Published : 03 May 2019 05:17 PM
Last Updated : 03 May 2019 05:17 PM
'அவெஞ்சர்ஸ்: எண்ட்கேம்' வசூலை 'பாகுபலி 2' வசூலோடு ஒப்பிட்டு கருத்து தெரிவித்த பிரபல வர்த்தக நிபுணரைச் சாடியுள்ளார் 'பாகுபலி' தயாரிப்பாளர்.
2008-ம் ஆண்டு தொடங்கிய மார்வெல் சினிமாட்டிக் உலகத்தின் கதை, 'அவெஞ்சர்ஸ்: எண்ட்கேம்' திரைப்படத்துடன் முடிகிறது. ஏப்ரல் 26-ம் தேதி இந்தியாவில் வெளியான இப்படம் மாபெரும் வசூல் சாதனை நிகழ்த்தி வருகிறது.
ராபர்ட் டவுனி ஜூனியர், க்ரிஸ் எவான்ஸ், மார்க் ருஃப்பாலோ, ஸ்கார்லெட் ஜொஹான்ஸன் நடித்துள்ள இப்படத்தை, ரூஸோ ப்ரதர்ஸ் இயக்கியுள்ளனர். முதல் நாளிலேயே உலக அளவில் 305 மில்லியன் டாலர்கள் வசூல் செய்து இப்படம் சாதனை புரிந்துள்ளது.
'அவெஞ்சர்ஸ்: எண்ட்கேம்' இந்தியாவில் மட்டும் அனைத்து மொழிகளும் சேர்த்து, மே 2-ம் தேதி வரை 260.40 கோடி ரூபாய் வசூல் செய்துள்ளது. இதனை மற்ற இந்திப் படங்களின் வசூலுடன் ஒப்பிட்டு பிரபல இந்தி திரைப்பட விமர்சகரும், சினிமா வர்த்தக நிபுணருமான தரண் ஆதர்ஷ் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்தார்.
இது தொடர்பாக, “'அவெஞ்சர்ஸ்: எண்ட்கேம் vs இந்தி பெரிய படங்கள் - முதல் வார வசூல் நிலவரம். 'அவெஞ்சர்ஸ்: எண்ட்கேம்’ - ரூ.260.40 கோடி, 'பாகுபலி 2'(இந்தி) - ரூ.247 கோடி, 'சுல்தான்' - ரூ.229.16 கோடி, 'டைகர் ஜிந்தா ஹே' - ரூ.206.04 கோடி, 'சஞ்சு' - ரூ.202.51, 'தங்கல்' - ரூ.197.54 கோடி' என தெரிவித்தார் தரண் ஆதர்ஷ்.
இந்த ஒப்பீட்டை விமர்சித்திருக்கிறார் 'பாகுபலி' தயாரிப்பாளர் சோபு. தரண் ஆதர்ஷ் ட்வீட்டைக் குறிப்பிட்டு, “கீழே பட்டியலிடப்பட்டுள்ள எந்தப் படத்தின் வெற்றியையும் நான் குறைவாகப் பேசவில்லை. இது சரியான ஒப்பீடு இல்லை என நான் நினைக்கிறேன்.
அதுவும் உங்களைப் போன்ற அனுபவமுள்ள வர்த்தக நிபுணரிடமிருந்து இது வரும்போது. 'பாகுபலி 2' ஒரே மொழி. பெரும்பாலும் வட இந்தியா மட்டுமே அதற்கு எதிராக தேசிய அளவில் எல்லா மொழிகளைச் சேர்ந்த படங்களையும் ஒப்பிடுவதா?" என்று தெரிவித்துள்ளார் சோபு.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT