Published : 09 Jun 2016 05:32 PM
Last Updated : 09 Jun 2016 05:32 PM
'உட்தா பஞ்சாப்' திரைப்படத்தை, சென்சார் அதிகாரிகளின் கையில் மாட்டிச் சீரழியும் மற்றொரு படம் என்று முன்னாள் சென்சார் வாரிய தலைவர் லீலா சாம்சன் கூறியுள்ளார்.
அபிஷேக் சாவ்பே இயக்கியுள்ள இந்தத் திரைப்படம் பஞ்சாப் மாநில இளம் தலைமுறையினர் போதைப்பொருள் வசம் சிக்கியுள்ளது பற்றி விரிவாகச் சித்திரப்படுத்தியுள்ளதாக எழுந்த செய்திகளையடுத்தே கடும் சிக்கல்களில் அகப்பட்டுக் கொண்டது.
இதைத்தொடர்ந்து சர்ச்சைகளில் சிக்கிய படம் சென்சாருக்கு அனுப்பப்பட்டு, படத்தின் காட்சிகளில் 89 இடங்களில் கத்தரி போட பரிந்துரைக்கப்பட்டுள்ளது. தலைப்பிலிருந்து 'பஞ்சாப்' என்பதை அகற்றவும் நிபந்தனை விதிக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.
இந்த சர்ச்சை குறித்து தனது ஃபேஸ்புக் பக்கத்தில் எழுதியுள்ள லீலா சாம்சன், ''நாட்டின் தைரியமான மற்றும் திறமையான திரைத்துறையினரால் உருவாக்கப்பட்ட படம் 'உட்தா பஞ்சாப்'. ஆனாலும் அந்தப் படம், சென்சார் அதிகாரிகளின் கையில் மாட்டிச் சீரழிக்கப்படும் இன்னொரு படமாக மாறி, தேசம் முழுக்க விவாதிக்கப்படும் செய்தியாக மாறிவிட்டது.
உங்களுக்கு இதுவரை தரப்பட்ட நேரம் போதவில்லையா? திரைப்பட உரிமையாளர்களும் சென்சார் அதிகாரிகளும் இதைப் பேசித் தீர்த்துக் கொள்ள போதுமான வாய்ப்புகள் கொடுக்கப்பட்டு விட்டன. திரைத்துறையை திரைத்துறையினர்தான் பார்த்துக்கொள்ள வேண்டும்.
சென்சார் வாரியத்தின் அனைத்துப் பணிகளும் அரசுடன் நேரடித் தொடர்பு கொண்டுள்ளன. முதலில் சென்சார் வாரியத்தை நியமிப்பது யார்?, மறு ஆய்வுக் குழுக்களா? இல்லை அமைச்சகம். மும்பையில் எந்த அதிகாரி பணிபுரிய வேண்டும் என்று சொல்வது யார்? திட்டங்களை வகுப்பது யார்? திரை விழாக்களை நடத்துவது யார்? பெயருக்கு விசாரணைக் குழுவை அமைப்பது யார்? எல்லாமே அமைச்சகம்தான்.
திரைத்துறையின் செயல்பாடுகள், அதிகாரங்கள் அனைத்தும் திரைத்துறைக்குள்ளாகவே நியமிக்கப்பட்டு இருக்கவேண்டும். சுய கட்டுப்பாடு எப்போதும் இருக்க வேண்டிய ஒன்று. ஒன்றிணையுங்கள். போராடுங்கள். இது நல்ல போராட்டம். வாரியங்கள் குழுக்கள் அனைத்துமே போலிகள்'' என்று கூறியுள்ளார்.
பாஜக அரசுடன் ஏற்பட்ட மோதலால் சென்சார் வாரிய தலைவர் பதவியை ராஜினாமா செய்தவர் லீலா சாம்சன் என்பது குறிப்பிடத்தக்கது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT