Published : 11 Nov 2019 06:12 PM
Last Updated : 11 Nov 2019 06:12 PM

பிரபல பின்னணிப் பாடகி லதா மங்கேஷ்கர் மருத்துவமனையில் அனுமதி

மும்பை

பாலிவுட் திரையுலகின் பிரபல பின்னணிப் பாடகி லதா மங்கேஷ்கர் மூச்சுத் திணறல் காரணமாக தனியார் மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவருக்கு வென்டிலேட்டர் எனப்படும் சுவாசக் கருவி பொருத்தப்பட்டுள்ளது.

முன்னதாக, நேற்று மாலை (ஞாயிற்றுக்கிழமை), அவர் தனது சமூக ஊடகக் கணக்கில், 'பானிபட்' படத்தில் நடித்ததற்காக பத்மினி கோலாபுரிக்கு வாழ்த்துகளைத் தெரிவித்திருந்தார். இந்நிலையில் அதிகாலை 1.30 மணியளவில் லதா மங்கேஷ்கருக்கு மூச்சுத் திணறல் ஏற்பட்டது. இதனையடுத்து மும்பை ப்ரீச் காண்டி மருத்துவமனையில் அவர் அனுமதிக்கப்பட்டார்.

லதா மங்கேஷ்கருக்கு இன்டென்ஸிவிஸ்ட் எனப்படும் தீவிர சிகிச்சை நிபுணரான ஃபரூக் இ உத்வாடியா சிகிச்சை அளித்து வருகிறார். நிமோனியா தொற்று ஏற்பட்டுள்ளதால் அவரது நிலை கவலைக்கிடமாக இருப்பதாக மருத்துவர் கூறியுள்ளார்.

லதா மங்கேஷ்கர் இந்தியா முழுவதும் அறியப்பட்ட பின்னணிப் பாடகி. இந்தி மொழி தவிர 20-க்கும் மேற்பட்ட மொழிகளில் அவர் பாடியிருக்கிறார். நாட்டின் உயரிய விருதான பாரத ரத்னா விருதினைப் பெற்றவர். இதுதவிர பல்வேறு பல்கலைக்கழகங்கள் அவருக்கு கவுரவ டாக்டர் பட்டத்தை வழங்கின.

லதா மங்கேஷ்கரின் பாடல்கள் மொழிகள் கடந்து இந்தியாவின் குறுக்கும் நெடுக்குமாக எல்லா மாநிலங்களிலும் மூலைமுடுக்கிலும் ஒலிக்கவல்லவை. நான்கு வயதில் பாட ஆரம்பித்த அவர் 30,000- க்கும் மேற்பட்ட பாடல்களைப் பாடியுள்ளார்.

லதா மங்கேஷ்கர் கடந்த செப்டம்பர் 28 அன்று தனது 90-வது பிறந்த நாளைக் கொண்டாடினார். அவரது கலையுலக வாழ்விற்கு வயது 60 என்பது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x