Published : 10 Jun 2016 06:29 PM
Last Updated : 10 Jun 2016 06:29 PM
ஒரு நடிகையாக எனக்கு ஏராளமான வாய்ப்புகளும், அதன் மூலம் வாழ்த்துகளும் வந்து குவிந்தன. நான் ஆசிர்வதிக்கப்பட்டவளாக உணர்கிறேன் என்று நடிகை வித்யா பாலன் கூறியுள்ளார்.
2005 -ல் வெளிவந்த 'பரினீதா' படத்தின் மூலம் பாலிவுட்டுக்குள் நுழைந்த வித்யா பாலன், அவர் ஆசைப்பட்டதை விட திரையுலகம் அதிகம் கொடுத்திருக்கிறது என்று கூறியுள்ளார். பாலிவுட்டில் தனது 11 வருட திரை வாழ்க்கையைக் கொண்டாடிய வித்யா பாலன், தனக்கு கிடைத்த வாய்ப்புகளுக்காக நன்றி கூறுகிறார்.
இதுகுறித்து நம்மிடம் பேசியவர், ''ஒரு காலத்தில் என்னுடைய ஒரே ஒரு படம் மட்டும் எப்படியாவது வெளியாகி விடவேண்டும் என்று விரும்பினேன். படம் வெளிவந்தவுடன் சந்தோஷப்பட்டேன். ஆனால் இப்போது 11 வருடங்கள் முடிந்துவிட்டன. என்னுடைய எல்லாப் படங்களிலும் எனக்குப் பிடித்த கதாபாத்திரங்களிலும், நடிக்க ஆசைப்பட்ட நபர்களோடும் நடித்திருக்கிறேன்'' என்கிறார்.
'ஹம் பான்ச்' என்ற தொலைக்காட்சி தொடரில் கண்ணாடி அணிந்து ராதிகா என்ற பாத்திரத்தில், தன் நடிப்புலக வாழ்க்கையைத் தொடங்கினார் வித்யா பாலன். பின்னர் 'பரினீதா' படத்தில் நடித்த வித்யா, கேலியான ராதிகா பாத்திரத்தில் இருந்து அடக்கமான லலிதாவாக மாறினார்.
'த டர்ட்டி பிக்சர்', 'பா', 'கஹானி', 'இஷ்கியா' மற்றும் 'நோ ஒன் கில்டு ஜெஸிகா' படங்களின் மூலம் வெற்றியைச் சுவைத்தார். அதே நேரத்தில் 'கன்ஞ்சக்கார்', 'ஷாதி கே சைட் எஃபெக்ட்ஸ்' உள்ளிட்ட படங்கள் தோல்வியைத் தழுவின.
அக்ஷய் குமார், ஜான் ஆபிரஹாம், அபிஷேக் பச்சன், இம்ரான் ஹஷ்மி, சஞ்சய் தத் மற்றும் சாயிஃப் அலிகானுடன் நடித்திருக்கிறீர்கள். ஷாரூக், சல்மான், ஆமிர் ஆகிய மூன்று பெரிய கான்களுடன் எப்போது நடிக்கப் போகிறீர்கள் என்ற கேள்விக்கு, ''எனக்குத் தெரியவில்லை. இப்போது நான் பார்க்கும் வேலையில் திருப்தியாக இருக்கிறேன். இதுவரை செய்யாததற்கோ இல்லை செய்ய வேண்டியது குறித்தோ நான் யோசிக்கவில்லை" என்றும் கூறுகிறார்.
வித்யாவின் 'டிஈ3என்' படம் வெளியான நாளில்தான் வித்யா, அவரின் 11 ஆண்டுகால சினிமா வாழ்க்கையைக் கொண்டாடி இருக்கிறார்.
தனது மற்ற படங்கள் குறித்துக் கூறும் வித்யா பாலன், "அமிதாப் பச்சன் நடிக்கும் ஒரு படத்திலும், 'ஏக் ஆல்பெலா' என்ற மராத்தி படத்திலும் கெஸ்ட் ரோலில் நடித்துள்ளேன். எனக்கு எப்போதுமே மராத்தி படங்களில் நடிக்க வேண்டுமென்ற ஆசை உண்டு. நான் பிறந்து வளர்ந்தது எல்லாமே மும்பையில்தான். என் அம்மா ஏராளமான மராத்தி படங்களைப் பார்ப்பார். என்னுடைய இளம் பிராயத்து சனிக்கிழமை மாலைகள் அனைத்துமே மராத்தி படங்களோடுதான் கழிந்தன.
ஒரு நடிகையாக எனக்கு ஏராளமான வாய்ப்புகளும், அதன் மூலம் வாழ்த்துக்களும் வந்து குவிந்தன. நான் ஆசிர்வதிக்கப்பட்டவளாக உணர்கிறேன். நம் வேலையின் ஏதாவது ஒரு மூலையில் நம் தனிப்பட்ட வாழ்க்கையின் சாயல் இருக்கும்.
'ஏக் ஆல்பெலா' படத்தில் பிரபல நடிகை கீதா பாலியின் பாத்திரத்தில் நடிக்கிறேன். இந்தப் படம் ஒரிஜினல் 'ஆல்பெலா'வின் மறு உருவாக்கமாகவே இருக்கும். இந்த இரண்டு படங்களிலுமே கெஸ்ட் ரோலில் நடித்திருக்கிறேன். இரண்டுமே ஒரே மாதத்தில் வெளியாகின்றன. இந்த ஜூன் மாதம் எனக்கு ஸ்பெஷலாக இருக்கும் என்று நம்புகிறேன்" என்று தெரிவித்திருக்கிறார் வித்யா பாலன்.
தமிழில்:ரமணி பிரபா தேவி
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT