Published : 18 Dec 2013 10:23 AM
Last Updated : 18 Dec 2013 10:23 AM
'தூம் 3' பத்திரிக்கையாளர் சந்திப்பில் "நான் ரஜினியின் மிகப ்பெரிய ரசிகன்" என்று இந்தி முன்னணி நடிகர் அமீர்கான் கூறினார்.
இம்மாதம் 20-ம் தேதி வெளியாக இருக்கும் 'தூம் 3' படத்தினை விளம்பரப்படுத்தும் நோக்கில் படக்குழு சென்னை வந்திருந்தது. அமீர்கான், அபிஷேக் பச்சன், கத்ரீனா கைஃப், உதய் சோப்ரா, இயக்குநர் விஜய்கிருஷ்ணா ஆச்சார்யா ஆகியோர் கலந்து கொண்டார்கள்.
அப்போது பேசிய அமீர்கான், " ’தூம் 3’ படத்தில் சர்க்கஸ் கலைஞனாக, வில்லன் வேடத்தில் நடிக்கிறேன். தமிழ்நாட்டில் எனது படங்களுக்கு நல்ல வரவேற்பு இருக்கிறது. ஆகையால் 'தூம் 3 ' தமிழில் டப் செய்து வெளியிடப்படுகிறது.
நான் ரஜினியின் மிகப்பெரிய ரசிகன். தமிழில் எனக்குப் பிடித்த நடிகர் ரஜினிகாந்த் தான், முதலில் 'Aatank Hi Aatank' படத்தில் அவருடன் இணைந்து நடித்தேன். முதலில் அவருடன் நடிப்பது பதற்றமாக இருந்தது. எனக்கு தைரியம் அளித்து நடிக்க வைத்தார். அப்படத்தின் படப்பிடிப்பின் போது ரஜினியின் மனித நேயம், நேரம் தவறாமை உள்ளிட்ட பல விஷயங்கள் எனக்கு வியப்பாக இருந்தன. அதற்கு பிறகு எனக்கு ரஜினியின் மீது மரியாதை அதிகரித்து விட்டது.
சூர்யா நடித்த கஜினி படத்தை பார்த்துவிட்டு நான் அசந்து போனேன். வில்லன்களை துரத்தி அடித்து பழி வாங்குவது போல் இதற்கு முன்பு நான் நடித்ததில்லை. அதனால் சூர்யாவுடன் போனில் பேசினேன். என்னால் உங்கள் அளவுக்கு நடிக்க முடியுமா? என்று அவரிடம் கேட்டேன். நிச்சயமாக உங்களால் நடிக்க முடியும் என்று தைரியம் சொன்னார் சூர்யா. அவர் கொடுத்த தைரியத்தில்தான் நடித்தேன்.
'தாரே ஜமீன் பர்' படத்தை இயக்கிதற்காக சென்னையில் இயக்குநர் கே.பாலசந்தர் கையால் விருது வழங்கினார்கள். பாலசந்தர் பேசும்போது என் நடிப்பை மிகவும் புகழ்ந்து பேசினார். எனக்கு கண்ணீர் வந்துவிட்டது. சமீபத்தில் சர்வதேச பட விழாவிற்காக சென்னை வந்த போது கே.பாலசந்தரை நேரில் சந்தித்து பேசினேன். அப்போது அவர் தூம்-3 படத்தை பற்றி கேட்டு எனக்கு வாழ்த்து கூறினார். அவருடைய 'உன்னால் முடியும் தம்பி' படத்தின் ரீமேக்கில் நான் நடிப்பதாக வரும் செய்திகள் வெறும் வதந்திதான்.
எனக்கு தமிழ் தெரியாததால் நேரடி தமிழ் படங்களில் நடிக்க தயக்கமாக இருக்கிறது. தமிழ் தெரியாத கதாபாத்திரத்தில் நடிக்க தயாராக இருக்கிறேன்.
நான் நடிக்கும் ஒவ்வொரு படமும் மிகவும் முக்கியமானது. ஒவ்வொரு படத்திலும் நான் ஏற்று நடிக்கும் கதாபாத்திரங்களை அதிகமாக நேசிக்கிறேன். பாலிவுட் பொறுத்தவரை, தென்னிந்திய கலைஞர்களை மிக அதிகமாக நேசிக்கிறோம். ஏ.ஆர்.ரகுமான், ஏ.ஆர்.முருகதாஸ், ரவி கே.சந்திரன் உள்ளிட்டவர்கள் இந்தி திரையுலகில் சாதித்து இருக்கிறார்கள்.
என்னை அதிகம் தெரியாத தமிழக ரசிகர்களிடம் இப்படத்தின் மூலம் ஒரு புதுமுக நடிகனாக அறிமுகமாவதை நினைத்து நான் பெருமையடைகிறேன்.“ என்றார்.
கத்ரீனா கைஃப் பேசும் போது, " தமிழில் ’பிதாமகன்’ நான் மிகவும் ரசித்த படம். விக்ரமின் நடிப்பை பார்த்து நான் வியந்து விட்டேன். தமிழில் நடிக்க வாய்ப்புகள் வருகிறது, ஆனால் மொழி தெரியாத காரணத்தால் நான் தயக்கமாக இருக்கிறது. "என்றார்.
அபிஷேக் பச்சன் பேசும் போது “ தமிழ்நாட்டிற்கு நிறைய படங்களின் படப்பிடிப்பிற்கு வந்திருக்கிறேன். மணிரத்னம், விக்ரம் உள்ளிட்ட பல நண்பர்கள் எனக்கு இருக்கிறார்கள். தென்னந்திய படக்குழுவினரின் மதிய உணவிற்கு இடைவேளிக்கு மட்டுமே உட்காருவார்கள், மற்ற நேரமெல்லாம் அவர்களுக்கு பணி மட்டுமே முக்கியம்” என்றார்.
'தூம் 3' படம் வரும் 20ம் தேதி தமிழ்நாடு முழுவதும் பல்வேறு திரையரங்குகளில் பிரம்மாண்டமாக வெளியிட திட்டமிட்டு இருக்கிறார்கள்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT