Last Updated : 27 Jan, 2017 09:19 PM

 

Published : 27 Jan 2017 09:19 PM
Last Updated : 27 Jan 2017 09:19 PM

ராணி பத்மினி கதை ‘பத்மாவதி’ படப்பிடிப்பில் ரகளை: இயக்குநர் சஞ்சய் லீலா பன்சாலி மீது தாக்குதல்

ஜெய்ப்பூரில் ‘பத்மாவதி’ திரைப்படத்தின் படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது. இதில் சர்ச்சைக்குரிய காட்சிகளை நீக்கக் கோரி ஆர்பாட்டக்காரர்கள் செட்டிற்குள் நுழைந்து அடித்து நொறுக்கியதோடு, இயக்குநர் சஞ்சய்லீலா பன்சாலியையும் தாக்கினர்.

செட்டில் ஆர்பாட்டக்காரர்கள் புகுந்து உபகரணங்களை அடித்து நொறுக்கியதோடு, இயக்குநர் பன்சாலியை அடித்து அவரது முடியை பிடித்து இழுத்ததாகவும் ஏஜென்சி செய்திகள் கூறுகின்றன.

பன்சாலி மற்றும் வயாகாம் மோஷன் பிக்சர்ஸ் இணைந்து தயாரிக்கும் திரைப்படம் பத்மாவதியாகும். இதில் தீபிகா பதுகோன், ஷாகித் கபூர், ரன்வீர் சிங் ஆகியோர் நடித்து வருகின்றனர், படத்தை சஞ்சய் லீலா பன்சாலி இயக்கி வருகிறார்.

இந்தப் படம் ராணி பத்மினி பற்றிய கதையைக் கொண்ட வரலாற்றுத் திரைப்படமாகும். வரலாற்றின் படி அலாவுதின் கில்ஜி, ராணி பத்மினியை தன் ஆசைக்கு இணங்க வைக்க கோட்டையை நோக்கி படையெடுத்தார். அப்போது கில்ஜியின் ஆசைக்கு இணங்க மறுத்த ராணி பத்மினி சில பெண்களுடன் தற்கொலை செய்துகொண்டார்.

இந்த வரலாற்றை அடிப்படையாகக் கொண்ட பன்சாலியின் ‘பத்மாவதி’ என்ற திரைப்படத்தில் ராஜபுத்திர வம்சத்தைச் சேர்ந்த ராணி பத்மினியும் அலாவுதின் கில்ஜியும் காதல்வயப்பட்டுள்ளதாக சில காதல் காட்சிகள் இடம்பெற்றுள்ளது என்று ராஜ்புத் கர்னி சேனா அமைப்பினர் கடும் கண்டனம் எழுப்பி வந்தனர். இப்படிப்பட்ட காட்சிகள் இருந்தால் அதனை நீக்க வேண்டும் என்று பன்சாலியை வலியுறுத்தினர்.

“வரலாற்றை தவறாகக் காட்ட வேண்டாம் என்று நாங்கள் பன்சாலியை எச்சரித்தோம். ஷூட்டிங் நடைபெறுவதை அறிந்து இங்கு வந்து எதிர்ப்பைத் தெரிவித்தோம்” என்று ராஜ்புத் கர்னி சேனாவைச் சேர்ந்த நாராயண் சிங் தெரிவித்தார்.

இந்த ரகளையை அடுத்து படப்பிடிப்பு ரத்து செய்யப்பட்டதோடு, இனி ஜெய்ப்பூரில் படப்பிடிப்பு இல்லை என்று படக்குழுவினர் முடிவெடுத்ததாக பிடிஐ செய்திகள் தெரிவிக்கின்றன.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x