Last Updated : 26 May, 2017 06:51 PM

 

Published : 26 May 2017 06:51 PM
Last Updated : 26 May 2017 06:51 PM

மகதீரா படக்குழுவினரின் வழக்கு: ராப்தா படக்குழுவினர் சாடல்

தங்களுடைய பட வெளியீட்டுக்கு எதிராக 'மகதீரா' படக்குழுவினர் வழக்கு தொடுத்திருப்பதற்கு, 'ராப்தா' படக்குழுவினர் கடுமையாக சாடியுள்ளனர்.

சுஷாந்த் சிங், கீர்த்தி சானுன், வருண் சர்மா உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகியுள்ள இந்தி படம் 'ராப்தா'. தினேஷ் விஜயன் இயக்கியுள்ள இப்படம் ஜூன் 9-ம் தேதி வெளியாகவுள்ளது. இதன் ட்ரெய்லர் மற்றும் பாடல்களை வெளியிட்டு படக்குழு விளம்பரப்படுத்தி வருகிறது.

இப்படக்குழுவுக்கு எதிராக தெலுங்கில் பெரும் வரவேற்பைப் பெற்ற 'மகதீரா' படக்குழுவினர் ஹைதராபாத் நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்துள்ளார்கள். 'மகதீரா' படத்தயாரிப்பாளர்களான கீதா ஆர்ட்ஸ் நிறுவனம் விடுத்துள்ள அறிக்கையில், "'மகதீரா' படத்தின் ஒரிஜினல் தயாரிப்பாளர்களாகிய நாங்கள் கீதா ஆர்ட்ஸ் நிறுவனம் சில ட்ரெய்லர் உள்ளிட்ட விளம்பரங்களைப் பார்த்தோம். அதன் மூலம் எங்கள் 'மகதீரா' படத்தை இந்தியில் 'ராப்தா' என்ற பெயரில் ரீமேக் செய்திருப்பதைத் தெரிந்து கொண்டோம். இது காப்புரிமை கொள்கைக்கு எதிரானது" என்று தெரிவித்துள்ளார்கள்.

இந்நிலையில் 'மகாதீரா' படக்குழுவினரின் வழக்கிற்கு 'ராப்தா' படக்குழுவினர் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்கள். அதில் கூறியிருப்பதாவது, "எங்களது ராப்தா படம் தெலுங்குத் திரைப்படமான 'மகதீரா' படத்தின் காப்பி என்று கோரி கீதா ஆர்ட்ஸ் நிறுவனம் ஹைதராபாத்தில் நீதிமன்ற நடைமுறைகளை நாடியுள்ளதாக பத்திரிகை செய்திகள் மூலம் எங்கள் கவனத்துக்கு வந்தது.

எங்களுக்கு இன்னமும் இந்த வழக்கு குறித்த நகல்கள் வராததால் வழக்கின் தன்மை பற்றி கருத்து கூறுவதற்கு எதுவும் இப்போதைக்கு இல்லை என்பதை தெரிவித்துக் கொள்கிறோம்.

ஆனால் ஒன்றைத் தெளிவு படுத்துகிறோம். 'மகதீரா'வின் காப்பிதான் ராப்தா என்பதை வெகுநிச்சயமாக மறுக்கிறோம். ஒரு இரண்டு நிமிட 14 விநாடி ட்ரெய்லரைப் பார்த்து விட்டு உண்மையை ஆராயமல் படம் ரிலீஸ் ஆகி பொதுமக்கள் தங்கள் கருத்துகளை தெரிவிக்கும் வரை காத்திருக்காமல் ராப்தா படம் மகதீராவின் காப்பி, கருத்துத் திருட்டு, சிந்தனைத் திருட்டு என்றேல்லாம் போகிற போக்கில் முடிவுக்குத் தாவுவது இன்னொருவருடைய கடின உழைப்பை சிறுமைப்படுத்தும் செயல் என்பதாகவே நாங்கள் கருதுகிறோம்.

இந்தியாவில் பல பத்தாண்டுகளாக, இருக்கும் காப்புரிமை சட்டத்தின் படி, ‘கருத்துகளிலோ, கதைக்கருக்களிலோ ஒருவரும் காப்புரிமை கோர முடியாது’ என்பதே. இந்திய சினிமா ஒரு தொழிற்துறையாக கருத்துக்களை படைப்புப் பூர்வமாக வெளிப்படுத்துவதை ஊக்குவித்தே வந்துள்ளது. ஒவ்வொரு திரைப்படமும் ஒரு கருத்தை அதற்கேயுரிய தனித்த வழியில் விளக்கம் கொடுத்து அளித்து வருகிறது.

எனவே இத்தகைய ஒவ்வொரு வெளிப்பாடும் அதன் வழியில் தனித்தனியான காப்புரிமைக்குரியதாகும். நாங்களும் இந்த முறையில்தான் அசலான திரைப்படத்தை தொகுத்து வழங்கியுள்ளோம். இது காலவர்த்தமானங்களைக் கடந்த காதல் கதையை அசலான, தனித்த வழியில் தந்தளித்துள்ளது.

ஜூன் 1, 2017-ல் இந்த வழக்கு விசாரணைக்கு வருகிறது. அப்போது நீதிமன்றம் எங்களுடைய தனித்த படைப்பூக்க வெளிப்பாட்டுக்கான இந்த விளக்கத்தை ஏற்றுக் கொள்ளும் என்று நாங்கள் உறுதியாக நம்புகிறோம்." என்று தெரிவித்துள்ளார்கள்.

'மகதீரா' படக்குழு தொடுத்துள்ள வழக்கால், ஜுன் 9ம் தேதி 'ராப்தா' படம் வெளிவருவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x