கூடாது: சாத்தான்குளம் சம்பவத்துக்கு ப்ரியங்கா சோப்ரா கடும் கண்டனம்

சாத்தான்குளம் சம்பவத்துக்கு பாலிவுட் நடிகை ப்ரியங்கா சோப்ரா கடும் கண்டனம் தெரிவித்தார்.

தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளத்தில் ஊரடங்கின்போது கடை திறக்கப்பட்ட விவகாரத்தில் சாத்தான்குளம் போலீஸார் தந்தை, மகனை அழைத்துச் சென்று தாக்கியதாகக் குற்றச்சாட்டு எழுந்தது. பின்னர் கோவில்பட்டி கிளைச் சிறையில் அடைக்கப்பட்ட மகனும் அடுத்து தந்தையும் 12 மணி நேர இடைவெளியில் உயிரிழந்தனர். இந்த விவகாரம் தமிழகம் முழுவதும் அதிர்வலையை ஏற்படுத்தியது.

ஜெயராஜ் மற்றும் பென்னிக்ஸ் ஆகியோர் காவல்துறையினரால் விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்டபோது மர்மமான முறையில் உயிரிழந்திருக்கும் நிகழ்வை அனைத்து அரசியல் கட்சிகளும் கண்டித்துள்ளன. காவல் துறையினர் மீது கொலை வழக்குப் பதிவு செய்ய அரசியல் கட்சித் தலைவர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

#JusticeForJeyarajAndFenix என்ற ஹேஷ்டேக் மூலம் சமூக வலைதளங்களில் இந்திய அளவில் இந்த விவகாரம் பேசுபொருளாகியிருக்கிறது.

இந்நிலையில் இந்தச் சம்பவத்துக்கு நடிகை ப்ரியங்கா சோப்ரா கடும் கண்டனம் தெரிவித்தார். இதுகுறித்து அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் கூறியிருப்பதாவது:

''நான் கேள்விப்பட்டுக் கொண்டிருக்கும் விஷயங்கள் கடும் அதிர்ச்சியையும், சோகத்தையும், கடும் கோபத்தையும் ஏற்படுத்துகின்றன. எந்தவொரு மனிதருக்கும் இந்தக் கொடுமை நிகழக்கூடாது, அவர் என்ன குற்றம் செய்திருந்தாலும் சரி.

இதற்குக் காரணமான குற்றவாளிகள் நிச்சயமாக தண்டிக்கப்படவேண்டும். அந்தக் குடும்பத்தினர் இப்போது எந்த நிலையில் இருப்பார்கள் என்பதை என்னால் கற்பனை கூட செய்யமுடியவில்லை. அவர்களுக்கு என்னுடைய பிரார்த்தனைகள். இறந்த ஜெயராஜ் மற்றும் பென்னிக்ஸ் இருவருக்கும் நீதி கிடைக்க நாம் அனைவரும் ஒன்றிணைந்து குரல் எழுப்ப வேண்டும்''.

இவ்வாறு ப்ரியங்கா சோப்ரா கூறியுள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x