Published : 10 Jul 2019 01:58 PM
Last Updated : 10 Jul 2019 01:58 PM

நான் பேசியது தவறாக சித்தரிக்கப்பட்டுள்ளது: அர்ஜுன் ரெட்டி இயக்குநர் விளக்கம்

தான் பேட்டியில் பேசிய விஷயங்கள் தவறாக தொகுக்கப்பட்டு வெளியாகியுள்ளன என்று ’அர்ஜுன் ரெட்டி’, ’கபீர் சிங்’ படங்களின் இயக்குநர் சந்தீப் வாங்கா விளக்கம் அளித்துள்ளார்.

விஜய் தேவரகொண்டா, ஷாலினி பாண்டே நடிப்பில் வெளியாகி வெற்றி பெற்ற தெலுங்கு படம் ’அர்ஜுன் ரெட்டி’. இது ஷாகித் கபூர், கியாரா அத்வானி நடிக்க, ’கபீர் சிங்’ என்ற பெயரில் இந்தியில் ரீமேக் செய்யப்பட்டு வெளியானது.

படம் பெரும் வெற்றி பெற்ற அதே நேரத்தில் படத்தின் நாயகன் கதாபாத்திரம் குறித்தும் பெரும் சர்ச்சை வெடித்தது. ஆணாதிக்கம் நிறைந்த, பெண்களை வன்முறையாகக் கையாளும் ஒரு கதாபாத்திரம் என பல விமர்சனங்கள் எழுந்தன. பல பாலிவுட் விமர்சகர்களும் இது பற்றி குறிப்பிட்டு, ஒரு பெண்ணை இப்படி நடத்துவது தவறு என்பது போல சாடி விமர்சித்திருந்தனர்.

தொடர்ந்து இயக்குநர் சந்தீப், யூடியூப் சேனல் ஒன்றுக்கு அளித்த பேட்டியில், "ஒரு பெண்ணுடன் ஆழமான பிணைப்பில் இருக்கும்போது (அதேபோல ஒரு ஆணுடன் ஒரு பெண் ஆழமான பிணைப்பில் இருக்கும்போது), அதில் நிறைய நேர்மை இருக்கும். அதை உடல்ரீதியாகக் காட்டும், ஒருவரை ஒருவர் அறைந்து கொள்ளும் சுதந்திரம் இல்லையென்றால் அதில் என்ன காதல் இருக்கும் என்று எனக்குத் தெரியவில்லை.

அவள் கபீர் சிங்கை காரணமின்றி அறைகிறாள். கபீர் காரணத்துடன் அறைகிறான். ஒரு பெண்ணை அறையமுடியாதென்றால், நீங்கள் நினைத்த இடத்தில் அவரைத் தொட முடியாதென்றால், அவரை முத்தமிடமுடியாதென்றால், கெட்ட வார்த்தை பேச முடியாதென்றால், அந்த உறவில் எந்த உணர்ச்சியையும் நான் பார்க்கவில்லை" என்கிற ரீதியில் பேச அது மீண்டும் சர்ச்சையாக மாறியது.

அவரது இந்தக் கருத்துக்கு சமூக வலைதளங்களில், சமந்தா, சின்மயி உள்ளிட்ட திரையுலகைச் சேர்ந்தவர்களே கண்டனம் தெரிவித்திருந்தனர். தற்போது சந்தீப் இது குறித்து விளக்கம் அளித்துள்ளார்.

"நான் என்ன சொல்லவேண்டுமோ அதை சொல்லத்தான் வேண்டும். நான் பேசியதில் சில பகுதிகளை அவர்கள் நீக்கிவிட்டார்கள். நான் பேசிய கருத்துக்கு முன்னும் பின்னும் என்ன பேசினேன் என்பது மக்களுக்குத் தெரியாது. என்னை மீண்டும் சாட ஒரு பிரிவு பெண்களுக்கு வாய்ப்பு கிடைப்பது போல அந்த பேட்டி தவறாக தொகுக்கப்பட்டுள்ளது. எனது படத்தின் நாயகனின் மனநிலை குறித்துதான் நான் விளக்க முற்பட்டேன். அந்த கதாபாத்திரம் தன் காதலை வெளிப்படுத்தும் விதம் வன்முறையாக இருக்கலாம், அது என் பாணி கிடையாது.

ஒருவரை ஒருவர் அறைய வேண்டும் என்று நான் சொல்லவில்லை. ஒரு உறவில் முழுக்க நேரமையாக இருக்க வேண்டும், நேர்மை சில நேரங்களில் வன்முறை உருவெடுக்கவும் வாய்ப்புகள் உண்டு. உண்மயான உறவில் உணர்ச்சிகள் சற்று தீவிரமாக, வன்முறையாக மாறலாம் என்பது தான் நான் சொல்ல வந்தது" என்று கூறியுள்ளார்.

’கபீர் சிங்’ வெளியாகி மூன்று வாரங்கள் ஆகவுள்ள நிலையில், படம் 235கோடி ரூபாய்க்கும் அதிகமாக வசூலித்துள்ளது. 2019ல் அதிகம் வசூலிக்கும் படமாக இது மாறும் என்று இப்போதே பலர் யூகிக்க ஆரம்பித்துவிட்டனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x