Published : 10 Jul 2019 03:21 PM
Last Updated : 10 Jul 2019 03:21 PM

கங்கனா சர்ச்சை எதிரொலி: பத்திரிகையாளர் சங்கம் புறக்கணிப்பு, ஏக்தா கபூர் மன்னிப்பு

கங்கனா ரணவத்துக்கு ஊடகத்தில் எந்த விதமான முக்கியத்துவமும் கொடுக்கப்பட மாட்டாது என்றும், அவரை புறக்கணிக்கிறோம் என்றும் எண்டர்டெய்ன்மெண்ட் ஜர்னலிஸ்ட் கில்ட் இந்தியா அமைப்பு அறிக்கை வெளியிட்டுள்ளது.

’ஜட்ஜ்மெண்டல் ஹாய் க்யா’ படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பில், ஜஸ்டின் ராவ் என்ற பத்திரிகையாளருக்கும், கங்கனா ரணவத்துக்கும் காரசாரமாக விவாதம் நடந்தது. தனக்கு எதிராக ஜஸ்டின் செயல்படுகிறார் என்ற குற்றச்சாட்டை கங்கனா முன்வைக்க, ஜஸ்டின், ஆதாரமின்றி இப்படி பேசுவது, அச்சுறுத்துவது தவறு என பதில் சொல்ல இது பெரும் சர்ச்சையாக வெடித்தது.

இந்த நிகழ்ச்சிக்குப் பின், படத்தின் தயாரிப்பாளரும், கங்கனா ரணவத்தும் மன்னிப்புக் கேட்க வேண்டும் என பத்திரிகையாளர்கள் அமைப்பு தீர்மானம் நிறைவேற்றியது. ஆனால் கங்கணாவின் சகோதரியும், மேலாளருமான ரங்கோலி, கங்கணா யாரிடமும் மன்னிப்பு கேட்க மாட்டார் என்று ட்விட்டரில் பதிவிட்டார்.

தொடர்ந்து, பத்திரிகையாளர் அமைப்பின் தரப்பிலிருந்து, "நாங்கள் அனைவரும் கூட்டாக, கங்கனாவை புறக்கணிக்கவும், அவருக்கு ஊடகத்தில் எந்த முக்கியத்துவம் கொடுக்க வேண்டாம் என்றும் முடிவெடுத்துள்ளோம். படம் சம்பந்தப்பட்ட மற்ற நடிகர்களை பற்றிய செய்திகளை வெளியிடுவோம். இது உங்கள் படத்தை பாதிக்காது" என தயாரிப்பாளர் ஏக்தா கபூருக்கு கடிதம் எழுதினர்.

இதன் பிறகு ஏக்தா கபூர், "எங்கள் படம் ’ஜட்ஜ்மெண்டல் ஹாய் க்யா’ படத்தின் பாடல் வெளியீட்டு விழாவில், பத்திரிகையாளர் ஜஸ்டின் ராவுக்கும், எங்கள் படத்தின் நடிகைக்கும் இடையே நடந்த வாக்குவாதம் குறித்து நிறைய செய்திகள் வந்துவிட்டன. துரதிர்ஷ்டவசமாக, அந்த நிகழ்ச்சி விரும்பத்தகாத வகையில் மாறிவிட்டது. சம்பந்தப்பட்டவர்கள் தங்கள் தரப்பை விடாமல் பேசி வந்தனர்.

இந்த சம்பவம் எங்கள் படத்தின் நிகழ்ச்சியில் நடந்தது என்பதால், தயாரிப்பாளர்களாக, நாங்கள், இந்த சம்பவத்துக்கு மன்னிப்பு கேட்டுக் கொள்கிறோம். யாரின் உணர்ச்சிகளையும் புண்படுத்துவது எங்கள் நோக்கமல்ல என்பதையும் தெளிவுபடுத்த விரும்புகிறோம். எங்கள் படம் ஜூலை 26 அன்று வெளியாகிறது. இந்த ஒரு சம்பவம், படத்தை உருவாக்க எங்கள் அணி எடுத்துக் கொண்ட உழைப்பை பாதிக்கக்கூடாது என ஊடகங்களிடம் கேட்டுக்கொள்கிறோம்" என்று மன்னிப்பு கடிதம் அளித்துள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x