Published : 23 Dec 2024 10:14 PM
Last Updated : 23 Dec 2024 10:14 PM

“இந்திய சினிமாவின் திசையை மாற்றியவர்” - ஷியாம் பெனகல் மறைவுக்கு திரையுலகினர் இரங்கல்

மும்பை: இயக்குநர் ஷியாம் பெனகல் மறைவுக்கு இந்திய திரையுலக பிரபலங்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். இயக்குநர் ஷியாம் பெனகல் திங்கள்கிழமை காலமானார். அவருக்கு வயது 90. சிறுநீரக பாதிப்பு காரணமாக மும்பையில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த அவரது உயிர் இன்று (டிச.23) மாலை 6.30 மணியளவில் பிரிந்தது. அவரது மறைவுக்கு இந்திய திரையுலக பிரபலங்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

நடிகர் சிரஞ்சீவி: நம் நாட்டின் தலைசிறந்த திரைப்பட இயக்குநர்களில் ஒருவரும், சிறந்த அறிவுஜீவியுமான ஷியாம் பெனகல் மறைவு மிகுந்த வருத்தம் அளிக்கிறது. அவர் இந்தியாவின் மிகச்சிறந்த திறமைகளை கண்டுபிடித்து வெளிக்கொண்டு வந்தவர். அவரது திரைப்படங்கள், வாழ்க்கை வரலாறுகள் மற்றும் ஆவணப்படங்கள் ஆகியவை இந்தியாவின் மிகப்பெரிய கலாச்சார பொக்கிஷத்தின் ஒரு பகுதியாகும். சக ஹைதராபாத்வாசியும் மற்றும் மற்றும் முன்னாள் ராஜ்யசபா உறுப்பினருமான பெனகலின் தலைசிறந்த படைப்புகள் இந்திய சினிமாவில் எப்போதும் பெரும் மதிப்பிற்குரியதாக இருக்கும்.

இயக்குநர் சேகர் கபூர்: ‘புதிய அலை’ சினிமாவை உருவாக்கியவர். ‘அங்கூர்’, ‘மந்தன்’ உள்ளிட்ட ஏராளமான திரைப்படங்களின் மூலம் இந்திய சினிமாவின் திசையை மாற்றிய மனிதராக ஷியாம் பெனகல் எப்போதும் நினைவுகூரப்படுவார். ஷபானா ஆஸ்மி, ஸ்மிதா பாட்டீல் போன்ற சிறந்த நடிகர்களை உருவாக்கினார். போய்வாருங்கள் நண்பரே.

நடிகர் மனோஜ் பாஜ்பாய்: இந்தியத் திரையுலகுக்கு நெஞ்சை உலுக்கும் இழப்பு. ஷியாம் பெனகல் ஒரு ஆளுமை மட்டுமல்ல, அவர் கதைசொல்லலை மறுவரையறை செய்து தலைமுறைகளுக்கு ஊக்கமளித்த ஒரு தொலைநோக்கு பார்வையாளராகவும் இருந்தார். ’ஜூபைதா’ படத்தில் அவருடன் பணிபுரிந்தது எனக்கு ஒரு புதிய அனுபவமாக இருந்தது. அவருடைய தனித்துவமான கதைசொல்லல் பாணி நுணுக்கமான புரிதலை எனக்கு வழங்கியது. அவரது வழிகாட்டுதலின் கீழ் நான் கற்றுக்கொண்ட பாடங்களுக்கு நான் என்றென்றும் நன்றியுள்ளவனாக இருப்பேன். அவருடன் பணிபுரியும் வாய்ப்பு கிடைத்தது எனக்கு ஒரு பெரிய கவுரவம். அவர் சொன்ன கதைகளிலும் அவர் தொட்ட வாழ்க்கையிலும் அவரது மரபு வாழும். நிம்மதியாக உறங்குங்கள் ஷியாம் பாபு, ஓம் சாந்தி

யார் இந்த ஷியாம் பெனகல்? - உலகப் புகழ்பெற்ற இந்தி திரைப்பட இயக்குநர், திரைக்கதை எழுத்தாளரான ஷியாம் பெனகல் 1934 டிசம்பர் 14-ல் பிறந்தார். 12 வயதில் கேமராவை பயன்படுத்த தொடங்கினார். இந்திய சினிமாவின் திருப்புமுனையாக இவரது ‘அங்கூர்’ படம் அமைந்தது. 900-க்கும் மேற்பட்ட விளம்பர படங்கள் தயாரித்துள்ளார்.

புனே ஃபிலிம் அண்ட் டெலிவிஷன் இன்ஸ்டிடியுட் ஆஃப் இந்தியாவின் தலைவராக இருந்தார். ‘எ சைல்ட் ஆஃப் தி ஸ்ட்ரீட்ஸ்’, ‘ஜவஹர்லால் நேரு’, ‘சத்யஜித் ரே' உள்ளிட்ட இவரது ஆவணப்படம் பரவலான பாராட்டுகளைப் பெற்றது. பத்மஸ்ரீ, பத்மபூஷண், தாதா சாகேப் பால்கே விருது உள்ளிட்ட விருதுகளைப் பெற்றவர்.

இவரது அங்கூர், பூமிகா, ஜூனுன், அரோஹன், மந்தன் உள்ளிட்ட 7 படங்களுக்காக தேசிய விருதைப் பெற்றவர். 2012-ல் லண்டனில் உள்ள சவுத் ஏஷியன் சினிமா ஃபவுண்டேஷன் எக்ஸலன்ஸ்-ன் சினிமா விருது வழங்கி கவுரவித்தது. வங்கதேசத்தின் முதல் அதிபரான முஜிபுர் ரஹ்மான் வாழ்க்கை கதையை ‘முஜிப்: த மேக்கிங் ஆப் எ நேஷன்’ என்ற பெயரில் இவர் இயக்கிய படம் 2023-ல் வெளியாகி கவனத்தை ஈர்த்தது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x