Published : 25 Dec 2024 05:56 PM
Last Updated : 25 Dec 2024 05:56 PM
’ராஜா ராணி’ என்ற தனது ரொமான்டிக் படத்தை கொடுத்த அட்லீ, இரண்டாவது படத்திலேயே விஜய்யை வைத்து தன்னை தமிழின் தவிர்க்க முடியாத இயக்குநராக தடம் பதித்த படம் ‘தெறி’. விஜய்யின் கரியரில் முக்கியமான படங்களில் ஒன்றான இதனை தற்போது இந்தியில் தயாரித்துள்ளார் அட்லீ.
கேரளாவில் தனது 5 வயது மகளுடன் பேக்கரி ஒன்றை நடத்தி அமைதியான வாழ்க்கை வாழ்ந்து வருகிறார் ஜான் டி சில்வா என்னும் பேபி ஜான் (வருண் தவன்). எந்த வம்புக்கும் போகாமல் வாழும் அவருக்கு எதிர்பாராத விதமாக ஒரு பிரச்சினை வந்து சேர்கிறது. தான் யார் என்பதை தனது மகளின் பள்ளி ஆசிரியையிடம் (வாமிகா) சொல்லத் தொடங்குகிறார். இன்னொரு புறம் இவரை கொல்வதற்காக வெறியுடன் காத்துக் கொண்டிருக்கும் வில்லன் நானாஜிக்கும் (ஜாக்கி ஷெரோஃப்) பேபி ஜானுக்கு என்ன பகை? இதற்கெல்லாம் பதில் சொல்கிறது படம்.
விஜய் நடித்த ‘தெறி’ தென்னிந்தியாவில் பெரும் ஹிட்டடித்தது மட்டுமின்றி யூடியூபில் இந்தியில் டப் செய்யப்பட்டு பல லட்சம் பார்வைகளை பெற்ற ஒரு படம். ஏற்கனவே பலருக்கும் தெரிந்த ஒரு கதையை பெரிதாக எந்த மாற்றமும் செய்யாமல் அப்படியே ரீமேக்கி உள்ளார் இயக்குநர் காலீஸ். ஏழு எட்டு வருடங்களுக்கு முன்பு வந்த ‘தெறி’யில் அப்போது இருந்த விஜய்யின் மார்கெட், தமிழ் சினிமாவின் டிரெண்டுக்கு ஏற்ப வைக்கப்பட்ட காட்சிகள் கூட அப்படியே அச்சு பிசகாமல் இதிலும் இடம்பெற்றுள்ளன.
குறிப்பாக படத்தின் முதல் 40 நிமிடங்கள் எதற்கென்றே தெரியவில்லை. இவை அசலிலும் உண்டு என்றாலும் அப்போது இருந்த ரசிகர்களின் மனநிலைக்கு அதெல்லாம் ஒரு குறையாக தெரியவில்லை. ஆனால் இத்தனை ஆண்டுகளுக்குப் பிறகும் கூட கதைக்கு சற்றும் சம்பந்தமே இல்லாத காட்சிகளை கொண்டு வந்து வைத்திருப்பதை ரசிக்க முடியவில்லை. ’தெறி’ படத்திலேயே சில நல்ல காட்சிகளை தவிர்த்து மற்றவை பெரும்பாலும் விஜய் ரசிகர்களுக்காக வைக்கப்பட்ட பில்டப் காட்சிகளாகத்தான் இருக்கும். ஆனால் அதை அப்படியே வருண் தவனுக்கும் வைத்திருப்பது எந்த வகையில் நியாயம்.
படத்தின் இடைவேளைக்கு முன்பாக வரும் காட்சியமைப்பு உண்மையிலேயே பாராட்டத்தக்கது. அந்த காட்சியில் வரும் காளி வெங்கட்டின் நடிப்பும், பின்னணி இசையும் யாரையும் கண்கலங்க வைத்து விடும். ’தெறி’யில் கூட அந்த காட்சி வசனங்கள் மூலமே கொண்டு செல்லப்பட்டிருக்கும். அதில் வில்லனின் மகனை பாலத்தில் கட்டி தலைகீழாக தொங்க விட்ட காட்சியை இங்கு வேறு மாதிரி மாற்றி யோசித்திருந்தது சிறப்பு. அதுவே இடைவேளை காட்சியுடனும் நன்கு ஒன்றச் செய்கிறது.
பேபி ஜான் / சத்யா வர்மாவாக விஜய்யின் வசீகரத்தை ஓரளவு தொட முயன்றிருக்கிறார் வருண் தவன். எனினும் போலீஸ் கெட்-அப்பில் ஃபுல் ஷேவில் அமுல் பேபி போல அவரது முகம் காட்சியளிக்கிறது. அத்துடன் அவர் பேசும் பன்ச் வசனங்கள் எடுபடவில்லை. ஆனால் ஆக்ஷன் காட்சிகளில் அவரது ஆகிருதியான உடற்கட்டு நம்பகத்தன்மைக்கு வலு சேர்க்கிறது. முதல் பாகத்தில் ஏமி ஜாக்சனின் கதாபாத்திரம் வெறும் ஊறுகாய் போல வந்து செல்லும். இதில் அதை மாற்றுகிறேன் என்று வாமிகாவுக்கு ஒரு பின்னணியை வைத்திருந்தது எல்லாம் காமெடி இல்லாத குறையை போக்கியது. இந்தியில் அறிமுகம் ஆகியுள்ள கீர்த்தி சுரேஷ் தனது பணியை குறையின்றி செய்திருக்கிறார்.
‘தெறி’ படத்தில் வில்லனாக நடித்திருந்த இயக்குநர் மகேந்திரன் தனது ஆர்ப்பாட்டமில்லாத அமைதியான நடிப்பிலேயே வில்லத்தனத்தை சிறப்பாக காட்டியிருப்பார். ஆனால் இங்கு வில்லன் ஜாக்கி ஷெரோஃப் கோரமான தோற்றத்துடன் பார்வையாளர்களை பயமுறுத்த ஏதேதோ செய்தாலும் அவரது கதாபாத்திரம் படு ‘வீக்’ ஆக இருக்கிறது. இதனால் ஹீரோ வில்லன் மோதல் தொடர்பான காட்சிகளில் பெரிய ஈர்ப்பு எதுவும் இல்லை.
படத்தின் சிறப்பம்சம் அதன் ஆக்ஷன் காட்சிகள் தான். எப்படியாவது பான் இந்தியா ஆடியன்ஸை கவர்ந்து விட வேண்டும் என்கிற முனைப்பு ஆக்ஷன் காட்சிகளில் ஒவ்வொரு பிரேமிலும் தெரிகிறது. அன்பறிவ், அனல் அரசு, சில்வா, யானிக் பென் என ஒரு பெரிய குழு படத்தின் ஆக்ஷன் காட்சிகளுக்காக உழைத்திருக்கிறது. தமனின் இசையில் ‘நைன்மா டக்கா’ பாடல் மட்டும் சமூக வலைதளங்களில் ரீல்ஸ் மூலம் திரும்ப திரும்ப கேட்டதால் ஓகே ரகம். மற்ற பாடல்கள் படுசுமார். பின்னணி இசை பல இடங்களில் இரைச்சல்.
படத்தின் க்ளைமாக்ஸில் வரும் முக்கிய கேமியோ அட்லீயின் அடுத்த படத்துக்கான குறியீடாக இருக்கலாம். இதன் மூலம் எல்சியு போல தனக்கென ஒரு யுனிவர்சை அட்லீ உருவாக்குகிறாரோ என்று தோன்றுகிறது.
ஓரிரு காட்சிகளைத் தவிர பெரிதாக எந்த மாற்றமும் செய்யாமல் வெளியாகி இருக்கும் இந்த ரீமேக்கில் ஓரிரு காட்சிகளைத் தவிர புதிதாக ஈர்க்கத் தகுந்த எந்த அம்சமும் இல்லாத காரணத்தால் ‘தெறி’யைப் போல தெறிக்க விடத் தவறுகிறது ’பேபி ஜான்’.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT