Published : 06 Jan 2017 10:19 AM
Last Updated : 06 Jan 2017 10:19 AM

பிரபல இந்தி நடிகர் ஓம் புரி காலமானார்

இந்தி, ஆங்கிலம், தமிழ் உள்ளிட்ட பல்வேறு மொழிகளில் பிரபலமான நடிகர் பத்மஸ்ரீ ஓம் புரி காலமானார். அவருக்கு வயது 66

இந்தியா, பாகிஸ்தான், பிரிட்டிஷ் மற்றும் ஹாலிவுட் படங்களில் நடித்து மிகவும் பிரபலமானவர் நடிகர் ஓம் புரி. இந்தியாவில் உருவான படங்கள் மட்டுமன்றி இங்கிலாந்து மற்றும் அமெரிக்காவில் தயாரான படங்களிலும் நடித்துள்ளார்.

வெள்ளிக்கிழமை (ஜனவரி 6) காலை ஏற்பட்ட திடீர் மாரடைப்பால் காலமானார். அவருக்கு வயது 66. இவருடைய மறைவு இந்தி திரையுலக நட்சத்திரங்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சமூகவலைத்தளத்தில் அவருடைய மறைவு ஈடுசெய்ய முடியாதது என்று பலரும் தங்களுடைய இரங்கலைப் பதிவு செய்து வருகிறார்கள்.

வாழ்க்கைக் குறிப்பு

ஹரியாணா மாவட்டத்தில் பிறந்தவர் ஓம் புரி. 1976ம் ஆண்டு 'காஷிராம் கோட்வால்' என்ற மராத்தி படத்தின் மூலமாக திரையுலகுக்கு அறிமுகமானார். அம்ரீஷ் புரி, நஷ்ரூதின் ஷா, ஷாபனா ஆஸ்மி போன்ற நடிகர்களோடு திரைக்கலை படைப்புகளில் நடித்து பிரபலமானவர்.

1980 ஆண்டு வெளியான 'ஆக்ரோஷ்' படத்தின் தனது அபாரமான நடிப்பால் பல்வேறு விருதுகளை வென்றார். 1982ம் ஆண்டு உருவான 'காந்தி' படத்தில் சிறுகதாபாத்திரத்தில் நடித்தவர். உலகளவில் பிரிட்டிஷ் படங்களான 'My Son the Fanatic', 'East is East', 'The Parole officer' உள்ளிட்டவற்றில் நடித்து அறியப்பட்டவர். அப்படங்களைத் தொடர்ந்து 'City of Joy', 'The Ghost and the Darkness' போன்ற ஹாலிவுட் படங்களில் ஜாக் நிக்கேல்சன், வால் கில்மர், டாம் ஹாங்க்ஸ், ஜுலியா ரோபட்ஸ் உள்ளிட்ட நடிகர்களோடு நடித்துள்ளார்.

பல்வேறு இந்தி தொலைக்காட்சி தொடர்களில் நடித்துள்ளார் ஓம் புரி, இந்தி படங்களில் அமிதாப் பச்சன், ஷாருக்கான், சல்மான் கான், அமீர் கான், அக்‌ஷய்குமார் போன்ற நடிகர்களோடு நடித்துள்ளார்.

கமல் இரங்கல்

தமிழ் திரையுலகில் கமலோடு 'ஹே ராம்' படத்தில் நடித்துள்ளார். மேலும், கமலுக்கு மிக நெருங்கிய நண்பராக வலம் வந்தவர் ஓம் புரி. அவருடைய மறைவு குறித்து கமல், "இத்தனை ஆண்டுகாலமும் ஓம் புரி எனது நண்பர் என்பதில் பெருமிதம் கொண்டிருந்தேன். அவர் மறைந்துவிட்டார் எனக் கூறும் துணிச்சல் எப்படி வந்தது. அவர் என்றும் நிலைத்திருப்பார் அவருடைய படைப்புகள் வாயிலாக" என தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

சமூக வலைத்தளத்தில் பல்வேறு திரையுலகினரும் ஓம் புரி மறைவு குறித்து தங்களுடைய ஆழ்ந்த இரங்கலை பதிவு செய்து வருகிறார்கள்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x