Published : 25 Jun 2020 08:34 PM
Last Updated : 25 Jun 2020 08:34 PM
இந்தி திரைப்பட உலகில் இருக்கும் மோசமான, நேர்மையற்ற நடைமுறைகள் குறித்து திரைப்படமே எடுக்கலாம் என நடிகர் அபய் தியோல் கூறியுள்ளார்.
இளம் பாலிவுட் நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத்தின் தற்கொலையைத் தொடர்ந்து பாலிவுட்டைச் சேர்ந்த பலரும், துறைக்குள் இருக்கும் அரசியல் குறித்தும், அநீதி குறித்தும் வெளிப்படையாகப் பேச ஆரம்பித்துள்ளனர். நடிகர் அபய் தியோல், கடந்த வாரம், விருது வழங்கும் விழாக்களில் உள்ள அரசியல் பற்றிப் பகிர்ந்திருந்தார். தற்போது மீண்டும் பாலிவுட்டை விமர்சித்துப் பதிவிட்டுள்ளார்.
2012-ம் ஆண்டு அபய் தியோல் நடித்த படம் 'ஷாங்காய்'. இந்தப் படத்தைப் பற்றிப் பகிர்ந்துள்ள அபய் தியோல், "ஜீ என்கிற கிரேக்க நாவலின் சமகால இந்திய வடிவம்தான் 'ஷாங்காய்'. திபாகர் பேனர்ஜி இயக்கிய இந்தப் படம், அரசியலில் நடக்கும் திட்டமிட்ட ஊழல் குறித்து, அதனால் ஏற்படும் மோசமான தாக்கம் குறித்து விரிவாகப் பேசியது. இன்றைய சூழலுக்கும் பொருந்திப்போகும் ஒரு கதை. இதே போல, இந்நாட்களில், பாலிவுட்டின் ஊழல், நேர்மையற்ற நடைமுறைகள் குறித்தும் ஒருவர் படம் எடுக்கலாம் போலத் தெரிகிறது" என்று இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளார்.
மேலும் சுஷாந்த் மரணத்தையொட்டி பல அரசியல்கள் பற்றி வெளிப்படையாகப் பேசிவருபவர்களைப் பாராட்டியிருக்கும் அபய், "ஆனால் இப்போது இருக்கும் சீற்றத்தால், பாலிவுட் என்ற பெயர் இல்லாமல், துறையில் சுயாதீனத் திரைப்பட மற்றும் இசை முயற்சிகளுக்கு வழிகிடைக்குமா என்று தெரியவில்லை. ஆனால், மற்றவர்களின் நன்மைக்காக, தங்களுக்கு வரும் வாய்ப்புகளுக்கு இருக்கும் ஆபத்தையும் பாராமல், துறைக்குள்ளிருந்தே எழும் குரல்களைக் கேட்கும்போது நன்றாக இருக்கிறது" என்றும் குறிப்பிட்டுள்ளார்.
அபய் தியோல் தவிர, பாடகர்கள் சோனு நிகம், அத்னன் சாமி, நடிகர்கள் ரன்வீர் ஷோரே, சாஹில் கான் ஆகியோர் பாலிவுட்டில் இருக்கும் வாரிசு அரசியல் பற்றியும், செல்வாக்கு உடையவர்களின் அரசியல் குறித்தும் பேசியுள்ளனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT