Published : 30 Dec 2019 05:24 PM
Last Updated : 30 Dec 2019 05:24 PM

ஓடிப்போன குழந்தைகளைப் பற்றிய திரைப்படம்: ரசூல் பூக்குட்டி திட்டம்

வீட்டிலிருந்து ஓடிப்போகும் குழந்தைகளைப் பற்றிய படத்தை எடுக்கத் திட்டமிட்டு வருவதாக ஆஸ்கர் விருது பெற்ற ஒலி வடிவமைப்பாளர் ரசூல் பூக்குட்டி தெரிவித்துள்ளார். 2016ஆம் ஆண்டு எலெக்ட்ரா என்ற திரைப்படத்தின் கதாசிரியர் கிரண் பிரபாகர் இந்தப் படத்துக்கான திரைக்கதையை எழுதவுள்ளார்

'ஸ்லம்டாக் மில்லினியர்' படத்துக்கான ஒலிக்கலவைக்காக ஆஸ்கர் விருது வென்று பிரபலமடைந்தவர் ரெசூல் பூக்குட்டி. சமீபத்தில் 'சவுண்ட் ஸ்டோரி' என்ற படத்திலும் நடித்திருந்தார். சமீபத்தில் ஒரு பொது நிகழ்ச்சியில் கலந்துகொண்ட ரெசூல், ஊடகங்களிடம் பேசிய போது,

"நான் எஸ் ஹரிஹரன் எழுதிய ரன்னவே சில்ட்ரன் புத்தகத்தால் உந்தப்பட்டுள்ளேன். பல்வேறு காரணங்களால் வீட்டை விட்டு ஓடிப்போகும் குழந்தைகளைப் பற்றிய திரைப்படத்தை எடுக்க முடிவு செய்தேன். நான் இதைத் தயாரிக்கவுள்ளேன். இதற்கான திரைக்கதை அடுத்த மாதம் தயாராகிவிடும். அதன் பிறகு படப்பிடிப்பைத் திட்டமிடுவோம். மும்பை, தமிழ்நாடு, கேரளா எனப் பல இடங்களில் படப்பிடிப்பு நடத்தப்படும். அடுத்த வருடம் வெளியாகும்.

இந்தக் குழந்தைகளின் நிலைக்கு அவர்கள் அல்ல, சமூகமும் , பெற்றோருமே காரணம். அவர்கள் வீட்டை விட்டு ஓடிப்போகும் அளவுக்குச் சூழ்நிலைகளை நாம் உருவாக்குகிறோம். இப்படியான சம்பவங்களுக்குப் பின்னால் இருக்கும் காரணத்தை ஆராய்ந்து இந்த பிரச்சினை தீர்க்கப்பட வேண்டும்" என்று கூறியுள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x