Published : 09 Jun 2016 05:35 PM
Last Updated : 09 Jun 2016 05:35 PM

வலுவாகிறது உட்தா பஞ்சாப் சென்சார் சர்ச்சை: அனுராக் காஷ்யப் கொந்தளிப்பு

'உட்தா பஞ்சாப்' படத்தில் சுமார் 90 இடங்களில் கத்தரி போடவேண்டும் என்ற சென்சார் குழு முடிவின் தொடர்ச்சியாக பல சர்ச்சைகள் எழுந்துள்ள நிலையில், அந்தப் படத்தின் தயாரிப்பாளர்களுள் ஒருவரும், இந்திய சினிமாவின் குறிப்பிடத்தக்க இயக்குநருமான அனுராக் காஷ்யப் விரிவான கருத்துகளுடன் கொந்தளித்துள்ளார்.

அபிஷேக் சாவ்பே இயக்கியுள்ள 'உட்தா பஞ்சாப்' திரைப்படம் பஞ்சாப் மாநிலத்தின் போதைப்பொருள் இருள் உலகத்தை அப்பட்டமாக வெளிப்படுத்துவதாக எழுந்த தகவல்களைத் தொடர்ந்தே சென்சார் சிக்கல்களில் அகப்பட்டுக் கொண்டது.

அந்தப் படத்தின் தயாரிப்பு நிறுவனமான அனுராக் காஷ்யப்பின் 'ஃபேண்டம் பிலிம்ஸ்' இந்த விவகாரத்தை சட்ட ரீதியாக எதிர்கொள்ளும் அதேவேளையில், பஞ்சாப் அரசின் கைப்பாவையாக சென்சார் வாரியத் தலைவர் செயல்படுவதாக அரசியல் தலைவர்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.

'உட்தா பஞ்சாப்' படத்தின் காட்சிகளில் 89 இடங்களில் கத்தரி போட வேண்டுமென்று சென்சார் வாரியம் முடிவெடுத்ததோடு, தலைப்பிலிருந்து ‘பஞ்சாப்' என்பதை அகற்றவும் நிபந்தனை விதிக்கப்பட்டுள்ளது குறித்து தயாரிப்பாளர்களில் ஒருவரான அனுராக் காஷ்யப் கடுமையாக சாடினார்.

ஆனால், திரைப்படத் தணிக்கை வாரியத் தலைவர் நிஹலானியோ, "அனுராக் காஷ்யப், ஆம் ஆத்மியிடமிருந்து பணம் பெற்றுக் கொண்டு பஞ்சாப் மாநிலத்தை மோசமாகக் காட்டியுள்ளார் என்று நான் கேள்விப்பட்டேன்” என்று கூறி வருகிறார். தற்போது தயாரிப்பாளர்கள் தரப்பினர் மும்பை உயர் நீதிமன்றத்தை நாடியுள்ளனர்.

பஞ்சாப் மாநிலத்தின் ஆளும் கட்சியும், பாஜகவின் கூட்டணி கட்சியுமான சிரோமணி அகாலி தளம், இந்த விவகாரத்தில் முழுக்க முழுக்க உள்நோக்கம் இருப்பதாக கூறுகிறது. அதாவது, இதன் பின்னணியில் ஆம் ஆத்மி இருப்பதாக குற்றச்சாட்டை முன்வைக்கிறது.

நிஹலானி கருத்தை மறுத்துள்ள ஆம் ஆத்மி தலைவரும், டெல்லி முதல்வருமான அர்விந்த் கேஜ்ரிவால், பாஜகவை கடுமையாக குறைகூறியுள்ளார். மத்திய அரசின் அழுத்தம் காரணமாகவே சென்சார் வாரியம் உள்நோக்கத்துடன் செயல்படுவதாக அவர் குற்றம்சாட்டியுள்ளார்.

சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறவுள்ள பஞ்சாப் மாநிலத்தில், உட்தா பஞ்சாப் படத்துக்கும் சென்சார் வாரியத்துக்கும் இடையிலான மோதலுக்கு அரசியல் சாயம் பூசப்பட்டு வருவதாக தெரிகிறது.

அனுராக் காஷ்யப் காட்டம்

இந்நிலையில், சென்சார் அதிகாரிகள் மீது மீண்டும் கடுமையான விமர்சனங்களை அடுக்கி இயக்குநர் அனுராக் காஷ்யப் தனது ஃபேஸ்புக் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவு:

"தணிக்கைத் துறையுடன் கடுமையான போராட்டம் கண்டுள்ளோம். இந்த நேரத்தில் இந்தப் பிரச்சினையிலிருந்து கவனத்தை திசை திருப்பும் வண்ணம் அப்பட்டமான பொய் குற்றச்சாட்டுகள் பரவி வருகின்றன.

நான் பலமுறை தணிக்கைக் குழுவுடன் போராடியுள்ளேன். முதலில் 'பான்ச்' திரைப்படத்துக்காக. அனைவரும் அது தணிக்கையால் தடை செய்யப்பட்ட படம் என நினைத்திருக்கின்றனர். ஆனால், தணிக்கை மறுஆய்வுக் குழு சில காட்சிகளை நீக்கச் சொல்லி படத்தை வெளியிட அனுமதித்தது. அதுதான் தற்போது இணையத்தில் காணக் கிடைக்கிறது.

'பிளாக் ஃப்ரைடே' தணிக்கையால் எந்த வித வெட்டுகளும் இன்றி ஒப்புதல் பெற்றது. ஆனால் வழக்கு நடந்து கொண்டிருந்ததால், நீதிமன்றத்தால் தடை செய்யப்பட்டது. கடைசியில் 2 வருடங்களுக்குப் பிறகு, நீதிபதி சபர்வால், அந்த வழக்கில் தீர்ப்பு வெளியாகும் முன்னரே, படத்தை வெளியிட அனுமதியளித்தார். கிட்டத்தட்ட ஒட்டுமொத்த படமும் அப்படியேதான் வெளியானது. சிவசேனாவைக் குறிக்கும் ஒரு சில காட்சிகள் மட்டும் வேறு வழியின்றி நீக்கப்பட்டன.

'குலால்' எந்த தணிக்கை சர்ச்சையிலும் சிக்கவில்லை. அதில் இருந்த சில வசனங்கள் மட்டும் நீக்கப்பட்டன. அது தயாரிப்பு தரப்பு பிரச்சினையால் முடங்கியது. இணையத்தில் தற்போது வெளிவந்துகொண்டிருக்கும் மீம்களில், அனைத்து படங்களிலும் பல்லாயிரக்கணக்கான வெட்டுகள் இருப்பதாக கூறுகின்றன. ஆனால் அந்த வெட்டுகள், தொலைக்காட்சிக்கான மறு தணிக்கையின் போதே செய்யப்படுகின்றன.

'அக்லி' எந்த பிரச்சினையையும் சந்திக்கவில்லை. புகை பிடித்தல் எச்சரிக்கை விளம்பரத்தை வைக்க மாட்டோம் என சுகாதாரத்துறை அமைச்சகத்துடன் போராடினோம். அப்போதைய அரசாங்கத்துடன் இதுகுறித்து போராட வேண்டும் என நினைத்தது எங்கள் தனிப்பட்ட முடிவே. நீதிமன்ற வழக்கில் நாங்கள் தோற்றோம். படம் எந்த வெட்டும் இன்றி வெளியானது.

