Published : 25 Mar 2020 11:32 AM
Last Updated : 25 Mar 2020 11:32 AM
எதை எதையோ முக்கியம் என்று நினைத்துக் கொண்டிருந்த எங்களுக்கு எது உண்மையில் முக்கியம் என்று காட்டிய கரோனா வைரஸுக்கு நன்றி என்று நடிகை வித்யா பாலன் தெரிவித்துள்ளார்.
உலகம் முழுவதும் கரோனா வைரஸால் இதுவரை 3.5 லட்சத்துக்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ளனர். உயிரிழந்தோர் எண்ணிக்கை 15 ஆயிரத்தைத் தாண்டிவிட்டது.
நாளுக்கு நாள் கரோனா வைரஸ் பரவல் அதிகமாகிக் கொண்டே செல்கிறது. இந்தியாவிலும் இதுவரை கரோனா வைரஸால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 500ஐத் தாண்டிவிட்டது. இதுவரை 10 பேர் இந்த வைரஸுக்குப் பலியாகியுள்ளனர்.
அமெரிக்கா, ஜெர்மனி, ஜப்பான், கியூபா உட்பட பல நாடுகள், கரோனா வைரஸைக் கட்டுப்படுத்த மருந்துகள் கண்டுபிடிக்கும் ஆய்வில் தீவிரமாக ஈடுபட்டுள்ளன. இந்நிலையில், வரும் நாட்களில் கரோனா வைரஸ் இன்னும் வேகமாகப் பரவும் என்ற அச்சம் நிலவுகிறது.
கரோனா வைரஸ் பரவலைத் தடுக்க நாடு முழுவதும் அடுத்த 21 நாட்களுக்கு ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
சினிமா பிரபலங்கள், விளையாட்டு வீரர்கள் பலரும் இந்த ஊரடங்கு உத்தரவுக்கு ஆதரவு தெரிவித்து வருகின்றனர். மக்கள் வீட்டை விட்டு வெளியே வரவேண்டாம் என்று அறிவுறுத்தி சமூக வலைதளங்களில் பதிவிட்டு வருகின்றனர்.
அதே நேரத்தில் கரோனா அச்சுறுத்தலால் மக்கள் வீட்டை விட்டு வெளியே வராத நிலையில் நாடு முழுவதும் காற்று மற்றும் ஒலி மாசு கணிசமான அளவு குறைந்திருப்பதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
சுற்றுச்சூழலில் ஏற்பட்டுள்ள இந்த மாற்றம் குறித்து பாலிவுட் நடிகை வித்யா பாலன் கருத்து தெரிவித்துள்ளார். இது குறித்து தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார் வித்யா பாலன்.
அதில் அவர் கூறியதாவது:
''கரோனா வைரஸுக்கு நன்றி. எங்களை உலுக்கி நாங்கள் நினைத்திருந்ததை விட மிகப்பெரிய ஒன்றை நாங்கள் சார்ந்திருக்கிறோம் என்று எங்களுக்குக் காட்டிய கரோனா வைரஸுக்கு நன்றி.
அபரிமிதமான தயாரிப்புகள், சுதந்திரம், உடல் நலம் போன்ற வசதிகளைப் பாராட்ட வைத்த கரோனா வைரஸுக்கு நன்றி. அடிப்படை விஷயங்களுக்குக் கூட நேரமில்லாமல் எங்களது வேலைகளில் நாங்கள் எவ்வளவு தொலைந்து போயிருக்கிறோம் என்று எங்களுக்குக் காட்டிய கரோனா வைரஸுக்கு நன்றி.
எதை எதையோ முக்கியம் என்று நினைத்துக் கொண்டிருந்த எங்களுக்கு எது உண்மையில் முக்கியம் என்று காட்டிய கரோனா வைரஸுக்கு நன்றி.
போக்குவரத்தை நிறுத்தியமைக்கு நன்றி. இந்த பூமி நீண்ட காலமாக எங்களிடம் கெஞ்சிக் கொண்டிருந்தது. நாங்கள் கேட்கவில்லை. உலகம் மாறிக் கொண்டிருக்கிறது''.
இவ்வாறு வித்யா பாலன் கூறியுள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT