Published : 13 Sep 2014 11:51 AM
Last Updated : 13 Sep 2014 11:51 AM

திரை விமர்சனம்: மேரி கோம் (இந்தி)

குத்துச்சண்டை வீராங்கனை மேரி கோம் வாழ்க்கை வரலாறை பாலிவுட்டுக்கு கொண்டுவந்திருக்கிறார் இயக்குநர் ஓமங் குமார். விளையாட்டு வீரர்களின் வாழ்க்கை வரலாற்றுத் திரைப்படங்கள் பாலிவுட்டுக்கு புதிதல்ல. ஏற்கனவே மில்கா சிங்கின் வாழ்க்கை பாலிவுட்டில் படமாகியுள்ளது. இப்போது மேரி கோம்.

மணிப்பூரின் ஏழை விவசாயின் மகளான மேரி கோம் (பிரியங்கா சோப்ரா) எப்படி ஐந்து முறை உலக சாம்பியனாக உருவானார் என்பதைப் பதிவு செய்திருக்கிறார் இயக்குநர்.

பள்ளிப் பருவத்திலிருந்தே குத்துச்சண்டையில் அதீத ஆர்வம். ஆனால், மேரி கோமின் அப்பா (ராபின் தாஸ்) அவரைத் தடகள விளையாட்டுகளில் ஆர்வம் செலுத்தச் சொல்கிறார். அப்பாவின் எதிர்ப்பையும் மீறிக் குத்துச்சண்டை பயிற்சி வகுப்புக்கு செல்கிறார் மேரி கோம். பயிற்சியாளர் நர்ஜித் சிங் (சுனில் தாபா) எடுத்தவுடனே குத்துச்சண்டை கற்றுக்கொடுக்காமல் மேரிக்குக் குத்துச்சண்டை மீதிருக்கும் பேரார்வத்தை உறுதிசெய்த பிறகே விளையாட்டைக் கற்றுக்கொடுக்கிறார். மேரி கோம் குத்துச்சண்டைப் போட்டிகளில் தொடர்ந்து பெறும் வெற்றிகளால் உலக சாம்பியன் அளவுக்கு உயர்கிறார்.

ஆனால், மேரி கோம் தன் நண்பனான ஆன்லரை (தர்ஷன் குமார்) காதலித்துத் திருமணம் செய்துகொண்ட பிறகு எல்லாமே மாறிவிடுகிறது. பயிற்சியாளர் நர்ஜித் சிங், திருமணத்துக்குப் பிறகு பயிற்சி அளிக்க மறுத்துவிடுகிறார். மேரி கோம் இரண்டு குழந்தைகளுக்கு தாயான பிறகு விளையாட்டு உலகம் அவரைக் கிட்டத்தட்ட மறந்தே விடுகிறது. மேரி கோம் எப்படி போராடிக் குத்துச்சண்டையில் மீண்டும் உலக சாம்பியன் ஆகிறார் என்பதை பாலிவுட்டின் எந்த அம்சத்தையும் விட்டுக்கொடுக்காமல் சொல்லியிருக்கிறார் இயக்குநர் ஓமங் குமார்.

சஞ்சய் லீலா பன்சாலி தயாரித்திருக்கும் இந்தப் படத்துக்கு சாய்வின் குவத்ராஸ் கதை, திரைக்கதை எழுதியிருக்கிறார். பாலிவுட்டின் மெலோடிராமாவுக்கு மேரி கோமும் தப்பிக்கவில்லை என்பதை சாய்வின் குவத்ராஸ் தன் திரைக்கதை மூலம் உறுதிப்படுத்தியிருக்கிறார். ஆஸ்கார் விருது வாங்கிய 'மில்லியன் டாலர் பேபி' படத்தில் வரும் காட்சிகளின் தாக்கத்தை மேரி கோமின் குத்துச் சண்டைக் காட்சிகளில் பார்க்கலாம்.

மேரி கோமின் வாழ்க்கையைச் சுவாரஸ்யமான திரைக்கதையில் தந்திருப்பது பாராட்டுக்குரிய விஷயம். ஆனால் அவரது வாழ்க்கையின் போராட்டத்தை அதற்கான அழுத்தத்துடன் முழுமையாகத் திரையில் கொண்டுவரத் தவறியிருக்கிறார் இயக்குநர். வடகிழக்கு மாநிலங்களின் பிரச்சினை, விளையாட்டில் இருந்து அனைத்துத் துறைகளிலும் அம்மாநில மக்கள் சந்திக்கும் பிரச்சினை என அனைத்தையும் மேரி கோமும் தன் வாழ்க்கையில் சந்தித்திருக்கிறார். ஆனால், இத்திரைப்படம் அதை மேலோட்டமாக ஒரு சில காட்சிகளில் மட்டுமே பதிவுசெய்திருப்பதில் நிஜத்தின் கனம் தவறவிடப்பட்டிருக்கிறது.

இந்தியப் பெண்களுக்கு மேரி கோம் ஒரு சிறந்த முன்னுதாரணம் என்பதில் எந்தச் சந்தேகமும் இல்லை. இந்தியாவில் ஒரு பெண் குடும்ப வாழ்க்கை, பணி வாழ்க்கை என இரண்டையும் நிர்வகிப்பது எவ்வளவு சவாலான விஷயம் என்பதைப் பதிவுசெய்வதில் இப்படம் வெற்றியடைந்திருக்கிறது. மேரி கோமின் கணவர் ஆன்லர் மாதிரியெல்லாம்கூட ஆண்கள் இந்தியாவில் இருக்கிறார்களா என்ற ஆச்சரியத்தை ஆன்லரின் கதாபாத்திரச் சித்தரிப்பு ஏற்படுத்துகிறது.

மேரி கோமின் வாழ்க்கைக்குத் திரையில் உயிர் கொடுக்க வேண்டுமென்று பிரியங்கா எடுத்திருக்கும் கடுமையான முயற்சிகளை நிச்சயம் பாராட்ட வேண்டும். மேரி கோம் கதாபாத்திரத்துக்கு இயக்குநர் நியாயம் செய்யாவிட்டாலும் பிரியங்கா அதைத் தன் நடிப்பு மூலம் நியாயம் செய்துவிடுகிறார். சுனில் தாபா, தர்ஷன் குமார் என முக்கியக் கதாபாத்திரங்கள் தேர்வும் படத்துக்கு வலுசேர்க்கிறது.

மேரி கோம் திரைப்படத்தைக் கட்டாயம் மேரி கோமுக்காகவும் பிரியங்காவுக்காகவும் பார்க்கலாம்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT

    Be the first person to comment

 
x