Published : 02 May 2020 11:42 AM
Last Updated : 02 May 2020 11:42 AM
கடந்த சில வருடங்களாக ரத்தப் புற்றுநோயால் அவதிப்பட்டு வந்த பாலிவுட் மூத்த நடிகர் ரிஷி கபூர், அதற்கான தொடர் சிகிச்சையில் இருந்தார். கடந்த ஏப்ரல் 29 அன்று இரவு, உடல்நலக் குறைபாட்டால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். ஏப்ரல் 30 அன்று காலை சிகிச்சை பலனின்றி ரிஷி கபூர் உயிரிழந்தார். அவருக்கு வயது 67.
ரிஷி கபூரின் மறைவு பாலிவுட் உலகை மட்டுமின்றி ஒட்டுமொத்த இந்திய சினிமா ரசிகர்கள் மத்தியிலும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த ரிஷி கபூர் ஐசியூவில் உயிருக்கு போராடிக்கொண்டிருந்தபோது யாரோ ஒரு மருத்துவமனை ஊழியர் அதை மறைந்திருந்து வீடியோ எடுத்ததோடு மட்டுமல்லாமல் அவற்றை சமூக வலைதளங்களில் பகிரவும் செய்திருக்கிறார்.
இந்த வீடியோவை பார்த்த பாலிவுட் பிரபலங்கள் முதல் ரசிகர்கள் வரை மருத்துவமனை நிர்வாகத்தை சாடி வருகின்றனர்.
இந்நிலையில் ரிஷி கபூர் அனுமதிக்கப்பட்டிருந்த மருத்துவமனையின் நிர்வாகம் இந்த விவகாரம் குறித்து அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில் கூறப்பட்டுள்ளதாவது:
எங்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நோயாளி ஒருவரின் வீடியோ ஒன்று சமூகவலைதளங்களில் பரவி வரும் தகவல் எங்கள் கவனத்துக்கு வந்தது. எங்கள் மருத்துவமனையை பொறுத்தவரை நோயாளியின் தகவல்களை பாதுகாப்பது என்பது மிகவும் முக்கியமான ஒன்று.
இது போன்ற நடவடிக்கைகளை நாங்கள் வன்மையாக கண்டிக்கிறோம். இந்த விவகாரம் குறித்து மருத்துவமனை நிர்வாகம் விசாரணை செய்து வருகிறது. இதில் சம்பந்தப்பட்டவர்களை கண்டறிந்து அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.
இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT