Last Updated : 20 Jun, 2019 01:23 PM

 

Published : 20 Jun 2019 01:23 PM
Last Updated : 20 Jun 2019 01:23 PM

என் காதலர் முஸ்லிம் என்பதால் அப்பா அறைந்தார்: ஹ்ரித்திக் ரோஷன் சகோதரி குற்றச்சாட்டு

நடிகர் ஹ்ரித்திக் ரோஷன் சகோதரி சுனைனா இஸ்லாமிய மதத்தைச் சேர்ந்த ஒருவரைக் காதலிப்பதால் குடும்பத்தில் கடும் எதிர்ப்பைச் சந்தித்து வருவதாகக் கூறியுள்ளார்.

பாலிவுட்டின் பிரபல இயக்குநர் ராகேஷ் ரோஷனின் மகள் சுனைனா ரோஷன். இவரது அண்ணன் ஹ்ரித்திக் ரோஷனும் பாலிவுட்டின் முன்னணி நட்சத்திரங்களில் ஒருவர். ஹ்ரித்திக் ரோஷனின் தனிப்பட்ட வாழ்க்கையில் கடந்த சில வருடங்களாகவே அடுத்தடுத்த பிரச்சினைகள் வந்த வண்ணம் உள்ளன.

கங்கணாவுடனான பிரச்சினையைத் தொடர்ந்து மனைவியையும் விவாகரத்து செய்தார் ஹ்ரித்திக். தற்போது ஹ்ரித்திக் சகோதரி தனது குடும்பத்தின் மீது குற்றச்சாட்டு வைத்துள்ளார்.

"நான் ஒரு முஸ்லிமைக் காதலிப்பதால் என் காதலை ஒப்புக்கொள்ள மறுக்கின்றனர். என் தந்தை என்னை அறைந்தார். நான் காதலிக்கும் நபர் ஒரு தீவிரவாதி என்றார். ஆனால் ருஹைல் தீவிரவாதி அல்ல. அப்படி இருந்தால் எப்படி சுதந்திரமாக அவரால் ஒரு ஊடகத்தில் வேலை செய்து கொண்டிருக்க முடியும்?

இதைப் பற்றி இப்போது விரிவாகப் பேச வேண்டாம் என்று நினைக்கிறேன். ஆனால், என் குடும்பத்தினர் ருஹைலை ஏற்றுக்கொள்ள வேண்டாம். ஏனென்றால் அவர்கள் என் வாழ்க்கையை நரகமாக்கி வருகின்றனர். என்னால் பொறுத்துக் கொள்ள முடியவில்லை. அவரைச் சந்திக்கக் கூடாது என்கிறார்கள். என் திருமணத்தைப் பற்றி எனக்குத் தெரியாது. ஆனால், எனக்கு இப்போது ருஹைலுடன் இருக்க வேண்டும்.

ஹ்ரித்திக்கால் எதுவும் செய்ய முடியாது. ஏனென்றால் அவர் என் தந்தை சொல்வதைத்தான் கேட்பார். யாருக்கும் என் காதல் பிடிக்கவில்லை. எனக்கு மும்பையில் எங்கு வேண்டுமோ அங்கு ஒரு வீடு வாங்கித் தருவதாக ஹ்ரித்திக் உறுதியளித்திருந்தார். ஆனால் அதைச் செய்யவில்லை.

நான் வீட்டை விட்டு வெளியே வந்து வாடகைக்கு வீடு பார்க்கும்போது, அது மிகவும் விலை உயர்ந்தது என்று கூறிவிட்டார். மாதம் 2.5 லட்சம் என்பது அவருக்கு அதிக விலையா? ஹ்ரித்திக் கொடுத்த வாக்கை அவர் காப்பாற்றவில்லை. எல்லோரும் இன்று என்னைக் கொடுமைப்படுத்துகின்றனர்.

இரண்டு மாதம் செலவு செய்ய எனக்கு 50,000 மட்டுமே என் அம்மா கொடுத்தார். ஏன் எனக்கு அதிகம் கொடுக்கக் கூடாது. நான் அவர்கள் பெண். ரோஷன் குடும்பத்தில் இருக்கும் எனக்கு அதிக பணம் பெறும் உரிமை இல்லையா? இது குறித்து நான் கங்கணாவைத் தொடர்புகொள்ளக் காரணம், அவர் தான் பெண் சக்திக்கு பிரதிநிதியாக இருக்கிறார்" என்று சுனைனா பேசியுள்ளார்.

சுனைனாவுக்கு உளவியல் ரீதியாக பிரச்சினை இருப்பதாக சில வாரங்களுக்கு முன் தகவல்கள் வந்தன. ஆனால், அது புரளி என சுனைனா மறுத்திருந்தார். கங்கணாவின் சகோதரி ரங்கோலி, இந்தப் புரளிகளைப் பரப்புவது ஹ்ரித்திக் தரப்புதான் என்றும் குற்றச்சாட்டு வைத்திருந்தது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x