Published : 20 Jun 2020 02:24 PM
Last Updated : 20 Jun 2020 02:24 PM
'தபாங்' திரைப்பட இயக்குநர் அபினவ் காஷ்யப் மீது சட்டரீதியிலான நடவடிக்கை எடுக்கவுள்ளதாக நடிகர் சல்மான் கானின் சகோதரர் அர்பாஸ் கான் கூறியுள்ளார்.
இளம் நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத்தின் தற்கொலையைத் தொடர்ந்து பாலிவுட்டில் மிகப்பெரிய சலசலப்பு ஏற்பட்டுள்ளது. துறைக்குள் இருக்கும் வாரிசு அரசியல், அதிகார துஷ்பிரயோகம், பின்புலம் இல்லாமல் துறைக்குள் வருபவர்களை வாரிசுகள் நடத்தும் விதம் எனப் பல்வேறு பிரச்சினைகள் குறித்துப் பல பிரபலங்கள் பேசி வருகின்றனர்.
அந்த வரிசையில் சல்மான் கான் நடிப்பில் 2010-ம் ஆண்டு வெளியான 'தபாங்' திரைப்படத்தின் இயக்குநர் அபினவ் சிங் காஷ்யப்பும் சில நாட்களுக்கு முன்பு அதிரடியான குற்றச்சாட்டை முன்வைத்தார். தனக்கு வரும் வாய்ப்புகளைத் தடுத்தது சல்மான் கான் மற்றும் அவரது குடும்பத்தினர்தான் என்று குற்றம் சாட்டி அபினவ் தனது ஃபேஸ்புக் பக்கத்தில் நீண்ட பதிவு ஒன்றை வெளியிட்டார்.
அபினவ் காஷ்யப்பின் இந்தக் குற்றச்சாட்டுகளைத் தொடர்ந்து அவர் மீது சட்டரீதியிலான நடவடிக்கை எடுக்கவுள்ளதாக சல்மான் கானின் சகோதரர் அர்பாஸ் கான் தெரிவித்துள்ளார்.
" 'தபாங் 2' பணிகளை ஆரம்பித்த காலத்திலிருந்தே எங்களுக்கு அபினவ் உடனான தொடர்பு அறுந்துவிட்டது. தொழில்முறையில் நாங்கள் பிரிந்துவிட்டோம். அவர் ஏன் இப்படிப் பேசுகிறார் என்று தெரியவில்லை. ஏற்கெனவே அவர் பகிர்ந்திருந்த ஒரு பதிவிற்காக அவர் மீது சட்டரீதியான நடவடிக்கை எடுத்துள்ளோம். இப்போதும் எடுக்கப் போகிறோம்" என்று அர்பாஸ் கான் கூறியுள்ளார்.
சல்மான் கானின் தந்தை சலீம் கான், அபினவின் குற்றச்சாட்டுகளுக்குப் பதில் சொல்லி நேரத்தை வீணடிக்க முடியாது என்றும், அவரால் முடிந்ததை அவர் செய்யட்டும் என்றும் கூறியுள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT