ஷாரூக் கானைச் சந்தித்த வெற்றிமாறன்: படம் குறித்துப் பேச்சுவார்த்தையா?
ஷாரூக் கானைச் சந்தித்து வெற்றிமாறன் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார். 'அசுரன்' தொடர்பாகப் பேசினார்களா அல்லது படம் தொடர்பாகப் பேசினார்களா என்பது விரைவில் தெரியவரும்.
வெற்றிமாறன் இயக்கத்தில் தனுஷ், மஞ்சு வாரியர், கென் கருணாஸ், டி.ஜே, பசுபதி உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியான படம் 'அசுரன்'. தாணு தயாரிப்பில் வெளியான இந்தப் படத்துக்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைக்க, வேல்ராஜ் ஒளிப்பதிவு செய்திருந்தார். விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் படம் பெரும் வரவேற்பைப் பெற்றது.
இந்தப் படத்துக்கு ரஜினி, கமல் தொடங்கி முன்னணி தமிழ்த் திரையுலகினர் மட்டுமன்றி இந்தி திரையுலகினர் பலரும் 'அசுரன்' படக்குழுவினருக்கு வாழ்த்து தெரிவித்தனர். தெலுங்கில் இந்தப் படம் ரீமேக் ஆகிறது. தனுஷ் கதாபாத்திரத்தில் வெங்கடேஷ் நடிக்கவுள்ளார்.
இதனிடையே ஷாரூக் கான் மற்றும் வெற்றிமாறன் இருவரும் சந்தித்துப் பேசியுள்ளனர். 'அசுரன்' பார்த்துவிட்டு வெற்றிமாறனை அழைத்துப் பாராட்டுவதற்காக ஷாரூக் சந்தித்தாரா அல்லது படம் பண்ணுவதற்காகப் பேச்சுவார்த்தை நடத்தினாரா என்பது விரைவில் தெரியவரும். இருவரது சந்திப்பு குறித்த புகைப்படங்கள் எதுவுமே இதுவரை வெளியிடப்படவில்லை. இருவரும் எதற்காக சந்தித்தார்கள் என்பது வெளியாகாத வரை, வதந்திகள் சுற்றிக் கொண்டிருக்கப் போவது மட்டும் உறுதி.
தமிழில் தன் அடுத்த படத்தை எல்ரெட் குமார் தயாரிப்பு நிறுவனத்துக்காக பண்ணவுள்ளார் வெற்றிமாறன். இதில் நாயகனாக சூரி நடிக்கவுள்ளார். அவர் நாயகனாக நடிக்கும் முதல் படமாக இது அமையவுள்ளது.
