Published : 24 Jun 2020 11:07 AM
Last Updated : 24 Jun 2020 11:07 AM
இளம் பாலிவுட் நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத்தின் தற்கொலையைத் தொடர்ந்து பாலிவுட்டில் நிலவும் வாரிசு அரசியல் குறித்துப் பெரும் சர்ச்சை எழுந்துள்ளது. மேலும், பலரும் சமூக வலைதளங்களில் இயங்கி வரும் வாரிசு நடிகர்களின் பக்கங்களுக்கே நேரடியாகச் சென்று அவர்களைச் சாட ஆரம்பித்தனர்.
மேலும், கரண் ஜோஹர், சல்மான் கான் உள்ளிட்ட பலர் மீது குற்றச்சாட்டுகளும் வைக்கப்பட்டுள்ளன. இதனைத் தொடர்ந்து பிஹார் உள்ளிட்ட மாநிலங்களில் கரண் ஜோஹர், சல்மான் கான் ஆகியோரது உருவ பொம்மைகளை எரிக்கும் சம்பவங்களும் நடந்தன.
சமூக வலைதளத்தில் தொடர்ச்சியாக சுஷாந்த் சிங் ரசிகர்கள், முன்னணி நடிகர்கள் பலரையும் திட்டித் தீர்த்து வருகிறார்கள். அதற்கு சம்பந்தப்பட்ட ரசிகர்கள் தக்க பதிலடி கொடுத்து வருகிறார்கள்.
இந்நிலையில் சமீபத்தில் மறைந்த பிரபல நடிகர் இர்ஃபான் கானின் மகன் பாபில் கான் வாரிசு அரசியல் சர்ச்சையில் சுஷாந்த் மரணத்தை பயன்படுத்த வேண்டாம் என்று வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இது குறித்து அவர் தனது இன்ஸ்டாகிராம் பதிவில் கூறியுள்ளதாவது:
இன்னும் இதை ஏற்றுக் கொள்ளமுடியவில்லை. ஈடுபாடு மிக்க இரண்டு மனிதர்களை நாம் இழந்துவிட்டோம். ஈடுபாட்டுடன் இருப்பதே நமது ஆன்மீக பயணத்தின் திறவுகோல். சுஷாந்த் இந்த உலகை விட்டு புறப்பட்டுச் சென்றவிதம் அதிர்ச்சியளிக்கிறது. இயற்கையாகவே நாம் ஏதோ ஒன்றின் மீதோ அல்லது ஒருவரின் மீதோ பழியை சுமத்தி விடுகிறோம். இது பயனற்றது. ஏனெனில் மன அமைதிக்காக அடுத்தவர் மீது பழி சுமத்துவது நேர்மையான அமைதியாக இருக்கமுடியாது. அது ஒரு பொய்மையின் பிரதிபலிப்பாகவே இருக்கும்.
இந்த துரதிர்ஷ்டவசமான சம்பவத்துக்கு யார் மீது பழி சுமத்த வேண்டாம் என்று உங்களை கேட்டுக் கொள்கிறேன். காரணங்களை ஆராய வேண்டாம் ஏனெனில் அது இழப்பில் வாடுபவர்களை மேலும் நம்பிக்கை இழக்க வைக்கும்.
அதற்கு பதில் அந்த மனிதர்களின் வளர்ச்சியை கொண்டாடி, அவர்களுடைய ஞானத்தை நம் பயணத்தில் வெளிப்படுத்தி, அவர்களுடைய நினைவுகளின் சிறிய விளக்குகளை நம்முடைய ஆன்மாக்களில் ஏற்றுவோம்.
நல்லவற்றுக்கு துணை நில்லுங்கள் ஆனால் அதற்கு சுஷாந்தின் மரணத்தை துணைக்கு கொள்ளாதீர்கள். வாரிசு அரசியலை எதிர்க்க விரும்பினால் செய்யுங்கள், ஆனால் அதற்கு சுஷாந்தை ஒரு காரணமாக பயன்படுத்தாதீர்கள்.
இவ்வாறு பாபில் கான் கூறியுள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT