Published : 16 Dec 2024 09:17 AM
Last Updated : 16 Dec 2024 09:17 AM
உலகப் புகழ்பெற்ற தபேலா மேதை ஜாகிர் உசேன் மறைவுக்கு மகாராஷ்டிரா ஆளுநர் சிபி ராதாகிருஷ்ணன், கேரள முதல்வர் பினராயி விஜயன் உள்ளிட்டோர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.
நுரையீரல் பிரச்சினை காரணமாக அமெரிக்காவின் சான்பிரான்ஸிஸ்கோவில் உள்ள மருத்துவமனையில் கடந்த இரண்டு வாரங்களாக சிகிச்சை பெற்றுவந்த ஜாகிர் உசேன் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார் என அவரது குடும்பத்தினர் அறிவித்துள்ளனர். இந்நிலையில், அவரது மறைவுக்கு அரசியல் தலைவர்கள், திரைப் பிரபலங்கள் எனப் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
மகாராஷ்டிரா ஆளுநர் சிபி ராதாகிருஷ்ணன் இரங்கல்: “ஜாகிரின் அசாதாரண திறமை அவரை பிரபலப்படுத்தியது. பாரம்பரிய இசைக் கலைஞர்களுக்கு மத்தியில் அவரை பளிச்சிடச் செய்து அவருக்கு பரந்துபட்ட ரசிகர்களை உருவாக்கியது. அவர் தன் ரசிகர்களை ஆழ்ந்த, அதேவேளையில் துள்ளலான, ஜனரஞ்சகமான இசைப் படைப்புகளால் கட்டிவைத்தார்.” என்று மகாராஷ்டிரா ஆளுநர் சிபி ராதாகிருஷ்ணன் தனது இரங்கல் குறிப்பில் குறிப்பிட்டுள்ளார்.
கேரள முதல்வர் பினராயி விஜயன்: “உஸ்தாத் ஜாகிர் உசேன் உலகம் முழுவதும் இந்திய இசையைக் கொண்டு செல்வதில் முக்கியப் பங்காற்றினார். இந்தியாவின் வளமான இசைப் பாரம்பரியத்தின் கலங்கரை விளக்கமாகத் திகழ்ந்தார். பாரம்பரிய இசையின் மெய்யான பாதுகாவலர். கலைக்கு அவர் அளித்த பங்களிப்பு ஈடு இணையற்றது. அவரது மறைவு கலாச்சாரத்துக்கும், மனிதத்துக்கும் பேரிழப்பு. அவரது அன்புக்குரியவர்களுக்கு ஆழ்ந்த இரங்கல்” எனத் தெரிவித்துள்ளார்.
நடிகர் கமல்ஹாசன்: “ஜாகிர் பாய்! வெகு சீக்கிரம் நம்மை விட்டுச் சென்றுவிட்டார். அவர் நமக்காக செலவழித்த நேரத்துக்காக, அவர் விட்டுச் சென்ற கலை வடிவத்துக்காக நன்றி. குட் பை.” என்று நடிகரும் மக்கள் நீதி மய்யக் கட்சியின் தலைவருமான கமல்ஹாசன் பதிவிட்டுள்ளார்.
சரத் பவார் இரங்கல்: முன்னாள் மத்திய அமைச்சரும், என்சிபி பவார் பிரிவின் தலைவருமான சரத் பவார் தனது இரங்கல் குறிப்பில், “புகழ்பெற்ற தபேலா கலைஞர் உஸ்தாத் ஜாகிர் உசேனின் மறைவுச் செய்தி என்னை உடைத்துவிட்டது. உலக அரங்கில் தபேலாவை இந்திய இசைவடிவமாகக் கொண்டு சேர்த்தவர். கலைத்துறையின் ஜாம்வான் மறைந்துவிட்டார்” என்று குறிப்பிட்டுள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT