Published : 26 Mar 2015 02:22 PM
Last Updated : 26 Mar 2015 02:22 PM
'விஸ்வரூபம்' விவகாரத்தில் ஆதரவுக் குரல் தராமல் இருந்ததற்கு கமல்ஹாசனிடம் பாலிவுட் நடிகர் ஆமிர் கான் மன்னிப்பு கேட்டுள்ளார்.
மும்பையில் நடந்த ஃபிக்கி ஃபிரேம் மாநாட்டில் கமல்ஹாசனுடன் கலந்துகொண்ட ஆமிர் கான், திரைப்படத் தணிக்கை, குறிப்பிட்ட சில வார்த்தைகளுக்கு தடை விதிப்பது, திரைப்படங்களுக்கு தடை விதிப்பது ஆகியவை பற்றி பேசினார். அவர் கூறியதாவது:
"எந்தவிதமான தடைக்குமே நான் எதிரானவன். ஒலிபரப்புத்துறை அமைச்சர் எங்களிடம் பேசுகையில், குறிப்பிட்ட வார்த்தைகளுக்கு தடை விதிப்பது பற்றிய எந்தவிதப் பட்டியலும் எங்களிடம் இல்லை. அது சென்சார் போர்டு அல்ல சான்றிதழ் வழங்கும் அமைப்பு மட்டுமே என்றார். கேட்பதற்கு நன்றாக இருந்தது.
'விஸ்வரூபம்' சர்ச்சை சமயத்தில் நான் ஆதரவு அளிக்காமல் இருந்ததற்கு வெட்கப்படுகிறேன். அப்போது எனது வேலைகளில் நான் மூழ்கியிருந்தேன். ஆனால் ஒரே துறையில் இருக்கும் நாங்கள் ஒன்றாக இணைய வேண்டும். என்னால் அப்போது ஆதரவு அளிக்க முடியாமல் போனதற்கு கமல்ஹாசனிடம் இங்கேயே மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன். ஒரு படத்தை தடை செய்வது எந்த வகையிலும் சரியல்ல.
ஒரு படத்திற்கான தணிக்கை சான்றிதழ் அளிக்கப்பட்ட பின் அந்தப் படத்தை எந்தவிதமான அச்சுறுத்தலும் இன்றி மக்கள் பார்க்க, மாநில அரசு வகை செய்ய வேண்டும். அது அவர்களின் கடமை. சட்டத்தைக் கையில் எடுத்துக் கொண்டு திரைப்படங்களுக்கு தடை விதிக்க சிலர் கோருகின்றனர். இது துரதிர்ஷ்டவசமானது.”
இவ்வாறு ஆமிர்கான் பேசினார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT