Last Updated : 08 Jul, 2019 12:40 PM

 

Published : 08 Jul 2019 12:40 PM
Last Updated : 08 Jul 2019 12:40 PM

வெறுப்பை எதிர்கொள்ளும் தைரியத்தையும் தந்திருக்கிறீர்கள்: கபிர் சிங் வெற்றி குறித்து ஷாகித் கபூர் நெகிழ்ச்சி

வெறுப்பை எதிர்கொள்ளும் தைரியத்தையும் தந்திருக்கிறீர்கள் என 'கபிர் சிங்' வெற்றி குறித்து ஷாகித் கபூர் நெகிழ்ச்சியுடன் குறிப்பிட்டுள்ளார்.

தெலுங்கில் பெரும் வரவேற்பு பெற்ற 'அர்ஜுன் ரெட்டி' திரைப்படம், இந்தியில் 'கபிர் சிங்' என்ற பெயரில்  ரீமேக் செய்யப்பட்டது. ஷாகித் கபூர், கியாரா அத்வானி, அர்ஜான் பாஜ்வா, நிகிதா தத்தா உள்ளிட்ட பலர் நடித்த இந்தப் படத்தை, 'அர்ஜுன் ரெட்டி' படத்தின் இயக்குநர் சந்தீப் வங்கா இயக்கினார்.

ஜூன் 21-ம் தேதி வெளியான இந்தப் படம் விமர்சன ரீதியாக கலவையாக இருந்தாலும், வசூல் ரீதியில் பெரும் வரவேற்பைப் பெற்றது. இதுவரை இந்தப் படத்தின் வசூல் 230 கோடி ரூபாயைத் தாண்டியுள்ளது. மேலும், இந்தப் படத்துக்குப் பெண்ணியவாதிகள் பலரும் கடும் ஆட்சேபம் தெரிவித்துள்ளனர்.

இந்த வெற்றி தொடர்பாக ஷாகித் கபூர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில், “உங்கள் அன்பு திக்குமுக்காட வைக்கிறது. அதை விவரிக்க வார்த்தைகள் எப்போதும் போதாது. அவனைப் (கபிர் சிங்) புரிந்துகொண்டு, மன்னித்து, முழு மனதுடன் அன்பு செலுத்தியதற்கு நன்றி. நாம் அனைவரும் வீழலாம். ஆனால், நமது தவறுகளிலிருந்து நாம் மீண்டு வர முயற்சிக்க வேண்டும். இன்னும் மேம்பட்டு, இன்னும் கனிவாக, அறிவார்ந்தவர்களாக இருக்க முயற்சிக்க வேண்டும்.

அவன் தவறு செய்பவன்தான். நாம் அனைவரும் அப்படித்தான். அவனைப் பற்றி நீங்கள் தீர்மானிக்காமல், அவனது அனுபவங்களை அனுபவித்தீர்கள்; புரிந்து கொண்டீர்கள். இதற்கு முன் எப்போதும் இப்படி நன்றியுணர்வோடு நான் இருந்ததில்லை. இதுவரை நான் நடித்த கதாபாத்திரங்களிலேயே அதிகக் குறைபாடுகள் உள்ள பாத்திரம் இது. அதிகம் விரும்பப்படும் பாத்திரமாகவும் மாறிவிட்டது. இந்திய சினிமாவும் ரசிகர்களும் நீண்ட தூரம் வந்திருக்கின்றனர். தைரியமான முடிவுகள் தொடர்ந்து எடுக்கப்பட வேண்டும். உங்கள் முதிர்வும் மனிதத்தன்மையும் இன்னும் வளரட்டும்.

நான் பறக்க எனக்கு றெக்கைகள் தந்திருக்கிறீர்கள். எல்லோராலும் விரும்பப்படும் ஒரு நட்சத்திரமாக வேண்டும் என்ற சுமைக்குச் சமமாக, ஒரு நடிகனாக வெறுப்பை எதிர்கொள்ளும் தைரியத்தையும் தந்திருக்கிறீர்கள். நல்ல செயல்கள் செய்து மட்டுமே நாயகனாக இல்லாமல், தவறுகள் செய்து மனிதத்தன்மையோடு இருக்கும் நாயகர்கள் இன்னும் நிறைய வரவேண்டும்.

குறைபாடுகளிலும் ஒரு கச்சிதம் இருக்கிறது. அதுதான் மனித வாழ்க்கையின் அழகும் சவாலும். மீண்டும் மீண்டும் உங்களுக்கு நன்றி. நீங்கள் அனைவரும் இந்தக் கதையின் நாயகர்கள் தான்” என்று தெரிவித்துள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x