'வாட்டர்' படம் படப்பிடிப்பே அனுமதிக்கப்படவில்லை. அது ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் அல்ல. அப்போதுதான் முதன்முதலில் அருண் ஜேட்லியை சந்தித்தேன். அப்போதிலிருந்து இன்றுவரை அவர் மீது நன்மதிப்பு கொண்டுள்ளேன். இந்த சர்ச்சைகளில், போராட்டங்களில் எப்போதுமே நான் அச்சுறுத்தப்படுவதாகவோ, நிர்பந்திக்கப்படுவதாகவோ, என் விருப்பத்துக்கு மாறாக செயல்பட வறுபுறத்தப்படுவதாகவோ நினைக்கவில்லை.

அனைத்து போராட்டங்களுமே நியாயமாக, இரண்டு நம்பிக்கைகளுக்கு நடுவில் நடந்தவை. அந்தப் போராட்டங்கள் அனைத்தும் என்னவென்று தெரியாமல் தோல்வியடையவும் இல்லை. அந்தச் சமயங்களில், எங்கள் எதிரி யார், என்ன, அது ஒரு தனிப்பட்ட நபரா, அல்லது ஒரு சிந்தனையா அல்லது தணிக்கைத் துறையின் புரிதலா என்பது எங்களுக்குத் தெரியும். ஆனால் இது வித்தியாசமானது. இது அச்சுறுத்தல். இது பொய் மூட்டைகள்.

அதிகாரபூர்வமாக எங்களுக்கு கடிதம் கிடைத்தது, நாங்கள் ஊடகங்களை அணுகிய அடுத்த நாள், நீதிமன்றத்தில் முதல் கட்ட விசாரணை முடிந்தவுடனே கிடைத்தது. நிஹ்லானியின் அலுவலகத்திலிருந்து, அவரது கையெழுத்துடன், 7 ஜூன் தேதியிட்ட கடிதம் எங்களிடம் இருக்கிறது. நாங்கள் அதிகாரபூர்வ கடிதம் தருமாறு அவருக்கு அளித்த கோரிக்கை விண்ணப்பத்தின் நகல் இருக்கிறது. எனவே, திங்கள்கிழமை கடிதம் தந்ததாக அவர் கூறுவது அப்பட்டமான பொய்.

படத்தின் வெளியீட்டை தாமதமாக்கவும், சொன்ன வெட்டுகளை ஏற்றுக்கொள்ளவும் தரப்படும் திட்டமிட்ட அழுத்தம் இது. ஆம் ஆத்மி கட்சியிடம் நான் பணம் பெற்றுள்ளதாக அவர் கூறுவது உண்மைக்குப் புறம்பானது. அதோடு, உண்மையான பிரச்சினையிலிருந்து திசைதிருப்பி ஒரு திரைப்பட இயக்குநர் தனது உரிமைக்காக அரசியல் ரீதியாக போராடுமாறு செய்கிறார். இதற்கு இணையத்தில் வரும் நையாண்டிகளும் அவருக்கு திசைதிருப்ப உதவுகின்றன.

கருத்து சுதந்திரத்துக்காக போராடும், எங்கள் உரிமைகளோடு, எங்கள் படத்துக்கும் தணிக்கைத் துறைக்கும் இடையிலான பிரச்சினையாக மட்டுமே இதைப் பார்க்க வேண்டும் என வேண்டுகிறேன். வேறெந்த புரளிகளிலும் தலையிட விரும்பவில்லை.

நான் ஆம் ஆத்மி அல்லது காங்கிரஸ் கட்சிகளை சேர்ந்தவன் அல்ல. எந்த அரசியல் கட்சி சார்புடையவனும் அல்ல. நான் மற்றவர்களை விட மிக அதிகமான படங்களை பணம் வாங்காமல் எடுத்துள்ளேன். நியாயமற்ற முறையில் வரும் பணத்தை வாங்கியதுமில்லை. நன்றி" என்று அனுராக் காஷ்யப் கூறியுள்ளார்.

'உட்தா பஞ்சாப்' சர்ச்சை குறித்து பல்வேறு முன்னணி இந்தி திரையுலக பிரபலங்கள் தங்களது ஆதரவை படக்குழுவுக்கு தெரிவித்து வருவது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x