Published : 15 Jun 2020 06:30 PM
Last Updated : 15 Jun 2020 06:30 PM
உத்தரப் பிரதேச மாநிலத்தின் புகழ்பெற்ற பொம்மலாட்ட நாடகம் ‘குலாபோ சிதாபோ’. குலாபோ, சிதாபோ என்ற இரண்டு பெண் கதாபாத்திரங்கள் வெவ்வேறு காரணங்களுக்காக சண்டை போட்டுக் கொண்டே இருக்கும் நாட்டுப்புறக் கதை அது. 70 வயதைத் தாண்டிய பழைய மேன்ஷன் ஒன்றின் உரிமையாளர் அமிதாப்புக்கும், அங்கே வாடகையே தராமல் குடும்பத்தோடு குடியிருக்கும் இளைஞன் ஆயுஷ்மான் குரானாவுக்கும் அன்றாடம் நடக்கும் சண்டையும் பூசல்களும்தான் 'குலாபோ சிதாபோ'. இந்தியாவில் ஊரடங்கு அறிவிப்புக்குப் பிறகு முதல் முறையாக அமேசான் இணையவழி ஒளிபரப்பில் வெளியீடு பெற்றிருக்கும் இந்தித் திரைப்படம் இது.
இயக்குனர் சூஜித் சர்க்கார், எழுத்தாளர் ஜூகி சதுர்வேதியுடன் கூட்டணியாகச் சேர்ந்து, எதார்த்தப் பின்னணியிலேயே அழுத்தமான நகைச்சுவைச் சித்திரங்களை 'விக்கி டோனர்', 'பிகு', 'அக்டோபர்' என வெற்றிகரமான படைப்புகளாகத் தந்திருக்கிறார்கள்.
லக்னோ நகரத்தில் உள்ள பழைய மாளிகையின் உரிமையாளர் என்பதற்காகவே வயதில் மூத்த பெண்மணியைத் திருமணம் செய்து அவரது மரணத்துக்காகக் காத்திருக்கும் பேராசைக்காரக் கிழவராக அமிதாப் அசத்தியுள்ளார். மேன்ஷனில் குடித்தனம் இருப்பவர்களின் சைக்கிள் பெல், அறையில் மாட்டியிருக்கும் பல்புகளை இரவுகளில் திருடி விற்கும் சில்லறைத் திருடராகவும் திகழும் மிர்ஸா, தனது அத்தனை சில்லறைத் தனங்களோடும் தனது குறும்புத்தனம் கொண்ட கண்களால் நம்மை ரசிக்க வைக்கிறார்.
மிர்ஸாவின் பிரதான எதிரியாக இருக்கும் ஆயுஷ்மான் குரானா, மாத வாடகை முப்பது ரூபாயையும் தராமல் ஏமாற்றும் கதாபாத்திரத்தில் வருகிறார். அம்மா, தங்கைகளுக்காகத் திருமணம் செய்யாமல், கோதுமை மாவு மில் ஒன்றை மட்டுமே வாழ்வாதாரமாகக் கொண்டு வயிற்றுக்கும் வாய்க்கும் போராடும் வடக்கத்திய இளைஞனாக மிகச் சாதாரணமாக உடல்மொழியிலும் முகபாவத்திலும் வெளிப்பட்டிருக்கிறார்.
இதற்கு நடுவில், மிர்ஸாவின் மாளிகையான பாத்திமா மகால், பாரம்பரிய அந்தஸ்து கொண்ட கட்டிடம் என்பதால், அரசு தொல்லியல் இலாகாவில் வேலைபார்க்கும் குமாஸ்தா ஒருவனின் பார்வையில் சிக்குகிறது.
இந்தியாவின் புராதன நகரங்களில் ஒன்றான லக்னோவின் பழமையான கட்டிடங்கள், இண்டு இடுக்கான தெருக்களையும் சேர்த்து கதை சொல்லப்படுகிறது. கூன் விழுந்த முதுகுடன், ப்ரோஸ்தடிக் செய்யப்பட்ட பெரிய மூக்கு, தாடியுடன் அமிதாப் அறிமுகமாகிறார். படிப்படியாக கதாபாத்திரத்தில் நம்மை ஆழவும் வைத்துவிடுகிறார். மிர்ஸாவின் மனைவி பேகமாக நடித்திருக்கும், ஃபரூக் ஜாபர் தான் எதிர்பாராத திருப்பத்தை இறுதியில் தருபவர். மிர்ஸா போடும் ஒவ்வொரு கணக்கையும் அநாயசமாகத் தூள்தூளாக்கி விழிபிதுங்க வைக்கிறார்.
'குலாபோ சிதாபோ' படத்தின் ஒவ்வொரு காட்சியிலும் எளிய மனிதர்களின் அன்றாட நிகழ்ச்சிகளை அதன் நிறத்திலேயே மிகையின்றி அதேநேரத்தில் வசீகரமாகக் காட்சிப்படுத்தியிருக்கிறார் ஒளிப்பதிவாளர் அவிக் முகோபாத்யாயா. மேன்ஷனின் பரபரப்பான காலைநேரச் சந்தடிகளும், இரவொளியில் பழைய கம்பீரத்தோடு ஒளிரும் முற்றங்களும் மாளிகையின் பழங்கதையைச் சொல்கிறது. சிதிலமாகி வரும் அமிதாப்பின் மேன்ஷனில் உள்ள ஒவ்வொரு கதாபாத்திரமும் பற்றாக்குறை மற்றும் ஏக்கங்களால் நிறைந்துள்ளதை அங்கே வளரும் ஆடுகளின் முணுமுணுப்புகள் சொல்கின்றன. மனிதர்களின் பேராசை, போட்டி பொறாமைகள், சுயநலத் திட்டங்கள், சாமர்த்தியங்களை பயனற்றுப் போகச் செய்கிறது விதி. மதியை விதி வெல்வதறிந்தும் மனிதர்கள் சாமர்த்தியங்களைச் செயல்படுத்திக் கொண்டேயிருக்கிறார்கள். மனித வாழ்வின் மேல் கத்தியென ஆடிக்கொண்டிருக்கும் நிலையாமையை சந்தனு மொய்த்ராவின் இசையும் பாடல்களும் உணர்த்துகின்றன.
எத்தனையோ விதமான வாழ்க்கைப் பின்னணிகள், கதைக்களங்களுக்குள் புகுந்து கதைசொல்வதில் பாலிவுட் பெற்றுவரும் தேர்ச்சியையும் முதிர்ச்சியையும் 'குலாபோ சிதாபோ' நிரூபிக்கிறது. வறுமை, சமத்துவம் இல்லாத வாழ்க்கை நிலையிலிருக்கும் மனிதர்களின் சோகமான எதார்த்தத்திலிருந்து ஒரு நகைச்சுவைப் படைப்பை உருவாக்குவது அத்தனை எளிதல்ல. நாயகனுக்கான எந்த நல்ல அம்சங்களும் இல்லாத கதாபாத்திரங்களில் அமிதாப்பும், ஆயுஷ்மான் குரானாவும் நடித்திருப்பது இதுபோன்ற படங்களுக்குக் கூடுதல் வலிமை.
ஒரு குடும்பமாக அமர்ந்து பார்த்து சிரித்து நம்மையும் பரிசீலித்துக் கொள்வதற்கான அருமையான அனுபவம் ‘குலாபோ சிதாபோ’.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT