Published : 28 Dec 2024 06:37 PM
Last Updated : 28 Dec 2024 06:37 PM

இயக்குநர் சாய் பரஞ்பாய்-க்கு பத்மபானி வாழ்நாள் சாதனையாளர் விருது!

மும்பை: இந்த ஆண்டுக்கான பத்மபானி வாழ்நாள் சாதனையாளர் விருதைப் பெறுகிறார் பிரபல இயக்குநர், திரைக்கதையாசிரியர், தயாரிப்பாளர், நாடக ஆசிரியரான சாய் பரஞ்பாய். இந்திய சினிமாவுக்கு அவர் அளித்த மகத்தான பங்களிப்புக்காக இந்த கவுரவம் அளிக்கப்படுகிறது.

இந்தியா மற்றும் உலகெங்கிலும் உள்ள தனித்துவமான திரைப்படங்களின் கொண்டாட்டமான 10-வது அஜந்தா - எல்லோரா சர்வதேச திரைப்பட விழா (AIFF 2025) வரும் ஜனவரி 15ம் தேதி முதல் 19ம் தேதி வரை நடைபெற இருக்கிறது. இந்த விழாவில்தான் சாய் பரஞ்பாய்க்கு பத்மபானி வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கப்பட இருக்கிறது. இதற்கான அறிவிப்பினை, அஜந்தா எல்லோரா சர்வதேச திரைப்பட விழா ஏற்பாட்டாளர் குழு தலைவர் நந்த்கிஷோர் கல்லிவால், வழிகாட்டி அன்குஷ்ராவ் கடம், கவுரவத் தலைவர் அசுடோஷ் கவுரிகேர் ஆகியோர் சனிக்கிழமை அறிவித்தனர்.

பத்மபானி விருது தேர்வுக் குழுவில் பிரபல விமர்சகர் லதிகா பட்கனோகர் (தலைவர்), இயக்குநர் அசுகோஷ் கவுரிகேர், சுனில் சுக்தங்கர் மற்றும் சந்திரகாந்த் குல்கர்னி ஆகியோர் இடம்பெற்றிருந்தனர். இந்த விருது பத்மபானி நினைவுப் பரிசு, கவுரவக் கடிதம், ரூ.2 லட்சம் ரொக்கப் பரிசு ஆகியவை உள்ளடக்கியது.

அஜந்தா எல்லோரா சர்வதேச திரைப்பட விழாவின் தொடக்க விழா, 2025-ம் ஆண்டு ஜனவரி 15-ம் தேதி, சத்திரபதி சம்பாஜிநகரில் உள்ள எம்ஜிஎம் பல்கலைக்கழக வளாகத்திலுள்ள ருக்மினி அரங்கத்தில் நடைபெற இருக்கிறது. அந்த விழாவில் சாய் பரஞ்பாய்க்கு பத்மபானி வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கப்பட இருக்கிறது. திரைப்பட விழா தொடர்ந்து ஐந்து நாட்கள் நடைபெற இருக்கிறது.

கடந்த 40 ஆண்டுகளாக இந்திய சினிமாவின் குறிப்பிடத்தக்க ஆளுமையாக சாய் பரஞ்பாய் அறியப்படுகிறார். பெரும் தாக்கத்தை ஏற்படுத்திய இவரது இந்தி திரைப்படங்கள் இந்திய சினிமாவுக்கு தனித்த அடையாளத்தைக் கொடுத்தன. இவரது திரைப்படங்களில் ஆழமான உணர்வுகளின் தொடர்புகள், மனித உணர்வுகளின் நுண்ணிய வர்ணணைகள் விரவிக்கிடந்தன. ஸ்பார்ஷ் (1980), சாஷ்மே புத்தூர் (1981), கதா (1983), திஷா (1990) சூடியான்(1993) மற்றும் ஷாஜ் (1997) போன்றவை குறிப்பிடத்தகுந்தவை. படங்களை இயக்கியதுடன் சாய் பரஞ்பாய் பல்வேறு குறிப்பிடத் தகுந்த நாடகங்கள், குழந்தை நாடகங்களையும் இயக்கியுள்ளார்.

மராத்தி இலக்கியத்துக்கு, குறிப்பாக குழந்தை இலக்கியத்துக்கு பெரும் பங்காற்றியுள்ளார். இவரது குறிப்பிடத்தகுந்த பங்களிப்பினை அங்கீகரிக்கும் வகையில் இந்திய அரசு 2006-ம் ஆண்டு இவருக்கு பத்ம பூஷண் விருது வழங்கிய கவுரவித்தது. அதேபோல் பிலிம் ஃபேர் விருது, மகாராஷ்டிரா நிறுவனர் விருது உள்ளிட்ட விருதுகளும் பெற்றுள்ளார். இவை அனைத்துக்கும் மேலாக, இந்திய குழந்தைகள் திரைப்பட சங்கத்துக்கு (CFSI) தொடர்ந்து இரண்டு முறை தலைவராக இருந்துள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x